Latest News

  

முஸ்லிம்கள் என்றால் அந்நியர்களா?


இந்திய முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமைக் குறித்து உண்மையான தகவல்கள் அடங்கிய அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சாரின் தலைமையிலான ஏழு உறுப்பினர்களை கொண்ட உயர்மட்ட குழு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கடந்த 2006 நவம்பர் 17-ஆம் தேதி சமர்ப்பித்தது.

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைமைகளை குறித்து விரிவான ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை 2006 நவம்பர் 30-ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சச்சார் கமிட்டி பரிந்துரைத்த சிபாரிசுகளின் அடிப்படையில் இந்தியாவில் மிகவும் பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் துயரமான நிலைமைகளுக்கு பரிகாரம் காண தேவையான சில நடவடிக்கைகளை மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் வாயிலாக அறிவித்தது.

சிறுபான்மை அமைச்சகத்தின் மேற்பார்வையில் இத்திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பது குறித்த மீளாய்வும் நடந்து வருகிறது.

இவையெல்லாம் அமலில் இருக்கும் வேளையிலும் இந்திய சமூகத்தின் மனசாட்சியை பாதித்த கொடிய நோய்க்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை என்பதற்கு அனுபவங்கள் சாட்சியம் வகிக்கின்றன.

கடந்த ஞாயிறு அன்று ‘தி ஹிந்து’ பத்திரிகை வெளியிட்ட அறிக்கை அதன் அண்மைக்கால ஆதாரமாகும்.

பொது இடங்களில் ‘முஸ்லிம்’ என்று அடையாளம் காணப்படும் இந்திய குடிமகன் சந்தேகத்திற்கும், பாரபட்சத்திற்கும், அவமதிப்பிற்கும் பலிகடா ஆக்கப்படுகிறார் என்பதை தேச முழுவதும் நடத்திய ஆய்வில் சச்சார் கண்டறிந்தார். முஸ்லிம் என்ற பெயர் வீடு வாங்க, வாடகைக்கு வசிக்க, வங்கி கணக்கை துவக்க, சிறந்த கல்வி நிலையங்களில் சேர இந்திய முஸ்லிம்களுக்கு தடையாக உள்ளது.

முஸ்லிம்களை தங்களுடைய பகுதிகளில் குடியிருக்க அனுமதிக்க கூடாது என்ற ஒருங்கிணைந்து எடுத்த தீர்மானத்தின் படி நகரங்களில் கட்டிடங்களின் உரிமையாளர்களும், புரோக்கர்களும் செயல்படுவதாக சச்சார் கமிட்டி கண்டறிந்தது. இத்தகைய பாரபட்ச போக்கிற்கு எதிராக வலுவான சட்டம் இயற்றவேண்டும் என்று சச்சார் பரிந்துரைத்திருந்தார்.

ஆனால், அந்தஸ்தையும், அபிமானத்தையும் காத்து பாதுகாப்பான சமூக வாழ்வை உறுதிச்செய்யும் வாழ்க்கை என்ற இந்திய குடிமகனின்  அடிப்படை உரிமை இன்னமும் முஸ்லிம்களுக்கு உறுதிச் செய்யப்படவில்லை.

இந்தியாவின் பெரும் நகரங்களில் ‘ஹவுஸிங் அபார்தீட்(Housing Apartheid)’ அதாவது குடியிருப்பில் இன ஒதுக்கல் கொள்கை அமலில் இருப்பது 2 தினங்களுக்கு முன்பு திஹிந்து பத்திரிகையில் வெளியான ஆய்வுக்கட்டுரை மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் பொது சமூகம் எந்த அளவுக்கு வகுப்புவாத மயமாக்கப்பட்டுள்ளது என்பதன் அதிர்ச்சியடையச் செய்யும் உண்மை தெரியவந்துள்ளது.

உயர் கல்வி கற்றவர்கள், ஃப்ரொஃபஸனல்கள், செல்வந்தர்கள் போன்ற நகரவாசிகளிடையே மதம், ஜாதி அடிப்படையிலான காலனிமயமாக்கலும், துவேசமும் எவ்வளவு தூரம் வேர்பிடித்துள்ளது என்பதை முஸ்லிம் வேடமிட்டு வாடகைக்கு வீடு தேடிய ஹிந்து பத்திரிகையின் ரிப்போர்டர் கண்டறிந்தார்.

டெல்லியில் வசிக்க வீடு கேட்டுச் சென்றவர் முஸ்லிம் என்றவுடன் உரிமையாளர்கள் பின்வாங்குகிறார்கள். இந்தியாவின் தலைநகரில் பெரும்பாலான குடியிருப்புகள் எதிலும் முஸ்லிம்களை உட்கொள்ள விசாலமான மனம் கிடையாது. முஸ்லிம்கள் நாகரீகம் இல்லாத சேரிகளில் வாழட்டும் என்பதுதான் நாகரீகமடைந்த டெல்லி வாசிகளின் நிலைப்பாடு.

பிரபலமான நியூ ஃப்ரண்ட்ஸ் காலனியில் வீடு தேடிய ஒருவரிடம் ஏஜண்ட் கூறிய பதில், ‘இந்தியர்களுக்கு மட்டுமே இங்கு இடம் உண்டு. முஸ்லிம்களுக்கு கிடையாது’ என்பதாகும்.

பெயரில் என்ன இருக்கு? என்ற கேள்விக்கு ‘பெயரில் தான் எல்லாம்’ என்பது மும்பையின் பதிலாகும்.

முன்பு ஷபானா ஆஸ்மி தான் முஸ்லிம் என்பதால் வீடு தர மறுக்கிறார்கள் என புலம்பிய பொழுது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், ரேடியோ ஜோக்கி யூனுஸ் கானின் மனைவி ஹிந்துவாக இருந்த பொழுதும் பலன் இல்லை என்று இப்பொழுதும் கூறுகிறார்.

மும்பையின் ஜுஹு, கொலாபா, பாந்த்ரா ஆகிய இடங்களில் எல்லாம் 95 சதவீதம் பேரும் முஸ்லிம்களே வேண்டாம் என நிபந்தனை விதிக்கின்றனர்.

1992-93 ஆம் ஆண்டில் வகுப்புவாத கலவரம் தீவிரமடைய காரணம் மும்பை மாநகரத்தில் முஸ்லிம் – முஸ்லிம் அல்லாதவர் என்ற பிரிவினை மனப்பாண்மைதான் என பலரும் சுட்டிக்காட்டினர்.

ஆண்டுகள் 20 ஆகும் வேளையிலும் இப்பிரிவினை மனப்பாண்மை அதிகரித்தே வருகிறது என்பதை மும்பை அனுபவம் சுட்டிக்காட்டுகிறது.

முஸ்லிம் என்ற காரணத்தினால் பாரபட்சம் காட்டப்படுவதாக சுட்டிக்காட்டி பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி முன்பு மாநில சிறுபான்மை கமிஷனுக்கு புகார் அளித்தும் எந்தவித பலனும் இல்லை. புகார் அளித்தவரிடம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி இதுதான் என சுட்டிக்காட்டவே அன்றைய சிறுபான்மை கமிஷன் தலைவரால் முடிந்தது. முஸ்லிம்கள் தங்களது சொந்த பாரம்பரியத்தில் பெருமை கொள்ளும் ஹைதராபாத் பழைய நகரத்தின் எல்லைக்கு வெளியே அவர்களுக்கு வீடு கட்ட முடியாது. பெங்களூரிலோ தலித்தும், முஸ்லிமும் வெளியே.

சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாத சித்திரம் முற்றிப்போய் உள்ள சூழலில் லண்டனுக்கு சென்ற தனக்கு டெல்லியில் வீடு தேடியபோது ஏற்பட்ட  சிரமம் ஏற்படவில்லை என்று ஹிந்து நாளிதழின் பத்திரிகையாளர் ஹஸன் ஸுரூர் கூறுகிறார்.

பொருளாதார வளர்ச்சியிலும், முன்னேற்றத்தின் பாதையிலும் குதிப்பதாக பெருமை பேசும் தேசம் மனோரீதியான வளர்ச்சியில் மிகவும் பின்னோக்கிச் செல்கிறது என்பதைத் தான் ஹிந்து பத்திரிகையின் ஆய்வுக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

சமூக ரீதியிலான பாரபட்சம் என்ற பிரச்சனைக்கு தேசத்தால் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டியபடி தனிமைப்படுத்தப்படும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்து முஸ்லிம்களை காப்பாற்ற எந்தவொரு முயற்சியும் நடக்கவில்லை. அதுமட்டுமல்ல, குண்டுவெடிப்புகளின் பெயரால் முஸ்லிம் இளைஞர்கள் குறி வைத்து வேட்டையாடப்படுகின்றனர்.  போலி என்கவுண்டர்கள், சட்டவிரோத காவல்கள், விசாரணையின்றி நீண்டகால சிறை என முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அரச பயங்கரவாதம் பொது சமூகத்தின் முஸ்லிம் எதிர்ப்பு மனோநிலையை பலப்படுத்தவே செய்யும்.

பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் முதல் அண்மையில் பெரியபட்டிணத்தில் சுயமுன்னேற்ற பயிற்சியை மேற்கொண்ட இளைஞர்களை கைது செய்ய நடத்திய நாடகம் வரை அரசும், அதிகார வர்க்கமும் எவ்வளவு தூரம் முஸ்லிம் எதிர்ப்பு மனோநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதன் நேரடி சாட்சிகளாகும்.

அண்மையில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக நடத்தப்படும் அரசு அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகள் குறித்து புகார் அளிக்கச் சென்ற முஸ்லிம் சமுதாய தலைவர்களிடம் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரித்து பேசிய நமது மத்திய உள்துறை அமைச்சரின் அணுகுமுறை முஸ்லிம் எதிர்ப்பு மனோநிலையின் வெளிப்பாடாகும்.

ஆட்சியாளர்களின் முஸ்லிம் எதிர்ப்பு மனப்பாண்மைக்கு ஆக்கமும், ஊக்கமும் ஊட்டும் வகையில் அவதூறான செய்திகளையும், கட்டுக் கதைகளையும் வெளியிட்டு வரும் ப்ரவீன் சுவாமி போன்ற எழுத்தாளர்கள் மற்றும் மீடியாக்களின் ஆதரவு இருக்கும் வரை வகுப்புவாதமும், இனவெறியும் பொது சமூகத்தில் அதிகரிக்கவே செய்யும்.

முஸ்லிம்களை தொடர்ந்து பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சி ஊடகமான திரைப்படங்கள் உயர் குடியில் இருந்து சேரியில் வாழும் மக்கள் வரை சென்றடையும் பொழுது முஸ்லிம் எதிர்ப்பு மனப்பாண்மை தீவிரமடைவதில் ஆச்சரியமில்லை.

இதற்கு என்ன தீர்வு?

முதலில் அரசின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. சச்சார் பரிந்துரைத்த பாரபட்சத்திற்கு எதிரான சட்டத்தை இயற்றவேண்டியது அவசர தேவையாகும். ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் கட்டுப்பாட்டுடனும், சகிப்புத் தன்மையுடனும், நல்லுறவுடனும் நடந்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சமூகத்தை பீடித்துள்ள இந்த மனநோய்க்கு சிகிட்சை அளிக்க தார்மீக, மனிதநேய விழுமியங்களை கடைப்பிடிக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்பொழுதுதான் பொது சமூகத்தை பீடித்துள்ள  முஸ்லிம் எதிர்ப்பு என்ற மனநோய்க்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டாவது சிகிட்சை அளிக்க இயலும். இல்லையெனில், இனவெறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனநாயகத்தின் பாடத்தை கற்றுக்கொடுத்த இந்திய தேசம் இன ஒதுக்கலின் பாதாளத்தை நோக்கி சுயமாக தன்னை தள்ளவேண்டிய சூழல் உருவாகிவிடும்.

உலகம் ஜனநாயகத்தை நோக்கியும், பன்முகத் தன்மையை நோக்கியும் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் பல்வேறு சமூகங்கள் இணக்கமாக வாழ்ந்த இந்திய தேசத்தில் உள்நாட்டில் இனவெறியின் வேலியை கட்டுவோரை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இல்லையெனில் நாளைய வரலாறு நம்மை மன்னிக்காது.

அ.செய்யது அலீ.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.