அதிரையுடன் ஒட்டி உறவாடும் ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஹஜரத் பிலால் (ரலி) நகரில் ஓர் புதிய கட்டிடத்தின் மேல் தொட்டுவிடும் உயரத்தில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பி [ HD LINES ] தாக்கி 21 வயதுடைய மாணவர் சைபுதீன் மரணமடைந்து 4 வருடங்கள் மறைந்துவிட்டன, பிரச்சனைகள் தர வேண்டாமென மின்சார வாரியத்திற்கெதிராய் எந்தவித போராட்டங்கள் செய்யாமலும் நஷ்டஈடு கோராமலும் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்ததன் பலன், கட்டப்பட்டு வந்த கட்டிடம் அப்படியே நிற்பது போல் அதிரை மின்சார வாரியமும் ஜடமாய் நிற்கின்றது!..
பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும்
2004 ஆம் வருடம் முதலே மேற்படி [ HD LINES ] உயர் மின் அழுத்தக் கம்பிகளை குடியிருப்பு பகுதியிலிருந்து அகற்றி மாற்றுப்பாதை வழியாக கொண்டு செல்லக்கோரி ஏகப்பட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியும் மனுக்களை அனுப்பியும் சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அகமது ஜலாலுதீன் அவர்களும் அவர்களது மகன் அப்துல் நாசர் அவர்களும் கால்கடுக்க அலைந்து ஓய்ந்து உலகிலிருந்தே மறைந்து விட்டார்கள் ஆனாலும் இன்னும் மின்சார வாரியம் ஆழ்ந்த நித்திரையில்.
பிலால் நகர் பகுதியில் பரவலான குடியேற்றம் ஏற்படும் முன்பு நடப்பட்ட மின் கம்பங்கள் தான் இவையென்றாலும் படிப்படியான குடியேற்றங்கள் தொடங்கியவுடன் உயர் மின் அழுத்த மின்சாரத்தின் ஆபத்தை பொதுமக்களை விட நன்கறிந்துள்ள மின்சார வாரியமே இதை அகற்றி மாற்று ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் அல்லது மர்ஹூம் அகமது ஜலாலுதீன், மர்ஹூம் அப்துல் நாசர் போன்றவர்கள் மின்சார வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த போதாவது அகற்றி சாலை வழியாக கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லது மின்சாரம் தாக்கி மாணவர் சைபுதீன் இறந்தபோதாவது சரிசெய்;திருக்க வேண்டும் ஆனால் இப்படி சொந்த அறிவும் இல்லாமல் சொல்லறிவும் இல்லாமல் பட்டறிவும் இல்லாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
கட்டிடங்கள், குடிசைகள் வழியாக செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பிகள்
பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும்
பிலால் நகரைப் பொறுத்தவரை பெரும்பாலும் குடிசைவாழ் ஏழைகள் நிறைந்த பகுதி. மின்சார வாரியத்திற்காக செலவழிக்கும் தகுதியோ, அதிகாரிகளை சந்தித்து முறையிடும் கல்வியறிவோ அற்றவர்கள். எனவே, உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்த நீண்ட நாள் ஆபத்திற்கு முடிவுரை எழுதுவார்களா அல்லது இன்னும் சில உயிர்கள் போகட்டும் என காத்திருக்கப் போகிறார்களா? விடை தெரிய கவலைகளுடன் பிலால் நகர் மக்கள்.
சமுதாய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் பிலால் நகர் மக்களின் இப்பிரச்சனையை கையிலெடுத்து, இந்த புதிய ஆட்சியிலாவது விடிவு பெற்றுத்தர முன்வர வேண்டும்.
செய்தி
அபு சுமையா
அபு சுமையா
புகைப்படங்கள்
ஆஷிக் அகமது
நன்றி :
அதிரை முஜீப்
No comments:
Post a Comment