கொழும்பு: இலங்கையில் சமீப காலமாகப் பௌத்த பிக்குமார்களின் தலைமையில் முஸ்லிம் பள்ளிவாசல்களைத் தகர்க்கவும், மூடவும் கோரிப் போராடும் இனத் தீவிரவாதப் போக்கு பரவலடைந்து வருகின்றது.
இதற்குமுன்னர், சிங்கள பௌத்த இனவாதப் பிக்குமாரின் தலைமையில் அனுராதபுரம், தம்புள்ளை, குருணாகல், தெகிவளை முதலான பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் பள்ளிவாயில்களைத் தகர்ப்பதிலும், அமைவிடத்தை மாற்றுவதிலும், நிரந்தரமாக மூடச் செய்வதிலுமாக தீவிர முன்னெடுப்புக்கள் பல இடம்பெற்றுள்ளன. தற்போது அந்த வரிசையில் ராஜகிரிய, ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசல் தீவிர பௌத்த இனவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை (03.08.2012) கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைத் தலைவர் தலைமையில் வெலிக்கடையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் மஸ்ஜிதின் இருப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெளத்த பிக்குமார்கள் தலைமையிலான குழு, ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசல் நிர்வாகக் குழு, முஸ்லிம் அரசியல்வாதிகள், ஜம்இயதுல் உலமாவின் பிரதிநிதிகள் ஆகிய பல தரப்பினரும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி விசேட கூட்டத்தில் பெளத்த பிக்குமார்கள் தலைமையிலான குழு, "ராஜகிரிய பள்ளிவாசலை உடனடியாக மூடவேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், கொழும்புப் பிராந்தியப் பொறுப்பாளரான பிரதிக் காவல்துறைத் தலைவர், "இந்த மாதம் முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம். எனவே, அவர்களின் எந்த வணக்க வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. பள்ளிவாயிலை மூடுவதும் சாத்தியமில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரதிக் காவல்துறைத் தலைவரின் மறுப்பை ஏற்க மறுத்த சிங்கள பெளத்த இனவாதப் பிக்குமார் குழு, தனது வேண்டுகோளை தொடர்ந்தும் அழுத்தமாக முன்வைக்கத் தயங்கவில்லை. "குறித்த பள்ளிவாசல் தொடர்பாக இதுவரை காவல்துறையில் எந்தவொரு முறைப்பாடும் பதியப்படவில்லை. மேற்படி ராஜகிரிய முஸ்லிம் பள்ளிவாசலின் இருப்பு எந்த வகையிலும் பிற சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு இடையூறாக இல்லாத நிலையில், அதனை மூடச்செய்ய முடியாது; அது தொடர்ந்து இயங்கும்" என்று மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார்.
மேலும், "முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் முடிந்த பின் இப்பிரச்சினை குறித்து விரிவாக ஆராயப்படும்" என்றும் அவர் பிக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை உலமா சபையின் துணைச் செயலாளர் தாஸீம் மௌலவி குறிப்பிடும்போது, "நாங்கள் காவல்துறையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் பள்ளிவாயிலைத் திறந்து தொழுகை நடத்தினோம் . அதற்கு ஒரு குழுவினர் எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருந்தனர். அங்கு வருபவர்களை எல்லாம் படம் பிடித்துகொண்டும் இருந்தனர். குறித்த பள்ளிவாயில் சகலவித சட்ட ஆவணங்களையும் கொண்டுள்ளது. அது சட்டப்படியே இயங்குகிறது; வக்பு சபையிலும் பதிவு செய்யப்பட்டு அந்த பள்ளிவாயிலின் நிர்வாகிகள் கூட வக்பு சபையில் தங்களைப் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளார்கள். பள்ளிவாயில் தொடர்ந்தும் அங்கு இயங்கும். அதற்குக் காவல்துறையினர் முழு ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். நோன்பின் பின்னரும் எந்த தடைகளும் இன்றி இன்ஷா அல்லாஹ் மேற்படி பள்ளிவாயில் இயங்கும். இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை ஜம்இயதுல் உலமாவின் விசேட குழு ஆராய்ந்து வருகிறது. எதிர்காலத்திலும் எந்தவிதச் சிக்கலும் இன்றி பள்ளிவாயில் தொடர்ந்தும் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, "சிங்கள பௌத்த மக்கள் பரவலாக வாழும் பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருபவர்களுக்கு எதிராக இதுவரை அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்தும் மயான அமைதி காப்பது ஏன்?" என இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கியக் தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி : www.inneram.com
No comments:
Post a Comment