மதுக்கடைகள் - இவை ஓன்று, இரண்டாகி, மூன்று, நான்காகி, ஐந்து என பெருகிக்கொண்டே வருவது மிகவும் வேதனையளிக்கக் கூடியது மட்டுமல்ல ஊரிலுள்ள குடும்பங்களையே அழிவின் பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
இப்படி குடும்பத்திற்கு சங்கு ஊதிடும் குடும்பக்கொல்லியாகிய மதுக்கடையொன்று கடந்து சில வாரங்களுக்கு முன்பு அதிரை - பட்டுக்கோட்டைச் சாலையில் உள்ள "அதிராம்பட்டினம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது" என்ற அறிவிப்பு எல்லை இடத்தில் அமைதியாக திறக்கப்பட்டு விற்பனை படுஜோராக நடந்து வருகின்றது.
இப்பகுதி அதிகளவில் வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய நெடுஞ்சாலைப்பகுதி மட்டுமல்ல அதன் அருகில் வழிபாட்டுத்தளம், துணை மின் நிலையம், விரைவில் திறக்கப்பட உள்ள தொழிற்கூடம், மருத்துவமனை, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இன்டென் காஸ் அலுவலகம், திருமண மண்டபம் ஆகியன எட்டிப்பார்க்கும் தூரத்தில் உள்ளது. அதோடு பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயில கடந்து செல்லுகின்ற பாதை என்பதும், இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாலை, மாலை நேரங்களில் "வாக்கிங்" "சைக்கிளிங்","ஜாக்கிங்" போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதும் உண்டு.
இப்பகுதியில் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு நமது அரசு மருத்துவமனையின் இரவு நேர சேவை மற்றும் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி நமதூரைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது அமைப்புகளின் கோரிக்கையாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வேளையில் அப்பகுதியில் குடும்பத்தையே அழித்துவிடக்கூடிய சமூகக்கொல்லி, குடும்பக்கொல்லி, உயிர்க்கொல்லியாகிய "மதுக்கடை"
ஆண்டுதோறும் விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது குறிப்பாக 2008-2009-ம் ஆண்டில் சாலை விபத்தில் 11 ஆயிரத்து 813 பேரும், 2009-2010-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 727 பேரும், 2010-2011-ம் ஆண்டில் 14 ஆயிரத்து 241 பேரும் கடந்த ஆண்டில் 14 ஆயிரத்து 359 பேரும் 2011-2012-ம் ஆண்டில் 15 ஆயிரத்து 422 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்கள். இதில் பெரும்பாலான விபத்துகள் போதையிலேயே நிகழ்ந்துள்ளது என்கிறது ஆய்வுகள்.
சமூக நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மதுவை ஒழிப்பது நம் ஒவ்வொருவரின் அவசியக் கடமையாகும். இதனால் ஏற்படும் சாலை விபத்துக்களையும், உயிரிழப்புக்களையும் தடுக்கும் நோக்குடன் தீவிர நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளூர் சமூக அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் தலையாயக் கடமையாக கருதப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேது பெருவழிச்சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிராக ஒன்று திரண்ட ஏரிபுறக்கரை கிராம பொதுமக்கள் மதுகடைக்கு எதிராக போராட்டம் நடத்தி தங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்றனர்.
பல்வேறு பிரிவினர் வசிக்கக்கூடிய இந்த சிறிய கிராமத்தில் ஒற்றுமையுடன் ஒன்றுகூடி மாபெரும் போராட்டம் நடத்தி வெற்றிகண்ட அவர்களால் மிகப்பெறும் மக்கள்தொகை கொண்ட நமது ஊரில் ஏன் அதே போல் செயல்பட முடியாது !?
எண்ணற்ற இயக்கங்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் ஏதாவது ஒன்றில் அங்கம் வகிக்கும் !? நம்மால் ஏன் முடியாது ?
அல்லது இப்படி ஒரு பிரச்சனை இருப்பது உள்ளூர் இயக்கங்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் போன்றவற்றிற்கு தெரியாமல் போய்விட்டதா !? அல்லது தெரிந்தும் 'நமக்கேன் வம்பு' !? என்று தங்களின் தலைமைக்கு எடுத்துச்செல்லாமல் அடக்கமாக இருந்துவிட்டனரா !?
மாபெரும் பொதுக்கூட்டம், பேரணி என்று சொல்லி மிகப்பிரமாண்டமாக போட்டி போட்டுக்கொண்டு நடத்தி தங்களின் வலிமைகளை பலப்படுத்திக்காட்ட !? நினைக்கும் அவர்களுக்கு இது போன்ற உள்ளூர் பிரச்சனைகள் கவனத்தில் இல்லாமல் இருப்பது பெறும் வேதனையே !
'நமக்கேன் வம்புன்னு' !? அவர்கள் ஒதுங்கக் காரணமென்ன !?
அவசியமான பதிவு.
ReplyDeleteபதிந்தமைக்கு நன்றி.
இதை இப்படியே விட்டு விட்டால் அரசியல் பிரமுகர்கள் ஆதரவோடு இன்னும் மதுக்கடைகள் வந்து கொண்டே தான் இருக்கும்.
சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அப்படி நடவடிக்கை எடுக்க ஊர் மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.