அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளது குறித்து கருத்து கூறிய காங்கிரஸ் கட்சி அன்னா ஹசாரேவின் அரசியல் ஆசை அம்பலத்துக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அன்னா ஹசாரே மத்திய அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். மத்திய அரசு இதனை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் லோக்பால் சட்டம் நிறைவேற்றக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து கடந்த 9 நாள்களாக ஹசாரே குழுவினர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
வழக்கம்போலவே மத்திய அரசு இந்தப் போராட்டத்தையும் கண்டுகொள்ளவில்லை. உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, நாளை மாலையுடன் உண்ணாவிரதம் முடித்துக் கொள்ளப்படும் என்றும் மாற்று அரசியல் சக்தியாக அன்னா ஹசாரே அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹசாரேவின் இந்த முடிவை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற ஹசாரேவின் ஆசை இப்போது அம்பலமாகியிருகிறது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறினார். மேலும் அரசியலை மனதில் வைத்துதான் ஹசாரே இவ்வாறு நடந்துகொள்கிறார் என்று காங்கிரஸ் தொடர்ந்து கூறி வந்ததையும் அம்பிகா சோனி சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment