ஜன் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை வெள்ளையர்களை விரட்ட மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த முதல் சுதந்திரப் போருக்கு ஒப்பானதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன
தற்போது இந்தியாவின் தாத்தாவாக, காந்தியின் அவதாரமாக ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அன்னா ஹசாரேவின் தலைமையில் நடக்கும் போராட்டத்தை இரண்டாம் சுதந்திர போராட்டமாக மீடியா பிரபலப்படுத்தி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் அன்றைய சுதந்திரப் போரை விட மிக பிரபலமான ஒன்றாக தேச எல்லைகளை தாண்டி சர்வதேச ஊடகங்களின் கதாநாயகனாக மாறியிருக்கிறார் இந்த தாத்தா...
இன்று பத்திரிகைகள், முக நூல்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஹசாரேவின் போராட்டத்துக்கு எதிராக பேசுபவர்கள் சமூக விரோதிகளாக, தேச துரோகிகளாக சித்தரிக்கபடும் காட்சியை பார்த்துகொண்டிருக்கின்றோம். புக்கர் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் சொன்னதைப் போல் இன்று அன்னாவின் குழுவால் முன்வைக்கப்படும் ஜன் லோக்பால் மசோதா நிறைவேறினால் என்ன கிடைக்கும் என யோசித்தால் பின்வருபவை கிடைக்கலாம்.
a. வந்தே மாதரம்
b. பாரத் மாதா கி ஜெய்
c. இந்தியா தான் அன்னா, அன்னா தான் இந்தியா
d. ஜெய் ஹிந்த்
நன்றாகப் படித்து மேல்தட்டு ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களே அன்னாவின் போராட்டத்தில் பெரும்பான்மையாகக் கலந்து கொண்டுள்ளனர். மின்விசிறிகள் தரும் சுகமான காற்று வீச, தில்லி மாநகராட்சியின் 250 ஊழியர்கள் இரவு பகலாக பணி புரிந்து சமன்படுத்திய இடத்தில், பன்னாட்டு நிறுவனங்களில் ஸ்பான்ஸர்ஷிப்பில் நடைபெறும் உண்ணாவிரதத்தின் மூலம் அன்னாவின் எடை சில கிலோக்கள் குறைந்தது தவிர, சாமானியனுக்கு வேறொன்றும் நடக்கப் போவதாகத் தெரியவில்லை.
"ஏற்கனவே இருக்கும் பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் மறைந்து விடும் அளவுக்கு ஊழல் எளிதானதல்ல" என்று இன்போஸிஸின் முன்னாள் தலைவர் நந்தன் நிலேகினி சொல்வதை கவனிக்க வேண்டியுள்ளது.
உண்மையிலேயே ஊழலை ஒழிப்பது தான் அன்னாவின் பணி என்றால் இவரின் அணியின் உள்ள சந்தோஷ் ஹெக்டேவை தலைவராக கொண்ட லோக் ஆயுக்தா மூலம் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ரெட்டி சகோதரர்களை உள்ளடக்கிய பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்காமல் காங்கிரஸை மட்டும் எதிர்ப்பதன் மர்மம் புரியவில்லை. தலைவரே சூட்கேஸில் பணம் வாங்குவதில் தொடங்கி சவப்பெட்டி வரை ஊழல் நடத்திய பரிசுத்த பா.ஜ.கவும் இவரின் போராட்டத்தை வெற்றி பெற வைக்க மெனக்கெடுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது இவரின் போராட்டம் ஊழல் எதிர்ப்பா அல்லது வெறும் காங்கிரஸ் எதிர்ப்பா என்று?
அன்னாவை ஆதரிப்பதாக சொல்லும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூட அவரின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்பதில்லை என்பது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் சந்தோஷ் ஹெக்டே அறிக்கையால் ஊழல் புரிந்ததாக குற்றம் சுமத்தப் பட்டு பதவி பறிக்கப் பட்ட எடியூரப்பா அமைச்சரவையில் பதவி வகித்த கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஸ்ரீ ராமுலு ஆகியோர் மீண்டும் அமைச்சர் பதவி கேட்டு பாஜக வை மிரட்டி வரும் நிலையில் வேறு யாருக்கும் அவர்கள் முன்னர் வகித்து வந்த இலாகாவை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வரும் பாஜக மறு பக்கம் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் வேண்டும் என அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியலே.
மேலும் நல்லாட்சி நடத்துகிறோம் என முழங்கும் மோடியின் குஜராத்தில் கூட இன்னும் லோக் ஆயுக்தா அமைப்பு தோற்றுவிக்கப் பட வில்லை என்பதை விட வேறென்ன வேண்டும் இவர்களின் நேர்மைக்கு.
உடல்தகுதி அடிப்படையில் தகுதி பெறாமல், அவசர தேவையிருந்த காரணத்தால் இந்திய ராணுவத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்த அன்னா ஹசாரே தன் கிராமத்தை சீர்படுத்தியது குறித்து இந்திய ஊடகங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன. ஆனால் அவரின் கிராமத்தில் இன்னும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்வது குறித்தும் தலித்துகள் ஜாதி பெயர் கொண்டே அழைக்கபடுவது குறித்தும் ஊடகங்கள் மறைப்பது நெருடலை ஏற்படுத்துகிறது. இன்னும் அந்த கிராமத்தில் உள்ள பள்ளிகூடங்களில் விவேகானந்தர், சத்ரபதி சிவாஜி போன்றவர்களே சுதந்திர வீரர்களாக கற்பிக்கப்படுதலையும் அங்குள்ள சினிமா தியேட்டரில் கூட இந்து கடவுள்களின் மேன்மைகளை சொல்லும் படங்கள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்படுவதையும் வசதியாய் மறைத்து விடுகின்றன.
இந்நேரம்.காம்
நன்றி
No comments:
Post a Comment