சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கூடுதலாக 4 ஆயிரம் உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 1000 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டம், 1,200 மெகாவாட் மின் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டம், 600 மெகாவாட் மின் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம் ஆகியவற்றின் பணிகளை முழு வீச்சில் முடுக்கிவிட்டதையடுத்து, இந்தத் திட்டங்கள் எல்லாம் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளன.
இது மட்டுமல்லாமல், கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளில் ஏற்பட்ட பிரச்சனையை விவேகத்துடன் எனது தலைமையிலான அரசு கையாண்டதன் காரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையமும் விரைவில் உற்பத்தியை துவங்க உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் மக்கள் சேவையினை விரைந்து மேற்கொள்ளும் வகையில், தற்போது காலியாக உள்ள 4,000 கள உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நேரடியாக நியமனம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு, கள உதவியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு 3,250 ரூபாய் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும். இரண்டு ஆண்டு கால பயிற்சி முடிவடைந்தவுடன், அவர்களின் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, அவர்களுக்கு காலமுறை ஊதியத்தில் சம்பளம் வழங்கப்படும் என்பதையும்;
இதன் மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் மேலும் அதிகரித்து, மின் பயனீட்டாளர்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த சேவை அளிக்கவும் வழிவகை ஏற்படும் என்பதையும், மின்மிகை மாநிலம் என்ற பெருமையை தமிழகம் மீண்டும் எய்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment