Latest News

  

தமிழகத்தில் தீயாக பரவிய மெகந்தி பீதியால் விடிய விடிய மக்கள் அவதி!!



சென்னை: மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக் கொண்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைவார்கள், தோல்வியாதி ஏற்படும், கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவற்றைத் துண்டிக்கும் நிலை ஏற்படும் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கும் பெண்களும், குழந்தைகளும் படையெடுத்து வந்தனர்.

இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று பெண்களும், குழந்தைகளும் கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்து அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், மெகந்தி போட்டவர்களுக்கு கைகளில் அரிப்பு ஏற்படுவதாகவும், வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் செய்தி பரவியது. இதனால் பீதி அடைந்த பெண்கள் அச்சத்துடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் மெகந்தி பீதியினால் அச்சமடைந்தவர்கள் இரவு நேரத்தில் மருத்துவமனையில் குவிந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் சிகிக்கை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணற நேரிட்டது. அச்சமடைந்துள்ள தங்களுக்கு மருத்துவர்கள் எந்தவித சிகிச்சையும் அளிக்காமல் தட்டிக்கழிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பரவிய பீதியால் விடிய விடிய பெண்களும், குழந்தைகளும் தூங்காமல் அச்சத்துடன் விழித்திருந்தனர். இதனிடையே இது வதந்திதான் என்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தை சீர்குலைக்க செய்த சதி என்று இஸ்லாமிய மதத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவிய வதந்தியால் இஸ்லாமிய மக்கள் பெரும் அச்சத்துடனும், பதற்றத்துடனும் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வதந்தி காட்டுத் தீயாக பரவ ஒரு எஸ்எம்எஸ்ஸும் காரணமாக அமைந்தது. அதாவது, மும்பையில் ஒரு பெண் தனது மகளுக்கு மெஹந்தி வைத்ததாகவும், அதனால் கெமிக்கல் உடலில் பிரச்சினையை ஏற்படுத்தி அந்தப் பெண்ணின் கை, கால்கள் பாதிக்கப்பட்டு துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டு விட்டதாகவும், இதைப் பார்க்க முடியாத பெற்றோர் அந்தப் பெண்ணை விஷம் கொடுத்துக் கொன்று விட்டதாகவும் எஸ்.எம்.எஸ் மூலம் பரவியது. இதுதான் பலரையும் பீதிக்குள்ளாக்கி விட்டது.

இருப்பினும் தமிழகத்தின் எந்த இடத்திலும் யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று டாக்டர்கள் மற்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். யாரும் மரணம் அடையவில்லை, உள் நோயாளியாகக் கூட அனுமதிக்கப்படவில்லை. எஸ்.எம்.எஸ். வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே வட கிழக்கு இந்தியர்கள் குறித்த வதந்தியால் இஸ்லாமியர்கள் பெரும் மன வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் நேரத்தில் தங்களைக் குறி வைத்து பரப்பப்பட்ட இந்த வதந்தியால் அவர்கள் பெரும் வருத்தமடைந்துள்ளனர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.