லக்னோ: டெல்லி-லக்னோ இடையிலான ரயிலில் பெண் அதிகாரி ஒருவரை தாக்கி, மானபங்கம் செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநில தலைமை செயலகத்தில் தொழிற்நுட்ப கல்வி வாரியத்தின் சிறப்பு செயலாளராக இருப்பவர் ஷசிபூசன் லால் சுனில். டெல்லியில் இருந்து லக்னோ செல்லும் லக்னோ மெயில் ரயிலில் இவர் பயணித்துள்ளார். அதே ரயிலில் கூகுள் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் பெண் நிர்வாகி ஒருவர், அவரது மகளுடன் பயணித்துள்ளார்.
இருவரும் இன்று காலையில் சர்பாக் ரயில் நிலையத்தில் வந்திறங்கினர். அதன்பிறகு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷசிபூசன் மீது ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் ரயிலில் தன்னுடன் பயணித்த ஷசிபூசன் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், மானபங்கப்படுத்த முயன்றதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெண் அதிகாரி அளித்த புகாரில கூறியிருப்பதாவது,
ரயில் பயணத்தில் இரவு முழுவதும் ஐஏஎஸ் அதிகாரி தொந்தரவு செய்து கொண்டே இருந்தார். மேலும் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். காலையில் நான் ரயிலில் உள்ள கழிப்பறைக்கு சென்ற போது, ஐஏஎஸ் அதிகாரி எனது மகளை மானபங்கம் செய்ய முயன்றார்.
இது குறித்து எனக்கு தெரியவந்ததும், நான் ரயில் போலீசாரிடம் புகார் அளிக்க முயன்றேன். மேலும் நடந்த சம்பவங்கள் குறித்து எனது குடும்ப நபர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தேன். அதில் பயந்து போன ஐஏஎஸ் அதிகாரி, தன் மீதான புகாரை வாபஸ் பெறுமாறு கேட்டு, எனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆனால் நான் சம்மதிக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
புகார் அளிக்கப்பட்ட பிறகு, ரயில்வே போலீசாரும், ஐஏஎஸ் அதிகாரியும், அந்த புகாரை திரும்ப பெறுமாறு கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு பெண் அதிகாரி ஒத்து கொள்ள மறுத்தார்.
இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து 4 மணிநேரம் விசாரித்த ரயில்வே போலீசார், ஷசிபூசனை இன்று காலையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை ஐஏஎஸ் அதிகாரி ஷசிபூசன் மறுத்துள்ளார்.
இது குறித்து கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கூறியதாவது,
ரயிலில் லக்கேஜ் வைப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் தான் இந்த பிரச்சனையின் துவக்கம். இதில் எனது ஜாதிப்பெயரை கூறி, அந்த பெண் திட்டினார். நான் அவரை மனபங்கம் செய்ய முயன்றதாக அளிக்கப்பட்டுள்ள புகார் பொய்யானது என்றார்.
ஐஏஎஸ் அதிகாரியின் மீது இந்திய குற்றவியல் சட்டம் 354 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபாரதமும் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment