சிரியாவுக்கான ஐநா மற்றும் அரபு நாடுகளின் சிறப்புத் தூதர் கோஃபி அனான் தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
சிரியாவில் கிளர்ச்சிப் படையிடமிருந்து வர்த்தக நகரமான அலெப்போவை மீட்பதற்காக அதிபர் அசதின் அரசுப் படையினர் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கடும் உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. இது மிகப்பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா. ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதற்கிடையே அங்கு அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் ஐ.நா.-அரபு நாடுகளின் சிறப்பு தூதர் கோஃபி அனான் ஈடுபட்டு வந்தார். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக புதிய திட்டத்தையும் அவர் வகுத்தார். ஆனால் அவரது திட்டத்தை இருதரப்பிலும் முழுமையாக பின்பற்றாததால் வன்முறை தொடர்கிறது. தனது முயற்சிக்கு உரிய பலன் அளிக்காத நிலையில், கோபி அனான் தனது பதவியில் இருந்து விலக உள்ளார்.
இந்த மாத இறுதியில் கோபி அனானின் பதவிக்காலம் முடிகிறது. அதனையடுத்து அவர் தனது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் தெரிவித்தார்.
இருந்தாலும் சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியை தொடரவேண்டும் என்று அரபு லீக் நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அனான் தெரிவித்தார்.
சிரியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment