என்னதான் அரசு பள்ளிகளில் சமச்சீர் கல்வி கொண்டு வந்து அதனையே தனியார் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தினாலும், மக்களுக்கு இன்னும் தனியார் பள்ளிகளின் மீதுள்ள மோகம் அதிகரிக்கின்றதே தவிர இம்மியளவும் குறைந்த மாதிரியில்லை. இது ஏன் என்று ஆராய்ந்தால் அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதை கௌரவ குறைவாக நினைக்கின்றனர், தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதை கௌரவமாக நினைக்கின்றனர், இதில் அதிக கட்டணம் வாங்கும் பள்ளிகளில் படிக்க வைப்பது மிகப்பெரிய கௌரவம் என்று நினைக்கின்றனர். அதனால் தனியார் பள்ளி நோக்கி படையெடுக்கின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது தனியார் பள்ளிகளில், என்னதான் இல்லை அரசு பள்ளியில் என்ற கேள்வி நமக்கு உடன் வரும், ஆனால் கேள்வியை மாற்றி கேட்கவேண்டும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை.
ஏனென்றால் பொதுவாக அரசு பள்ளியில் ஆசிரியர் பயிற்ச்சியை முடித்தவருக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு, அதிலும் வேலை கொடுப்பதற்க்கு முன் தகுதி தேர்வு வேறு அவர்களுக்கு உண்டு, ஆனால் தனியார் பள்ளிகளின் நிலையே வேறு, அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் எத்தனை பேர்கள் ஆசிரியர் பயிற்ச்சியில் வெற்றி பெற்றவர்கள்?, ஏன் பயிற்ச்சி பள்ளிக்கு சென்றவர்கள் எத்தனை பேர்கள்?, ஏன் பத்தாம் வகுப்பு, +2 படித்தவர்கள்தான் அங்கு ஆசிரியகளாக அதிகம் பணிபுரிகின்றனர். அவர்களிடம் கேட்டால் எங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்கவில்லை என்கிறார்கள், தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்கவில்லையா அல்லது அவர்களின் தகுதிகேற்ப சம்பளம் நீங்கள் கொடுக்கவில்லையா என்று கேட்டால் பதில் இல்லை. இதைனை பெற்றோர்களிடம் சொன்னால் சரி தகுதி வாய்ந்தவர்கள் அரசு பள்ளியில் இருந்தால் ஏன் தேர்ச்சி பெற்றவர்கள் விகிதம் அரசு பள்ளியில் குறைவாக இருக்கிறது என்று கேட்கிறார்கள், அங்கும் சில தவறுகள் இருப்பதை நாம் இங்கு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டி உள்ளது.
ஆசிரிய தேர்வு, தகுதி அடிப்படையிலோ, மூப்பு அடிப்படையிலோ இருந்தால் தகுதி வாய்ந்தவர்கள் எந்த சிரமும், செலவும் இல்லாமல் ஆசிரியராகி விடுவார்கள், ஆனால் பாழாய்போன அரசியல் குறுக்கிட்டு 1-தங்களுக்கு வேண்டியவர்களையும், 2-கட்சிகாரர்களையும், 3-தங்கள் ஜாதியை சேர்ந்தவர்களையும், லஞ்சம் வாஞ்கிக்கொண்டு தேர்வு செய்கின்றனர், இந்த மூன்று தகுதிகள் இருந்தாலும், விட்டமின் பணம் கொடுக்கவில்லை என்றால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
இந்த அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தவர்களிடம் கேட்டால், வேலை கிடைத்து விட்டது என்று கூற மாட்டார்கள், வேலை வாங்கிவிட்டேன் என்றுதான் சொல்வார்கள், இப்படி செலவு செய்து வேலை வாங்கியவர்கள் பள்ளியில் சேவை அடிப்படையில் எப்படி சொல்லிக்கொடுப்பார்கள், அங்கே அரைகுறையாக சொல்லிக்கொடுத்து தன்னிடம் ட்யூஷன் சேரச் சொல்லி மாணவரகளை கட்டாயப்படுத்துகின்றனர். அதற்க்கு வசதி இல்லாத மாணவர்கள் தானாக ஆர்வத்துடனோ, தன் எதிர்காலம் அல்லது குடும்ப சூழ்நிலை பற்றி உணர்ந்தோ படித்து மார்க் வாங்கினால்தான் உண்டு இல்லை என்றால் அவர்கள் வெற்றியும் எதிர்காலமும் கேள்வி குறியே, என்றாலும் தனியார் பள்ளி கட்டணங்களைவிட அது குறைவாகத்தான் இருக்கு என்பதில் சந்தேகமில்லை. சரி தனியார் பள்ளியில் தகுதியில்லாத ஆசிரியர்களை கொண்டு எப்படி தேர்ச்சி விகிதம் அதிகம் காட்டுகிறார்கள் என்று கேட்கலாம், அதனை ஈடு செய்யத்தான் அவர்கள் சிறப்பு வகுப்பு, அதிகபட்ச வீட்டு பாடம், பயிற்ச்சி வகுப்பு, வாரா வாரம் டெஸ்ட், மாத டெஸ்ட் என மாணவர்களை பிழிந்தெடுக்கின்றனர்.
பெற்றோர்கள் இதனை உணராமல் தங்களது பிள்ளைகளுக்கு அதிகபட்ச கல்வியை இந்த பள்ளிகள் கொடுக்கின்றன என்று போட்டி போட்டுக்கொண்டு சேர்க்க துடிக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், பிள்ளைகளின் மனப்பளுவை யாரும் கருத்தில் கொள்வதே இல்லை. இதிலும் சில பள்ளிகள் பெற்றோர்களுக்கு தேர்வு வைக்கின்றனர், ஏன் என்று கேட்டால் அப்பொழுதுதான் எங்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் வீட்டில் பாடம் கேட்க முடியும் என்கிறார்கள், படித்த வசதியுள்ள் பெற்றோரின் பிள்ளைகளை தங்கள் பள்ளியில் சேர்த்து அவர்களை அதிக மார்க் வாங்க வைக்கின்றோம் என்று சொல்லி கட்டணங்களை உயர்த்திக்கொள்ளும் இவர்கள் படிக்காத பெற்றோர்களுக்கு பிறந்து அந்த பிள்ளைகளை படிக்க வைக்க் துடிக்கும் பெற்றோர்களின் மனநிலையை சற்றும் சிந்திக்காமல் நாங்கள் கல்வி சேவை செய்கின்றோம் என்று கூறுகின்றார்கள்.
இதனை இதுவரை ஒரு பெற்றோரும் உணர்ந்தார்போல் தெரியவில்லை. மாறாக எங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க 6 மாதம் முன்பே 12 மணி வரிசையில் நின்று நாங்கள் இண்டர்வியூவிற்க்கு சென்று அதிக கட்டணம் செலுத்தி இந்த பள்ளியில் சேர்த்தோம் என்று பெருமை பேசுவதை தவிர வேறு என்ன பலனை கண்டார்கள் இவர்கள். இத்தனை குளறுபடிகளிலும் சில நல்ல விஷயங்கள் தனியார் பள்ளிகளில் உண்டு, அது என்னவென்றால், கட்டுப்பாடு, அதாவது நேரந்தவறாமை, சரியாக உடுத்துவது, முறையாக உண்ணுவது, பேசுவது, பழகுவது இவைகளில் இவர்கள் கொஞ்சம் கண்டிப்போடு இருக்கின்றார்கள், இதுதான் பெற்றோர்களை கல்வியைவிட அதிகம் கவரும் விஷயமாக உள்ளது. சரி இரண்டிலும் தவறுகள் உண்டென்றால் என்னதான் முடிவெடுக்க முடியும் என்ற கேள்வி நியாயமாக எழும்.
அரசு கல்வி துறை, தனியார் பள்ளிகளில் பயிலும் மாதம் 2000 ரூபாய் வருமானத்திற்க்கு! கீழே உள்ள ஏழைகளுக்கு இலவச கல்வி கொடுக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் ஒரு தனியார் பள்ளி கூட அந்த சலுகையை எந்த மாணவருக்கும் அளிப்பதில்லை, மாறாக அளித்துவிட்டதாக அரசிடம் கணக்கு காட்டி அந்த தொகையினை மட்டும் பெற்றுக்கொள்கின்றது. மேலும், பள்ளியின் கல்வி ஆண்டு தொடக்கத்தில் புதிதாக சேர விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பிலேயே இலவச 25% சீட் சேர்க்கை முடிந்துவிட்டது என்று அறிவித்து விடுகின்றனர். அரசும் இதனை தீவிரமாக கண்கானிப்பதில்லை. இது பற்றி அதிகாரிகளும் அலட்டிக்கொள்ளாமல் தனியார் பள்ளிகளிடமிருந்து தனக்கு வரவேண்டியவைகளை பெற்றுக்கொண்டு தங்களை வளமாக்கி கொள்கின்றார்கள்.
எனவே அரசு இனி அந்த தொகையினை தனியார் பள்ளிக்கு ஒதுக்காமல் அரசு பள்ளிக்கு ஒதுக்கி இன்னும் அரசு பள்ளிகளி தரத்தை அதிகப்படுத்துவதோடு, ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் 60% தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்க வேண்டும், அதற்க்கு மேல் வெற்றி காண்பிப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு என்று அறிவிக்கலாம், அதற்க்கு குறைவாக தேர்ச்சி வீதம் காண்பிப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வை குறைக்கலாம், அது தொடரும் பட்சத்தில் பணி நீக்கமும் செய்யலம் என்று சட்டம் கொண்டு வரலாம்.
சமச்சீர் கல்வியில் தமிழ் பாடத்தை தவிர மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் மாற்றி அரசு பள்ளிகளையும் மெட்ரிகுலேஷன் தரத்திற்க்கு கொண்டு வந்து, தனியார் பள்ளிகள் போல் கட்டுப்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வைத்துவிட்டால், தனியார் பள்ளி ஆதிக்கத்தையும், மாயையையும் முழுக்க கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவதோடு, அனைத்து அரசுகளும் சொல்லும் முறையான இலவச கல்வி கொடுத்து வலிமையான பாரதத்தை உண்டாக்கலாம், மத்திய, மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா?. அப்படி எடுத்து அதனையும் மீறி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளை நம்பித்தான் அனுப்புவோம் என்றால் அவர்களை அல்லாஹ்வை தவிர நாம் ஒன்றும் செய்துவிட முடியாது. `
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறுதிக்காலத்தில்) காலம் சுருங்கிவிடும், கல்வி கைப்பற்றப்பட்டுவிடும்; குழப்பங்கள் வெளிப்படும்; (பேராசையின் விளைவாக மக்களின் மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும், “ஹர்ஜ்(கொலைகள்) பெருகிவிடும்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் அபுஹூரைரா(ரலி) நூல் முஸ்லீம்:5189
நன்றி : நௌசாத் அலி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜெத்தா மண்டலம்.
No comments:
Post a Comment