Latest News

  

ஆத-னால் காதல் செய்வீர்(வாழ்க்கை துணையை மட்டும்)-2




முதலில் தகாத கள்ள உறவிலிருந்து தன்னை காத்துக் கொள்ள இளைஞர்கள் திருமணத்தை தள்ளி போடாமல் அனுமதிக்கப்பட்ட இல்வாழ்க்கையில் இணைவது தான் சரியான தீர்வை தரும்.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றோர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; (புகாரி 1905)

அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்
நானும் அல்கமா மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் 'இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.(புகாரி 5066)


இல்லறம் என்பது உறுதியான ஓப்பந்தம். உரிமைகள் கடமைகள் என்னும் அடித்தளத்தின் மீது இந்த ஒப்பந்தம் அமையப் பெறுகிறது. எனவே கள்ள உறவு என்பது ஒப்பந்தத்தை மீறி துணையின் உரிமையைப் பறிக்கும் கயமைச் செயலாகும். திருமணம் சம்மதத்தின் அடிப்படையில் நடைபெற வேண்டும். மணம் முடிக்கப் போகின்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதுடன் தமது விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் திருமணத்திற்கு முன்னரே வெளிப்படுத்தி விட வேண்டும்.


பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவர்களை மணமுடித்து வைக்கக்கூடாது.
ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'(திருமண விஷயத்தில்) கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரவேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், 'கன்னிப் பெண் (வெளிப்படையாகத் தன் சம்மதத்தைத் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவளுடைய மெளனமே அவளுடைய அனுமதி' என்றார்கள்.(புகாரி 6971,5137)


கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரிய்யா(ரலி) அறிவித்தார்.
என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்துவைத்த) அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள். (புகாரி:6964)


திருமணத்திற்கு முன்னரே இல்லற வாழ்வின் பொறுப்புகள்,கடமைகள், பிரச்னைகள் பற்றித் தெளிவாக அறிந்திருப்பின் இல்லற வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை எளிதில் எதிர்கொண்டு சமாளிக்கலாம். உணர்வுக்கு மதிப்பளித்து உரிமைகளை வழங்கி வாழ வேண்டும். நீயா? நானா? என்ற போட்டியில் இறங்காமல் நீயும் நானும் என்ற நிலையில் வாழ வேண்டும்.

தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசிக் கொள்ள வேண்டும். தேவை ஏற்படின் மருத்துவரின் ஆலோசனைகளையும் பெறலாம். கணவனும் மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். குறைந்த வருமானமே இருந்தாலும் சொந்த நாட்ட்டிலேயே வேலை செய்ய வேண்டும். அல்லது குடும்பத்தோடு வெளிநாடுகளில் தங்குமளவிற்குத் தகுதிகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வீடுகளில் உறவினரான ஆடவர்களோடு பழகுவதிலும் இடைவெளி தேவை. தடையற்ற கலப்பு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். கணவருடைய சகோதரருடன் தனிமையில் பேசலாமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது அது மரணத்திற்கு (அழிவிற்குச்) சமம் என்றார்கள்.

அலுவலகங்களில் அந்நியர்களிடம் சொந்த விசயங்களைப் பேசக்கூடாது. குறிப்பாக தனது துணையைப்பற்றி குறைவாகப் பேசக்கூடாது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களைத் தனிமையில் சந்திப்பதும் கூடாது.  ஒரு அந்திய ஆடவருடன் ஒரு பெண் தனிமையில் சந்திக்கும் போது அங்கு மூன்றாவதாக சைத்தான் உள்ளான் என்ற நபிமொழியை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்.

பணம், வசதி, ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு தமது கற்பை இழந்து விடக்கூடாது. விலை கொடுத்து வாங்கும் ஆடம்பரப் பொருட்களுக்காக விலை மதிப்பற்ற கற்பை இழக்கலாமா? தேவைகளுக்காக வாழ்ந்தால் பிரச்னைகள் வராது. ஆசைக்காக வாழ்ந்தால் அது அழிவுதான்.

காம உணர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கவேண்டும்.எவ்வாறு கட்டுப்பாடற்ற உணவு உடல் ஆரோக்கியத்தை அழித்து விடுகின்றதோ அதுபோல கட்டுப்படற்ற காமம் சமூகத்தையே சின்னாபின்னமாக்கி விடுபவை.

சரி செய்ய முடியாத அளவிற்கு இல்லற வாழ்வு சிக்கலாக இருந்தால் மணவிலக்குப் பெறுவது பொருத்தமான செயலாகும். மணவிலக்குச் சட்டவிதிகளை இறுக்கமாக வைத்திருப்பதனால் மணவிலக்குகளை தடுத்து விடமுடியும் என்பது பொய்யான வாதமாகும்.இவர்கள் மணவிலக்குப் பெற இயலாச் சூழலில் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள். இந்த உரிமையை பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது.

பார்க்க: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவரின் குணத்தையோ பழி சொல்லவில்லை. ஆயினும் நான் இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'சரி! அவரின் தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அவரும் 'ஆம்' என்று கூறினார்கள். பின்னர், (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார். (புகாரி.5276)

கள்ள உறவுகளை தடுப்பதற்கு அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் பொறுப்பு இருக்கிறது. ஒழுக்க மாண்புகள் ஆன்மீக சிந்தனைகள், இறையச்சம் ஆகியவற்றை மக்களிடம் விதைக்க தொடர்ந்து செயல்பட வேண்டும்.கள்ள உறவில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இது நமது பிரச்னை அல்ல என்று ஒதுங்கி விடக்கூடாது.

பொற்றோர்களும் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு ஒழுக்க மாண்புகளைப் போதிக்க வேண்டும். நானம்,சுயமரியாதை, கற்பு,நேர்மையான வாழ்வு ஆகியவற்றைக் கற்றுத்தர வேண்டும். வாழ்க்கையில் ஒரு லட்சியம் வேண்டும். இறைக் கட்டளையின்படி வாழ்ந்து இறை உவப்பைப் பெறுவதே அந்த லட்சியமாகும்.ஒழுக்கத்தை இழந்தால்,கற்பை விலை பேசினால்,பிறன்மனை நாடினால் எங்ஙனம் இறை உவப்பை பெற முடியும்?.
நன்றி : வலையுகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.