ஷார்ஜாவில் இருந்து சென்னை திரும்பக் கருதிய பொறியாளரின் கடவுச் சீட்டை ஷார்ஜா நிறுவனம் மாற்றிக் கொடுத்ததால் சென்னை குடியுரிமை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதனால், மின்வாரிய பணிக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழந்தார்.
இதுபற்றி கூறப்படுவதாவது:
சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் முருகானந்தம், 31 வயதாகும் முருகானந்தம் பொறியாளர். நான்கு மாதத்துக்கு முன், ஷார்ஜாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், மின்சாரப் பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார்.
சில நாள்களுக்கு முன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து உதவி மின் பொறியாளர் பணிக்கான நேர்காணலுக்கு முருகானந்தத்துக்கு அழைப்புக் கடிதம் வந்ததாக அறிந்த முருகானந்தம், வேலைக்கான நேர்காணலில் கலந்து கொள்வதற்காக ஷார்ஜா நிறுவனத்தில் விடுப்பு எடுத்து சென்னை புறப்பட்டார்.
பணி புரிந்த நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்த தனது கடவுச் சீட்டை கேட்டு வாங்கிய போது , முருகானந்தத்தின் கடவுச்சீட்டுக்குப் பகரமாக அவருடன் பணியாற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் முருகானந்தத்தின் கடவுச்சீட்டை நிறுவனம் மாற்றி கொடுத்துவிட்டது.
அதைக் கூட சரி பார்க்காமல், நேற்று அதிகாலை முருகானந்தம் சென்னை வந்து சேர்ந்தார். குடியுரிமை பிரிவு அதிகாரிகள் முருகானந்தத்தின் கடவுச்சீட்டில் புகைப்படம் மாறியுள்ளதை கண்டுபிடித்து விட்டனர்.
தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், உண்மையான தனது கடவுச்சீட்டு ஷார்ஜா நிறுவனத்தில் இருப்பதாகவும், அவசரமாக புறப்பட்டதால் சக ஊழியரின் கடவுச்சீட்டை தவறுதலாக, மாற்றி எடுத்து வந்துவிட்டதாகவும் கூறினார். இருப்பினும், அடுத்தவர் கடவுச் சீட்டில் பயணம் செய்ததால், குடியுரிமை அதிகாரிகள், அவரை விமான நிலைய காவல்துறையில் ஒப்படைத்தனர்
தமிழக அரசின் வேலை வாய்ப்பைத் தேடி சென்னை வந்த முருகானந்தம், கடவுச்சீட்டின் காரணமாக, சிறையில் வாட நேர்ந்துள்ளது
No comments:
Post a Comment