கல்லூரி மாணவிகள் எப்படி உடை உடுத்த வேண்டும் என பாடம் எடுக்கிறவர்கள் இந்தக் கும்பல்தான். காதலர் தினம் கொண்டாடக் கூடாது, அது நம் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று முழங்குகிறவர்கள் இந்தக் கும்பல்தான். பூங்காவில் உட்கார்ந்திருந்த ஆணையும், பெண்னையும் அடித்து விரட்டியவர்கள் இந்தக் கும்பல்தான். இந்துமதக் கடவுள்களை நிர்வாணமாய் வரைந்துவிட்டார் என உலகமகா ஓவியர் உசேனை நாட்டைவிட்டே விரட்டியவர்களும் இந்தக் கும்பல்தான். இப்போது கர்நாடகா சட்டசபையில் செல்போனில் ஆபாசக்காட்சிகளைப் பார்த்துக் களித்துக்கொண்டு இருந்தவர்களும் இந்தக் கும்பல்தான்.
சாதாரணமானவர்கள் இல்லை இவர்கள். ஒருவர் கூட்டுறவுத்துறை அமைச்சர். அடுத்தவர் மகளிர் குழந்தைகள் நல அமைச்சர். இன்னொருவர் விளையாட்டுத்துறை அமைச்சர். கிருஷ்ணர், லட்சுமணன் போன்ற புனிதக் கடவுள்களின் பெயர்களை அவர்கள் வைத்துக்கொண்டு இருப்பதற்கு ஒன்றும் குறைவில்லை. அல்லும் பகலும் இவர்களின் சிந்தனையில் நிறைந்திருப்பது எது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
காவி உடை தரித்துக்கொண்டு, கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு, காமத்தில் ஈடுபட்ட நித்யானந்தா கூட எவ்வளவோ மேல். ஒரு தனியறையில், தனக்குப் பிடித்த ஒரு பெண்ணோடு மட்டுமே இருந்தான் அவன். பொறுப்புமிக்க பதவிகளை வகித்துக்கொண்டு உயர்ந்த பீடங்களில் உட்கார்ந்து, மக்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டிய முக்கியமான தருணத்தில் எத்தகைய காரியங்களில் ஈடுபட்டு இருந்திருக்கின்றனர் இந்தக் கயவர்கள்.
ஒழுக்கம், நேர்மை, கலாச்சாரம், பண்பாடு பற்றி பேசுவதற்கு இவர்களின் கட்சியான பா.ஜ.கவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. காவியில் கறை பிடிக்கவில்லை. காவியே இப்போது கறையாகி விட்டிருக்கிறது.
இந்த அமைச்சர்கள் எந்தக் கடவுளின் பெயரால் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்களாம்?
பி.கு: சென்ற மாதத்தில்தான் ரூ.35.17 லட்சம் செலவழித்து கர்நாடகா அரசு எம்.எல்.சிக்களுக்கு ஐபாட்2 செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறது. உடனே தங்களுக்கு ஐபாட் 3 செல்போன் வேண்டும் என எம்.எல்.ஏக்கள் கேட்டு இருக்கிறார்களாம். அதற்கு 1.05 கோடி செலவகுமாம். ரொம்ப அவசியம்!
நன்றி : தீராத பக்கங்கள்
No comments:
Post a Comment