Latest News

அதிரையில் என்னை அதிர்ச்சியடைய செய்த இரண்டு !!!




 அதிர்ச்சி 1 :
நமதூரில் மீன் மார்க்கெட்டுக்கு செல்லாதவர்களே இருக்க மாட்டார்கள் காரணம் அங்கே ப்ரஸ்ஸாக கிடைக்கிற மீன்கள், இறால், நண்டு, கணவாய் போன்ற கடல் சார்ந்த உணவுப்பொருட்கள். இவைகள் உணவுப்பொருட்களாக மட்டும் நமக்கு பயன் தரவில்லை என்றாலும், ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு மருத்துவ குணமுடையவை உதாரணமாக பிரசவம் ஆன தாய்மார்களுக்கு கூடுதலாக பால் சுரக்க கத்தாழை மீனை வழக்கமாகக் கொடுப்பதை நாம் அறிந்திருப்போம்.

வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மீன் ஆணம் சோத்தை சாப்பிடாத அதிரையர்கள் உண்டா ? என கேட்குமளவுக்கு இதன் ருசி அனைவரையும் சுண்டி இழுத்து விடுகிறது. வித வித பெயரைக் கொண்ட ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு ருசியைக் கொண்டது. இதனாலே எனக்கு மீன் மார்க்கெட் சென்று மீன் வாங்கி வருவது பிரியம் என்றாலும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளேன்.

இன்று காலை மீன் மார்கெட்டுக்கு சென்ற எனக்கு மீன் வரத்து சற்று அதிகமாக இருந்தததைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் எல்லா வகை மீன்களும் மார்க்கெட்டில் ஆங்காங்கே கொட்டி குமித்து வைத்துருந்தனர். ஆஹா இன்னிக்கி விலை சல்லிசா கிடைக்கும் பாருங்கன்னு அருகில் நின்ற ஜபருல்லாஹ் காக்காகிட்டே சொன்னேன். நீ ஒரு ஆளுப்பா, பாடு குறைவா இருந்தாலும் சரி...இல்லே கூடுதலா இருந்தாலும் சரி.... ‘விலையை மட்டும் குறைக்க மாட்டானுங்க’ என என் காதில் முணுமுணுக்க..

எனக்கு பிடித்த மீன்களை தேர்வு செய்து என்னப்பா விலை ? ன்னு கேட்டா ஜபருல்லாஹ் காக்கா கூறியது போல நமக்கு அதிர்ச்சியை தந்தது அவர் கூறிய விலை !

விலை உயரக் காரணமென்ன ?
தன் உயிரை பணயம் வைத்து இராப் பகலா கடலில் மிதந்து மீன்களைப்பிடித்து கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் வரை கஷ்டமாக இருந்தாலும், அவைகள் இரண்டு மூன்று கைகள் மாறி சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றவற்றை இறுதியில் அதிக விலை கொடுத்து சுவைப்பது நாமாகவே உள்ளோம் என்பதை மறுக்க இயலா விட்டாலும், விற்பனையாளர்களின் அன்றாட வாழ்வாதாரங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் அவர்களின் பொழுதுகள் பெரும் சிரமத்துடனே ஒவ்வொரு நாளும் கழிகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களுடையே தீய பழக்கங்களாகிய ‘மது அருந்துதல்’, ‘வட்டிக்கு பணம் வாங்குதல்’ போன்றவற்றை நிறுத்திவிட்டால் அதிகரித்துவிட்ட மீன் விலையை மட்டுமல்ல அவர்களின் ஏழ்மை நிலையையும் தவிர்க்கலாம்.

 அதிர்ச்சி 2 :
இன்றைய அதிரையில் முட்டையை விநியோகம் செய்யும் லாரியிலிருந்து மட்டையை கொண்டு சேர்க்கும் ட்ராக்டர் வரை செல்லாத பாதைகளே இல்லை என்று சொல்லுமளவுக்கு பரப்பரப்பான சாலைகளாக உள்ளன. இதனாலே என் வீட்டிற்கு செல்வதற்காக இன்று சந்துப் பாதையை பயன்படுத்தித்தான் பார்ப்போமே என நினைத்து அவ்வழியே சென்றேன்.

ப்ளீஸ் என் மீது கையை வச்சிடாதிங்கோ ! நான் கீழே சாய்ந்துடுவேன் என்று சொல்லுமளவுக்கு உள்ளது இம்மின்கம்பத்தின் நிலை [ எண் TP 736, கீழத்தெரு ]   வயதானவர்கள் முதல் சிறுவர் சிறுமிகள் வரை கடந்து செல்லக்கூடிய குறுகிய பாதை மட்டுமல்ல இப்பதிவை தளத்தில் பதியும் போது குடியிருப்பு வீட்டின் மீது விழுந்து சாய்ந்து விட்டன என்ற செய்தி நம் காதிற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மின் கம்பத்தின் பாதுகாப்பிற்காக கம்பு ஒன்றை முட்டு வைத்துள்ளதைக் கண்டவுடன் எனக்கு கிச்சு கிச்சு மூட்டாமலே சிரிப்பை வரவழைத்து விட்டது.

அதிரையை மிரட்டும் மின்வெட்டால் ஊழியர்களின் பிஸியான வேலைகள் சற்று குறைத்துவிட்ட போதிலும் அவர்களுக்குரிய போதிய நேரமிருந்தும் இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட காரணமென்ன ?

அல்லது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அலட்சியப் போக்கால் மின்சார வாரியத்தின் கவனத்திற்கு எடுத்துச்செல்லாமல் இருந்துவிட்டனரா ?

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.