முன்னேற்றப்பாதையில் 'கர்ழன் ஹஸனா' என்ற பதிவையும் தொடர்புடைய பின்னூட்டங்களையும் காண நேர்ந்தது. அதில் கர்ழன் ஹஸனாவின் வளர்ச்சி குறித்து சொல்லப்பட்டிருந்ததோடு, கட்டுரையாசிரியர் (அதிரை அஹமது காக்கா அவர்கள்) பின்னூட்டங்களில் கூறிய அதிரை பைத்துல்மாலின் செயல்பாடு மற்றும் அதன் முக்கிய பொறுப்பாளர்கள் குறித்த விமர்சனத்திற்கு சில விளக்கங்கள்:
கட்டுரையின் இறுதியில் "இந்த அமைப்பு அதிரையில் நன்கு செயல்பட்டுவரும் எந்த அமைப்புக்கும் எதிரானதல்ல" என்று சொல்லிவிட்டு, கடந்த 20 வருடங்களாகச் செம்மையாகச் செயல்பட்டுவரும் அதிரை பைத்துல்மாலில் சிறு வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுவதில்லை(யாம்) என்ற தவறான குற்றச்சாட்டை முன்வைத்தது முரன்பாடானது.
அதிரை பைத்துல்மாலின் தொடக்கத்தின் பின்னணியில் கரையூர்தெரு மீன்மார்கெட்டில் மீன் வியாபாரம் செய்யும் சிறுவணிகர்களுக்கு ஏற்பட்ட அவலநிலையே காரணமாக இருந்தது என்பதை "பேரா.பரக்கத்-அதிரைக்கு வந்த பரக்கத்" என்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
வட்டியில்லாக் கடன் பெறும் தனிநபர்கள் மற்றும் இல்லத்தரசிகளில் பலர் சுயதொழில் அல்லது வருமான வழிக்கு உதவியாகவே அதிரை பைத்துல்மாலை நாடுகிறார்கள். சுயதொழில் செய்ய அல்லது தொழிற்கடனை அடைப்பதற்கு என்று வெளிப்படையாகக் குறிப்பிடுபவர்களைத் தவிர, வட்டியில்லாக் கடன்பெறும் பயனாளிகளை தனித்தனியாகக் குறிப்பிடுவதில்லை. மேலும், அதிரை பைத்துல்மாலின் மாதாந்திர அறிக்கைகளிலும் அவ்வப்போது வட்டி இல்லாக் கடன்பெறும் பயனாளிகளில் சிறு வணிகர்களின் விபரங்களும் இடம் பெற்றுள்ளதையும் அதிரையர்கள் அறிவோம் என்பதால் பைத்துல்மால் சிறு வணிகர்களுக்கு உதவுவதில்லை என்பது தவறான குற்றச்சாட்டு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பைத்துல்மால் நிர்வாகிகளில் சிலர் 'லயன்ஸ் கிளப்'- இல் இருப்பதும் குறையாகச் சொல்லப்பட்டது. இஸ்லாமிய அடிப்படையில் இயங்கும் பைத்துல்மாலின் நடவடிக்கைகளுக்கு எதிராக இல்லாதவரை அத்தகைய உலகறிந்த அமைப்புகளில் இருப்பவர்கள், பைத்துல்மால் நிர்வாகிகளாக இருப்பது எவ்வகையில் தவறு என்பதை கட்டுரை ஆசிரியர் விளக்கவேண்டும். இத்தகைய அமைப்புகள் மூலம் கிடைக்கும் அரசு மற்றும் அதிகாரிகள் தொடர்புகள் பைத்துல்மாலின் சேவைகளுக்கு உதவியாகவே இருந்துள்ளது என்பதால் பெயர் குறிப்பிடாவிட்டாலும், இதிலுள்ள பைத்துல்மால் நிர்வாகிகள் ஏழைகள் நிலையறியாதவர்கள் என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிட்டதால் அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு அவ்வாறு குற்றஞ்சாட்டியவர்களே பொறுப்பாவர். அல்லாஹ்வை அஞ்சுவோம்!
பின்னூட்டமிட்டிருந்த சில சகோதரர்கள், கர்ழன் ஹஸனாவும் நன்மையான விசயத்திற்காகவே செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது; நன்மையான விசயங்களில் போட்டியை மார்க்கம் அங்கீகரிப்பதால் இதில் தவறில்லை என்றும் கருத்திட்டிருந்தனர். மேலோட்டமாக இது சரியாகப்பட்டாலும், ஏற்கனவே நன்கு இயங்கிவரும் ஓர் அமைப்பினரின் ஆர்வத்தைக் குன்றச்செய்யும் நடவடிக்கை சரியல்ல. ஏனெனில், பைத்துல்மாலின் நிதியுதவிகளுக்கு அடிப்படையாக நமதூர் மக்களின் ஜகாத், ஃபித்ரா மற்றும் ஸதகா ஆகியவையே என்பதால், இவற்றையே மையமாகக் கொண்டு கர்ழன் ஹஸனாவும் செயல்படும்போது அதிரை பைத்துல்மாலுக்கு வரும் வருவாய்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, அதன் பயனாளிகளை முழுமையாக திருப்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்.
மட்டுமின்றி, ரமழான் மற்றும் பெருநாள் தான தர்மங்களை பல்வேறு அமைப்புகளும் வசூலிக்கின்றனர். அவற்றில் அதிரை மக்களுக்காகவே இயங்கும் பைத்துல்மால் தவிர்த்து தமிழகளவில் இயங்கும் சமுதாய அமைப்புகளுக்கும் வசூலிக்கின்றனர். இத்தகைய தர்மங்களை ஷரீ அத் வழிகாட்டல்படி தேவையுள்ள எவருக்கும் வழங்கலாம் என்றாலும், அதிரையிலுள்ள ஏழைகளின் தேவையை நிறைவேற்றவே போதுமான நிதியாதாரங்கள் இல்லாத சூழலில் நாமறிந்த உள்ளூர் ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்குவதே சரியானதாகும் என்பதால் பிற அமைப்பு அபிமானிகள் அந்தந்த அமைப்புகளுக்கும் வழங்கும்போது அதிரை பைத்துல்மாலுக்கும் ஒரு பங்கு வழங்கலாம்.
பைத்துல்மாலில் பயன்பெறும் பயனாளிகள் சில முஹல்லா சங்கங்கள், சமுதாய அமைப்புகளிலிருந்தும் பயன் பெறுகின்றனர். இதனால் ஒரே வகையான தர்மம் (ஃபித்ரா) சிலருக்கு மட்டும் குவிகிறது. அவர்கள் அதற்கான தேவையுடையவர்கள் என்றாலும், இவற்றை தேவையுள்ள அனைவருக்கும் பகிர்ந்தளிப்பளிப்பதே நியாயமான பங்கீடாக இருக்கும். இதை முறைப்படுத்த பைத்துல்மால் மூலம் விநியோகிப்பதே சிறந்த வழியாகும் என்பதை சம்பந்தப்பட்ட முஹல்லா மற்றும் சமுதாய அமைப்புகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முஃமீன்களே! நன்மையில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள் என்ற இறைக்கட்டளைக்கு ஏற்ப, ஏற்கனவே ஏழைகளுக்கு உதவிக்கொண்டிருக்கும் அதிரை பைத்துல்மாலுடன் இணைந்து செயல்படுவதன்மூலம் தேவையுள்ள அனைத்து தரப்பினருக்கும் செம்மையாக உதவமுடியும் என்பதோடு, அத்தகைய நோக்கத்துடன் செயல்பட்டுவரும் பொறுப்பாளர்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும். இதுவே நன்மையில் போட்டியிடலாம் என்ற நபிமொழியையும் செயல்படுத்தியதாக இருக்க முடியும்.
உள்ளங்களில் மறைந்துள்ளதை நன்கறிந்தவன் அல்லாஹ் மட்டுமே. உளத்தூய்மையுடன் செயலாற்றுபவர்களுக்கு அல்லாஹ்விடம் நிச்சயம் வெகுமதி உண்டு. அத்தகையவர்களில் நாமும் இருப்பதற்கு அல்லாஹ் அருள்வானாக!
குறிப்பு: தனிப்பட்ட யாரையுமோ அல்லது கர்ழன் ஹஸனா அமைப்பையோ குற்றம் சொல்ல எழுதப்பட்டதல்ல இப்பதிவு. அதிரை பைத்துல்மால் குறித்த தவறான கருத்துருவாக்கத்திற்கு எதிரான விளக்கமே என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
N.ஜமாலுதீன்
செயலர், ABM- துபை கிளை
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment