Latest News

மதுரை டூ சென்னை... 'நடுவானில்' ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சிதம்பரம் ரகசிய ஆலோசனை!



சென்னை: தனியார் விமானம் ஒன்றில் 'தற்செயலாக' ஒன்றாகப் பயணித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களில் ஒருவராகிய ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் விமான பயணத்தின்போது ரகசியமாக ஆலோசனை நடத்தியதாக 'வானிலிருந்து' வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பார் ஒரு படத்தில் கவுண்டமணி. அதேபோல தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் நடக்கும். கொள்கை, லட்சியம், கோட்பாடு, குறிக்கோள் என்று எதுவும் அரசியலுக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் கூடிக் கொள்வார்கள், தேவையில்லாவிட்டால் கூச்சலிட்டுக் கொண்டு பிரிந்து கொள்வார்கள். யார் யாருடன் சேருகிறார்கள் என்பதெல்லாம் இங்கு முக்கியமே இல்லை.

அதைத்தான் தமிழக அரசியல் களம் கடந்த பல காலமாகவே சந்தித்துக் கொண்டிருக்கிறது. திமுகவிலிருந்து விரட்டப்பட்ட வைகோ மதிமுகவை ஆரம்பித்தார். பின்னர் அவரே திமுகவுடன் போய்க் கூட்டணி வைத்தார். பாமகவின் கூட்டணி வரலாறும், அதற்கு அது உதிர்த்த தத்துவ முத்துக்களும் மக்களால் மறக்க முடியாதது. அதேபோலத்தான் காங்கிரஸின் கூட்டணிகளும், தாவல்களும். தத்துவ ரீதியாக வலுவானவர்கள் என்று கூறப்படும் கம்யூனிஸ்டுகளும் கூட மாறி மாறி கூட்டணி மாறித்தான் சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் புதிதாக ஒரு கூட்டணி தாவல் கட்சி தமிழக அரசியல் வானில் உதயமாகியுள்ளது. அது தேமுதிக. தனித்தே போட்டியிடுவோம், அதுதான் எங்களது லட்சியம், கொள்கை என்றெல்லாம் கூறி தனியாகவே போட்டியிட்டும் வந்த கட்சிதான் தேமுதிக. ஆனால் அந்தக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது நடுநிலை வாக்காளர்கள் அத்தனை பேரும் அதிர்ந்துதான் போனார்கள்.

ஆனால் இந்தக் கூட்டணி 6 மாதங்களுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு சட்டசபையில் வைத்து இந்த கூட்டணியை சிதறு காய் போல உடைத்தெறிந்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா.

மேலும் சங்கரன்கோவிலில் ஒண்டிக்கு ஒண்டி நிற்கத் தயாரா என்றும் சவால் விட்டார் ஜெயலலிதா. இதனால் தேமுதிக பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தனித்துப் போட்டியிட்டாலும் குறைந்தது 3வது இடத்தையாவது பெற்றாக வேண்டிய நிலையில் அந்தக் கட்சியும், கடந்த முறை வாங்கியதை விட அதிக அளவில் வெல்வதோடு மட்டுமல்லாமல், மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தையும் காட்டியாக வேண்டிய நிலையில் அதிமுகவும் உள்ளது.

இந்த நிலையில் புதிய கூட்டணிக்கான வெளிச்சக் கீற்றுகள் அரசியல் வானில் தென்படத் தொடங்கியுள்ளது. அந்த மடம் இல்லாவிட்டால் சந்தை மடம் என்பது போல அதிமுக இல்லாவிட்டால் திமுக என்ற கூட்டணி தர்மத்திற்கேற்ப தற்போது திமுகவை நோக்கி தேமுதிக வேகமாக நகரத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

இதை நிரூபிக்கும் வகையில் நேற்று மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த தனியார் வி்மானத்தில் விஜயகாந்த்தும், ஸ்டாலினும், கார்த்தி சிதம்பரமும் ஒன்றாகப் பயணித்துள்ளனர். விமான பயணத்தின்போது மூவரும் கூடி ரகசியமாக பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

தேமுதிக கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்துக்காக விஜயகாந்தும், இளைஞரணி உறுப்பினர் சேர்க்கைக்காக மு.க. ஸ்டாலினும் விருதுநகர் சென்றிருந்தனர். இருவரும் மாலையில் தனியார் விமானம் மூலம் சென்னைக்குத் திரும்ப மதுரை வி்மான நிலையம் வந்தனர். முதலில் ஸ்டாலின் வந்து விட்டார். பின்னர்தான் விஜயகாந்த் வந்தார். ஸ்டாலின் வந்திருப்பதை கட்சிக்காரர்கள் அவருக்குச் சொல்ல, நேராக ஸ்டாலினிடம் சென்று பேசினாராம் விஜயகாந்த். அவரும் என்ன கேப்டன் எப்படி இருக்கீங்க என்று அன்புடன் பேசினாராம். இருவரும் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனராம். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் வேறு யாரும் இல்லையாம்.

பின்னர் விமானம் கிளம்ப சில நிமிடங்கள் இருந்தபோது கார்த்தி சிதம்பரம் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் விமானத்தில் இந்த மூன்று பேரும் சந்தித்துப் பேசினராம். நிச்சயமாக அவர்கள் அரசியல் பேசியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. விமான பயணத்தின்போது மூன்று பேருமே இடைவிடாமல் பேசிக் கொண்டிரு்ந்ததாகவும், ஊர் வந்து இறங்கியபோது மூவருமே இணை பிரியா நண்பர்கள் போல ஒருவருக்கொருவர் விடை பெற்றுக் கொண்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் சாராம்சம் என்னவாக இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை. நிச்சயமாக சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான பூர்வாங்க ஆலோசனையாகவே இதை பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மேலும் ஏற்கனவே கூட்டணியாக உள்ள திமுக, காங்கிரஸுடன் தேமுதிகவும் எதிர்காலத்தில் இணைந்து செயல்படும் என்றும் திமுக, காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கையுடன் கூறத் தொடங்கியுள்ளனர்.

தங்களது கூட்டணியின் பலத்தை சங்கரன்கோவிலில் பரீட்சித்துப் பார்க்கவும் இவர்கள் முயலலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது வேட்பாளரை இவர்கள் களம் இறக்குவார்களா அல்லது தேமுதிகவை களத்தில் இறக்கி அக்கட்சிக்கு திமுகவும், காங்கிரஸும் ஆதரவு தருமா என்ற எதிர்பார்ப்பும் ஏகமாக உள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.