Latest News

இரண்டு லட்சம் பெண்குழந்தைகளைக் காணவில்லை! - கல்யாண்குமார்


முழுக்க ஒரு வருடத்தில் இருபது லட்சம் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இதில் ஐந்து லட்சம் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள்’ என்கிற அதிர்ச்சித் தகவலோடு ஆரம்.பிக்கிறார் ஜெனிதா. இவர் இந்தியாவில் ஊட்டியை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வரும்  Freedom firm  என்ற உலகம் தழுவிய அமைப்பின் பொறுப்பாளர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சிறுமிகளை மீட்டெடுத்து, அவர்களை பெற்றோருடன் சேர்த்து வைப்பது அல்லது கல்வி அறிவு கொடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.

‘பாட்னா, புனே, டெல்லி, நாக்பூர், சென்னை போன்ற இடங்களில் இதுமாதிரியான பாலியல் தொழில் விடுதிகள் இப்போது அதிக அளவில் இயங்குகின்றன. இதற்காகவே சில தரகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சிறுமிகளோடு பாலியல் உறவு வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2007லிருந்து செயல்படும் எங்கள் அமைப்பின் மூலம் இதுவரை சுமார் 250 சிறுமிகள் மீட்டெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்த்த சிறுமிகளும் உண்டு" என்கிறார் ஜெனிதா.

பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள்தான் இதுபோன்ற கடத்தலுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவள் பன்னிரெண்டு வயதாகும் கலைச்செல்வி. அப்பாவின் திடீர் மறைவால் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை. நோயாளியான அம்மாவுக்கும் வேலை பார்க்கத் தெம்பு இல்லாததால், சென்னையிலிருக்கும் தாய்மாமன் வீட்டில் கலையும் அவள் அம்மாவும் அடைக்கலம் புகுந்தார்கள். தாய்மாமன், கலையை அடுத்தவருடம் பள்ளிக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி, தன் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது மனைவி, இரண்டு பெண்குழந்தைகளின் துணிகளைத் துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, கடைகளுக்குப் போவது என்று அவள் வயதுக்கும் உடம்புக்கும் மீறிய வேலைகளைச் செய்யச் சொல்லி வற்புறுத்தப்பட்டாள் கலை. ஒருநாள் கடைக்குப்போன இடத்தில் தன்னிடம் மிகவும் வாஞ்சையோடு பேச்சுக் கொடுத்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியிடம்  தனது கஷ்டங்களையெல்லாம் சொல்லி அழுதாள் கலை.

தன்னோடு வந்தால் கலைக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக மூளைச் சலவை செய்த அந்தப் பெண்மணியை நம்பி அன்றே அவரோடு போனாள் கலை. இரண்டு நாட்கள் ஏதோ ஒரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்ட கலை, அடுத்த நாள் மும்பைக்கு இரண்டு தடியர்களின் துணையோடு ரயிலேற்றப்படுகிறாள். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, வழிமுழுக்க இருமல் மருந்து என்று போதை திரவத்தைக் குடிக்க வைத்து அவளை அரை  மயக்கத்திலேயே கொண்டு போயிருக்கிறார்கள். ரெட் லைட் ஏரியாவில் இரண்டு வருடங்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டதோடு, போதை வஸ்துகளுக்கும் அவள் அடிமையாக்கப்பட்டிருக்கிறாள். ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அங்கே ரெய்டு நடந்தபோது 14 வயதாகி இருக்கும் கலையும் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள். அந்தத் தொண்டு நிறுவனம் மருத்துவ சிகிச்சைகள் எல்லாம் கொடுத்தும் போதைப் பழக்கத்திலிருந்து மட்டும் அவளை மீட்க முடியவில்லை. அவள் சொன்ன விவரங்களை வைத்துக்கொண்டு அவளது அம்மாவைப் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.  தற்போது போதைப் பழக்கத்திலிருந்து விடுபட, சிறப்புச் சிகிச்சைக்காக புனேவிலிருக்கும் ஒரு சேவை இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறாள், கலை.

இந்தியாவில் 80 சதவிகிதப் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் இதற்குப் பெற்றோர்களின் கவனக்குறைவே காரணம். தெரியாத வெளி ஆட்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காப்பதற்காக தங்களுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் வசம் பெண் குழந்தைகளை கவனித்துக் கொள்ளச் சொல்லி ஒப்படைத்துவிட்டுப் போகிறார்கள். அவர்களில் சிலர்தான் இதுமாதிரியான வக்கிரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்" என்று ஓர் ஆவறிக்கையைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறார், மனநல நிபுணர் டாக்டர்.திருநாவுக்கரசு.

பாலியல் வக்கிரங்களுக்காக மட்டுமல்ல, பிச்சைஎடுக்கும் ‘தொழிலில்’ ஈடுபடுத்தவும் பெண்குழந்தைகள் விலை கொடுத்து வாங்கப்படுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வி என்ற பெண்மணி, ஏற்கெனவே தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதால், நவம்பர் 12ம்தேதி தனக்குப் பிறந்த பெண்குழந்தையை, ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, நூறு ரூபாய் அட்வான்ஸாக பெற்றுக்கொண்டு மூலக்கடையைச் சேர்ந்த முனியம்மா என்ற பெண்ணிடம் விற்ற கொடுமையும் நடந்திருக்கிறது. அதை வாங்கிய முனியம்மா, கோயம்பேடு பஸ் நிலையத்தில் அந்தக் குழந்தையைக் காட்டி பிச்சையெடுத்தபோது சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார். பிச்சையெடுக்க வைக்க அந்தக் குழந்தையை வாங்கியதையும் அவர் ஒப்புக்கொண்டதையடுத்து செல்வியும் முனியம்மாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தை, ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

குழந்தைப் பேறின்மையும் குழந்தைகள் வாங்கப்படுவதற்கு ஒரு காரணம். சென்னை எழும்பூர் மருத்துவமனையில் இரவெல்லாம் அழுதுகொண்டிருந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுத்து சமாதானப்படுத்துமாறு அதன் தாய் வற்புறுத்தப்பட்டார். ஆனால், குழந்தை அப்படிக் கதறிக் கொண்டிருக்கும்போதுகூட  பால் கொடுக்கத் தயங்கினார் அந்தப் பெண். சந்தேகப்பட்டு விசாரித்தபோது நவம்பர் மாதம் 6ம் தேதி பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அந்தக் குழந்தையை அவர் இன்னொருவரிடம் வாங்கியது தெரியவந்துள்ளது. இது குறித்து இப்போது அந்தக் குழந்தை கைமாறிய ஐந்து பேரிடம் விசாரணை நடந்துவருகிறது.

குழந்தைகளை விற்பது, வாங்குவது மட்டுமல்ல திருடவும்படுகின்றன. குழந்தையில்லாத சில பெண்கள் அதுமாதிரி திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.தாய்மை அடையத் தாமதமாகும் பெண்களை நாம் மனரீதியாகக் காயப்படுத்தி, அந்த நிலைக்கு அவர்களைத் துரத்துகிறோம் என்பதால் நாமும் ஒருவகையில் இதற்குக் காரணம்தான். தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக நீங்கள் அறிந்திருக்கக் கூடிய அசோக் ரத்தினம், தான் வாசித்த செய்தி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, ‘பொய்க்குடம்’  என்று ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறார்.  

நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு குழந்தைப்பேறு இல்லாத வருத்தத்தில் இருந்திருக்கிறார். உறவினர்கள் இவரை பல விதத்திலும் மனதை வருத்தி இருக்கிறார்கள். குழந்தையின்மையைக் காரணம் காட்டி, அவரது கணவருக்கு இரண்டாம் திருமணத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தனக்கு ஏற்பட்ட குறையை மறைக்கவும் தன் அன்புக் கணவனை விட்டுக்கொடுக்க மனமில்லாமலும், தான் கர்ப்பமடைந்திருப்பதாக அனைவரையும் நம்ப வைத்திருக்கிறார். பிரசவத்திற்கான நாள் நெருங்க நெருங்க ஒருவித தவிப்பிலேயே இருந்தவர், ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கிருக்கும் பிறந்த குழந்தை ஒன்றை திருடப் போன போது கையும் களவுமாகப் பிடிபட்டு பொதுமக்களிடம் அடிபட்டிருக்கிறார். ‘உறவினர்களின் கொடுமையான வார்த்தைகளே என்னை இந்தக் காரியம் செய்யத் தூண்டியது’ என்று அழுதிருக்கிறார் அந்தப் பெண்மணி. இந்தச் சம்பவத்தையே தன் ‘பொய்க்குடம்’ என்ற குறும்படத்திற்கான மையக் கருத்தாகக் கொண்டிருக்கிறார் அசோக் ரத்தினம். அவரது திருட்டுக்குக் காரணம், அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவரை நடத்திய விதம்தான். அதனால், தாய்மை அடைய தாமதமாகும் பெண்களை யாரும் காயப்படுத்தாதீர்கள் என்ற கருத்தை வலியுறுத்தவே, நானே அறுபதாயிரம் ரூபாய் செலவுசெய்து, ‘பொய்க்குடம்’ என்ற இந்தக் குறும்படத்தை எடுத்தேன்" என்கிறார் அசோக் ரத்தினம்.

பிறந்த சிறு குழந்தைகளின் நிலைமை இப்படியென்றால், கருவிலேயே அது பெண் குழந்தை என்றால் கலைத்துவிடும் அவலமும் கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிக அளவில் அதிகரித்திருக்கிறது" என்கிறார், CASSA (campaign against sex selective abortion) என்ற அமைப்பின் மையக்குழு உறுப்பினர் ஜீவா. மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து நாங்கள் நடத்திய ஆய்வில், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் இயற்கையின் நியதிப்படி 1,000 ஆண்குழந்தைகளுக்கு 952 பெண்குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால், 17 மாவட்டங்களில் 952க்கும் குறைவான பெண் குழந்தைகளே உள்ளன" என்கிறார்.

பெண்குழந்தைகளை கருவில் கொலை செய்வதோடு, ஒரு வயதுக்குள் இறக்கும் பெண்குழந்தைகள் மற்றும் காணாமல் போகும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். இந்திய அளவில் இது 33 லட்சமாக உயர்ந்திருக்கிறது" என்கிறார் ஜீவா.

பெண்குழந்தைகளுக்கெதிரான குற்றச் செயல்களைத் தடுக்க, அரசு சார்பில் எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன?

பிச்சையெடுக்க தங்கள் பெண் குழந்தைகளையே ஈடுபடுத்தும் அம்மாவையோ, அப்பாவையோ அதற்கென உருவாக்கப்பட்ட யூனிஃபார்ம் அணியாத போலீஸ் படை ( J.A.P.U. ) பிடித்துக் கொண்டு எங்களிடம் வருவார்கள். அந்தப் பெற்றோருக்கு கவுன்சலிங் கொடுத்து, பிள்ளைகளை நாங்கள் படிக்க வைக்கிறோம் என்ற உறுதிமொழி கொடுத்து அந்தச் சிறுமிகளை தமிழக அரசே நடத்தும் புரசைவாக்கத்தில் இருக்கும் குழந்தைகள் நலக் குழும இல்லத்தில் (C.W.C.) சேர்த்து கவனித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு படிப்போடு தொழில் கல்வியும் கற்றுக் கொடுத்து, வேலையும் வாங்கிக் கொடுத்து வருகிறோம். சில தனியார் நிறுவனங்களும் எங்களுக்கு உதவுவதால் இங்கிருந்து போன இரண்டு குழந்தைகள், தற்போது மருத்துவம்  மற்றும் விஸ்காம் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்" என்கிறார், இந்தக் குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவர் ஆக்னஸ் சாந்தி. இவர் ஒரு மனநல ஆலோசகரும் கூட.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் எங்கள் குழுமத்தில் பராமரிக்கப்படுகிறார்கள். தங்களின் பெற்றோர், ஊர் குறித்த விவங்களைச் சரியாகச்  சொல்ல முடியாதபோது அவர்கள் கூறும் ஏதாவது சின்னத் தகவல்களையாவது பெற்று, கூகுள் மேப் மூலமாகவும் இந்தியா முழுக்க இருக்கும் ஃபேஸ்புக் நண்பர்கள் மூலமாகவும் முயற்சித்து, அவர்களைப் பெற்றோரிடம் சேர்த்து வைக்கிறோம்" என்கிறார், ஆக்னஸ் சாந்தி.

நாம் என்ன செய்ய முடியும்?

ஏதாவது பொருள் வாங்கவோ அல்லது பள்ளிக்கே செல்லும் சிறு குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டு விலாசத்தையோ, செல்போன் நம்பரையோ மனப்பாடம் செவித்தோ அல்லது அதை அவர்களது பாக்கெட்டில் எழுதி வைப்பதையோ பெற்றோர் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வழி தெரியாமல் தவிக்கும் சில குழந்தைகள், உடனடியாக பெற்றோரைச் சேரும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.

ஏழ்மை நிலையின் காரணமாக வீட்டு வேலைகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், அழைத்துச் செல்பவர்கள் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு அனுப்ப வேண்டும். மாதம் ஒருமுறையாவது அந்தச் சிறுமியைச் சந்தித்து, அவளுக்கு இருக்கும் சங்கடங்களை வெளிப்படையாகப் பேசச் சொல்லி கேட்க வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்  Freedom firm அமைப்பின் பொறுப்பாளர் ஜெனிதா.

மீடியாக்களும் குழந்தைகள் காணாமல் போவதை கட்டணமில்லாத ஒரு சேவையாகவே எடுத்துகொண்டு அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் இலவசமாக வெளியிட வேண்டும். அதன் மூலம் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சேர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்: வழக்கு எண் 18/9" என்ற படத்தில் எங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் பால மந்திர் இல்லத்தில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அதில் காட்டப்பட்ட ஒரு குழந்தையை படத்தில் பார்த்த ஈரோட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி, அது சில வருடங்களுக்கு முன் காணாமல் போன எங்களது குழந்தை என்று தேடி இங்கே வந்தார்கள். தகுந்த ஆதாரங்களை சரிபார்த்த பின்னர், அந்தக் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தோம்" என்கிறார், குழந்தைகள் நலக் குழுமத்தின் கமிட்டி உறுப்பினராகவும் பரிசு டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான கல்வி அமைப்பை நடத்தும் ஷீலா சார்லஸ் மோகன்.

பெண் குழந்தைகளின் புன்னகையைத் திருடி, அதற்கும்கூட ஒரு விலையை நிர்ணயிக்கும் கல் நெஞ்சுக்காரர்களை மன்னிக்கவே கூடாது. கடுமையான தண்டனைகள் வேண்டும்.

நன்றி: புதிய தலைமுறை

1 comment:

  1. This web site really has all of the info I wanted about this subject
    and didn't know who to ask.

    Stop by my web blog cellulite treatment cream

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.