AIPVT நுழைவுத் தேர்வு
ஜி. மீனாட்சி
நாடு முழுவதிலும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள், அகில இந்திய அளவில் நடைபெறும் கால்நடை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை (AIPVT) எழுத வேண்டும். வெட்டினரி கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு இத்தேர்வை நடத்துகிறது. நாடு முழுவதிலும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்களை நிரப்புவதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகியவற்றை பாடமாக எடுத்துப் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது: 2012, டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, 17 வயதுடையவர்களாக இருக்கவேண்டும்.
தேர்வு எப்படியிருக்கும்?: மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும். ஆங்கிலத்தில் அப்ஜெக்டிவ் முறையில் தேர்வு இருக்கும். 200 கேள்விகள் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் உள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறும். இயற்பியல் பாடத்துக்கு 60 மதிப்பெண்கள், வேதியியல் பாடத்துக்கு 60 மதிப்பெண்கள், உயிரியலுக்கு 80 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தேர்வு நடைபெறும் மையங்கள்: அகர்தலா, அகமதாபாத், அய்சாவல், பெங்களூரு, போபால், புவனேஸ்வரம், சண்டிகர், சென்னை, டேராடூன், டெல்லி, குவாஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஈட்டாநகர், ஜெய்ப்பூர், கோஹிமா, கொல்கத்தா, லட்சத்தீவுகள், லக்னோ, மும்பை, நாக்பூர், பானாஜி, பாட்னா, போர்ட்பிளேர், புதுச்சேரி, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, திருவனந்தபுரம்.
எந்தெந்தக் கல்லூரிகளில் சேர முடியும்?: AIPVT தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள், சென்னை, நாமக்கல், மும்பை, பார்பானி, திருச்சூர், பாலம்பூர், ஜபல்பூர், மதுரா, புவனேஸ்வரம், சர்தார்க்ருஷிநகர், குஜராத் மாநிலம் ஆனந்த், ஃபைசாபாத், பெங்களூரு, ஹைதராபாத், திருப்பதி, மிசோராம், நாக்பூர், கொல்கத்தா போன்ற இடங்களில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் அறிக்கையை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெறலாம். தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.1,250-க்கான வங்கி வரைவோலையை ’Veterinary Council of India – Examination Fund’ Payable at New Delhi’ என்ற பெயரில் எடுத்து Controller of Examination, Veterinary Council of India, ‘A’ Wing,2nd Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, New Delhi - 110 066 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை நேரடியாகப் பெற விரும்புபவர்கள், ரூ.1200-க்கான டிமாண்ட் டிராப்ட்டை மேற்கூறிய அதே பெயரில் எடுக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் ரூ.600-க்கான டிமாண்ட் டிராப்ட்டை எடுத்தால் போதுமானது.
விண்ணப்பங்களும் தகவல் அறிக்கையும் விநியோகிக்கப்படும் நாள்: 09.01.2012 முதல் 10.02.2012 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.02.2012
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 12.05.2012
விவரங்களுக்கு: www.vci-india.in
No comments:
Post a Comment