கத்தியின்றி,இரத்தமின்றி,சப்தமின்றி
எங்கள் உயிரை பணயம் வைத்து அல்ல....
எங்கள் ஆன்மாக்களை,உணர்ச்சிகளை பணயம் வைத்து .....
எங்கள் ஆசைகளை பூட்டி வைத்து.....யுத்தம் செய்கிறோம்....
எங்களுடைய நோக்கம்தான் என்ன....????!!!
ஸ்டவ் வெடித்த உயிரை நீத்த எங்கள் முந்தைய
தலைமுறைப்பெண்களுக்கும்,
இப்போரில் கலந்துகொண்டு பாதியில்
வெளியேறிய எம் சகோதரிகளுக்கும்,தோழிகளுக்கும் ஏற்பட்ட நிலை.....
மகளுக்கு திருமணம் செய்ய கடன் வாங்கி,லோன்
போட்டு பதினைந்து வருடத்திற்கு மேல் கடனாளியாக
இருக்கும் எங்களின் அத்தா,அம்மாவின் நிலை
இனிவரும் காலங்களில் அடுத்த தலைமுறை சமுதாயத்திற்கும்
வரக்கூடாது என்பதற்காக வயது முப்பதை நோக்கி சென்றாலும்
எம் உள்ளம் அழும் அழுகையை வரட்டு சிரிப்பால் மறைத்து
அல்லாஹ்விடம் மட்டும் சொல்லி கதறி அழும் அமைதிப்போராளிகள்...
வரதட்சணைக்கு எதிரான போரில் கலந்துகொண்ட ஜிஹாதிகள்...
இப்போரின் எதிராளியின் தாக்குதலுக்கு பதிலடி
கொடுக்காமல்சென்ற பாதியில் புற முதுகு காட்டிச்சென்ற
எம்தோழிகளின் பிள்ளைகள் பருவமடைந்துவிட்டார்கள்...
ஆம்....நாங்கள் இன்னும் கன்னிப்பெண்கள்...
பணத்திற்காக ஆசைப்படும் பேடியின் இச்சைக்கு
அடிபணிய பிறந்தவர்கள் அல்ல நாங்கள்.....
எங்களின் போர் திட்டமிடப்பட்டது அல்ல....
எங்களுக்கென்று தனிக்குழுவோ,அமைப்போ இல்லை....
எங்களுக்கென்று தனிக்கொடியோ,தலைவியோ இல்லை....
அல்லாஹ்வின் வார்த்தைகளை மெய்பிக்க
வரதட்சணையின் கோரமுகத்தை கிழித்து எறிய...
எம் உணர்ச்சிகளை சீதனம் என்னும்
முள் பாதையில் போட்டு....
தக்வா என்னும் ஆடை உடுத்தி,
தவக்கல் என்னும் வாளை ஏந்தி போரிடும்.....
நவீன சஃபியாக்கள் நாங்கள்....
(நபி ஸல் அவர்களின் மாமி சஃபியா ரலி அன்ஹூ அவர்கள்
ஹந்தக் போரில் வேவு பார்க்க வந்த யூத ஒற்றனின் தலையை
கொய்து அவர்களின் கூடாரத்தில் சென்று எறிந்த வீரப்பெண்மணி)
குமரு காரியத்திற்காக ஜும் ஆ அன்று வசூல் செய்ய வரும்
எங்கள்அத்தாமார்களுக்கு உதவி பிச்சை காசு போடசொல்லும்...
ஜமாத்தார்களே....முத்தவல்லிகளே...ஆலிம்களே...
உங்கள் ஜமாத்திலும் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜமாத்துகளிலும்...
இந்த வரதட்சணை புற்றுநோயை நுனி முதல் அடி வரை
விரட்டி...மஹர் கொடுத்துதான் திருமணம் செய்ய வேண்டும் என
ஜும் ஆ மேடைகளில் கட்டளை போடலாமே......
குர் ஆன்,ஹதீஸ் செயல்பாட்டிற்காக
ஊர் விலக்கம் செய்யும் ஜமாத்தார்கள்....
வரதட்சணையை கேட்கும் குடும்பத்தாரை ஊர் விலக்கம் செய்யலாமே....
அல்லாஹ்வின் பள்ளியை நிர்வகிக்கும் நீங்கள் கண்டும்,காணாமலும்
கல்யாணத்திற்கு மட்டும் தப்தர் கொடுத்து எனக்கு தெரியாது
என விலகிக் கொள்ள முடியாது....
அல்லாஹ்வின் சாபத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்...
மறுமையில் உங்களை எல்லாம் முஃப்லீஸ்
ஆக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்......
“உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை
எந்த குற்றத்திற்காக கொல்லப்பட்டது என
வினவப்படும்போது’’
அல்குர் ஆன் 81:8
இந்த பெண் குழந்தைகளை விசாரிக்கும்போது
அல்லாஹ் எங்களையும் விசாரிப்பான்...
ஆம்...அந்தக்குழந்தைகள் கொல்லப்பட்டதின் காரணம்
இதே வரதட்சணையால்தான்....
நாங்களும் சாட்சி சொல்லுவோம்...
உங்கள் அனைவரின் முகத்திரையை கிழிப்போம்....
கீழக்கரையிலும்,காயல்பட்டினம்,காரைக்கால்,நாகூரில்
பெண்ணோடு வீடும் கேட்கும் பேடிகளுக்கு எங்களின் எச்சரிக்கை....
லெப்பைகுடிகாட்டில் பெண் வீட்டாரிடம் வாங்கித்தின்றே
அழிக்கும் கேடிகளுக்கு எங்களின் எச்சரிக்கை...
மார்க்கம் தெரிந்த பின்னரும் இன்னும் மாமியார் கொடுத்த வீட்டில் இருக்கும்
ஆண்களுக்கு எடுத்துச் சொல்ல ஆள் இல்லையா...?
மாமனாரின் வீட்டில் இருக்கும் உங்கள் கல்மனசு உறுத்தவில்லையோ...??
மற்ற ஊர்களில் இப்பொழுதெல்லாம் நேரடியாக அல்லாமல்
மறைமுகமாக தட்சணை பிச்சை கேட்கும்
விலைமகனைப் பெற்றெடுத்த பணவெறி கொண்ட
தாய்மார்களுக்கு எங்களின் எச்சரிக்கை....
வரதட்சணை திருமணம் என்று தெரிந்தும் சாப்பிட செல்லும்
திருடுவதை பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு
சக மனிதருக்கும் எச்சரிக்கை...
(நீங்க திருடுங்க...ஆனால்,பார்த்துக்கொண்டிருப்பேன்
என நினைப்பவர்கள்)
ஒவ்வொருவரும் உங்களின் எதிர்ப்பை எப்படித்தான்
பதிவு செய்யப்போகிறீர்கள்...
பிரியாணி சாப்பிட்டுவிட்டு...
வரதட்சணை வாங்காதீங்க...
பாவம் என்று சொல்லப்போகிறீர்களோ...???
எத்தனை காலம் தான் காத்துக்கொண்டிருப்பது....
வரதட்சணை கொடுத்தாவது கல்யாணம் பண்ணு...
நீ நினைக்கிற மாப்பிள்ளையை செய்யத்தான் சொல்லணும் என்று
அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லும் அட்வைஸ் அம்மணிகளுக்கும்,
அப்புகளுக்கும் எங்களின் கடுமையான எச்சரிக்கை....
அல்லாஹ்விற்காக ஹராமை தடுத்துக்கொண்டால்
ஏற்படும் ஈமானின் ருசியை நீங்கள் சுவைத்துள்ளீர்களா...??
அறிந்திருந்தால் இந்த அட்வைஸ் உங்கள் வாயில் வந்திருக்காது....!!!
நம் வாழ்நாளில் ஒரு சமூகத்தீமையை
எதிர்க்கக்கூடதிராணி இல்லையென்றால்
வாழும் வாழ்க்கையே அர்த்தமற்றது....
பைக்,கார்,நாத்தனார் மோதிரம்,இடியாப்ப மாவு,பேங்கில்
பணம் டெபாசிட் போட சொல்லும் நவீன மோடிகளுக்கு ஒரு எச்சரிக்கை....
ஆம்...பெண் வீட்டில் வாங்கித்தின்னும் சாக்கில் எம் குலப்
பெண்களை கண்ணீர் சிந்த வைத்து,சொத்துகளை சூறையாடும்
கருவறுக்கும் ஒவ்வொரு ஆணும் மோடியே....
குஜராத்தில் கருவறுத்த மோடிக்கு அல்லாஹ் என்றால் யாரென்று தெரியாது...
ஆனால்,படைத்தவனை நம்பும் முஸ்லிம்கள் ஹராம்
என்று தெரிந்து கொண்டு கைக்கூலி வாங்கினால் அவனும் மோடியே...!!!
மாமியார் வீட்டில் வாங்கித்தின்றது
உறுத்தாமல் இருக்கும்
ஒவ்வொரு ஆணும் பேடி...
அவனே மிகவும் மோசமான மோடி....
இத்தீமையைக்கண்டு உங்களின் உள்ளம்
எல்லாம் உறுத்தவில்லையா....?
எங்களின் ஆன்மாக்கள்,உணர்ச்சிகள் கருகும் வாடை
உங்கள் மூக்கை துழைக்கவில்லையா...???
எல்லாப்பெண்களைப்போல் எங்களுக்கு ஆசைகள் உண்டு...
ஆனால்,எங்களின் மலரினும் மெல்லிய உணர்ச்சிகளை
கசக்கி எறிந்துவிட்டுதான் இப்போரில் கலந்து கொண்டுள்ளோம்...
உங்களுக்கு..உடன் பிறந்த ஒரு முதிர்கன்னி தங்கையோ,
இல்லை அக்காவோ....உங்களுக்கு இருந்தால்...
தெரியும் எங்களின் அருமை,நிலைமை....
மாப்பிள்ளை தேடி அலையும்
ஒவ்வொரு அண்ணன்மார்களையும்,அக்காமார்களையும்
அத்தாக்களையும்,அம்மாக்களையும் கேளுங்கள்..
இவ்வரதட்சணை சந்தை எவ்வளவு கொடூரமானது என்று....
எங்களை பலியாடுகளாக்கி இரத்தத்தை உறிஞ்ச காத்திருக்கும்
ஓநாய்களுக்கு தயவு செய்து துணை போகாதீர்கள்...
எங்கள் தெரு பெண்கள் எல்லாம் வரதட்சணை சந்தையில்
விலை போகிக்கொண்டிருக்க நாங்கள் மட்டும் வழி மேல் விழி
வைத்து அமைதியாக உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறோம்....
இப்படிப்பட்ட சமுதாயத்தில் தனக்கும் திருமணம் நடக்குமா
என்று ஏங்கிய கன்னிப்பெண்களின் உள்ளக்குமுறல்கள் தான்
உங்களுக்கு தெரியுமா...??
எத்தனை பாத்திமாக்கள்,
எத்தனை சுமையாக்கள்,
எத்தனை தாஹிராக்கள்,
எத்தனை பெனாசிர்கள்,
எத்தனை ரிஹானாக்கள்.....
குர் ஆன்,ஹதீஸை மட்டும் பின்பற்றும்
மாப்பிள்ளைக்கு காத்திருக்கிறார்கள் தெரியுமா.....????
இதற்கு தீர்வு காண ஒவ்வொரு
ஜமாத்தும் முயற்சி செய்யவில்லையெனில்,
மறுமையில் இதற்கு காரணமான அனைவரையும்
முஃப்லீஸ் ஆக்குவதற்கு எங்கள் பாத்திமாக்களும்,
தாஹிராக்களும்,சுமையாக்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்....
“சிலருடைய குற்றங்களின் காரணமாக,குற்றம் செய்யாதவர்களை அல்லாஹ் வேதனை செய்வதில்லை.ஆயினும்,அவனுக்கு வழிப்பட்டு நடப்போர்,குற்றம் புரிவோரை தடுப்பதற்கு சக்தி இருந்தும் தடுக்கவில்லையென்றால்,நல்லோர்,தீயோர் அனைவரையும்
வேதனை செய்வான்''.
தப்ரானீ-528
இந்த சமுதாயத்தீமையை வேரோடும்,வேரடி மண்ணோடும்
பிடுங்கி எறிய அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக...
ஆமின்....
கொடுக்க மாட்டோம்...கொடுக்க மாட்டோம்...
வரதட்சணை கொடுக்க மாட்டோம்...
கேட்காதே....கேட்காதே....
பிச்சை காசு கேட்காதே....
No comments:
Post a Comment