திருப்பூர்: 6 ஆண்டுகள் காதலித்த பிறகு பிரிந்து சென்ற காதலியின் மீது ஆத்திரமடைந்த காதலன், அவரை கத்திரிக்கோலால் தாக்கி கொலை செய்ய முயன்றார். மேலும் காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சென்னிமலை நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயமுருகன்(24). பட்டதாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி(24) என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் காதலை வளர்த்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
ஆனால் கிருஷ்ணவேணியை மீண்டும் காதலை ஏற்குமாறு ஜெயமுருகன் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். இந்த நிலையில் காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள களிமேட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கிருஷ்ணவேணி நேற்று வேலைக்கு சேர்ந்தார்.
இதையறிந்த ஜெயமுருகன் அங்கு சென்று கிருஷ்ணவேணி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போதும் ஜெயமுருகனின் கோரிக்கைக்கை ஏற்க கிருஷ்ணவேணி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜெயமுருகன், மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோல் மூலம் கிருஷ்ணவேணியை சரமாரியாக குத்தினார். இதில் கிருஷ்ணவேணி முகம், கழுத்து உட்பட உடலின் பல இடங்களில் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், ஜெயமுருகனை தடுத்து நிறுத்தி படுகாயமடைந்த கிருஷ்ணவேணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயமுருகனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து ஜெயமுருகனிடம் போலீசார் விசாரித்து கொண்டிருந்த போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உடனடியாக காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே விஷம் குடித்திருந்தது தெரியவந்தது.
அதன்பிறகு காயமடைந்த கிருஷ்ணவேணியும், ஜெயமுருகனும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஜெயமுருகனின் உடல்நிலை தேறியது. இதனால் அவரை கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கிருஷ்ணவேணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment