Latest News

இயற்கை விவசாயம்

விவசாய நிலத்தை பாழ்படுத்தும் செயற்கை உரங்கள்: இயற்கை விவசாயமே தீர்வு!
விவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால், நிலத்தில் உள்ள மண் புழுக்கள் மடிந்து, நிலம் பாழாகிறது. உணவு தானிய தாவரங்களில், பூச்சி தாக்குதலை சமாளிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித உடலில் மெல்ல மெல்ல விஷம் ஏறி வருகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்அடிப்பது போல், இயற்கை விவசாயத்திற்கு மாறினால், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.

 தமிழகத்தில், உணவு தானிய உற்பத்தியை பெருக்கி, இரண்டாவது பசுமை புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது, தற்போதைய அரசின் கொள்கை முடிவாக உள்ளது. ரசாயன உரங்களை அதிகளவில் விளை நிலங்களில் பயன்படுத்தியதால், 1971ம் ஆண்டில் 1.20 சதவீதமாக இருந்த விளை நிலத்தின் அங்கச்சத்து, 2008ம் ஆண்டில் 0.98 சதவீதமாக குறைந்து விட்டது.ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மண்ணில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்பட்டு, மண் வளம் குறைந்து, உற்பத்தி திறனும் குறைந்து விட்டது... 

 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரசாயன உரங்களை, விவசாயிகள் இன்னமும் பயன்படுத்தித் தான் வருகின்றனர்.அந்த உரம், வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது ஒரு வகையில் பாதிப்பு தான். ஆனால், இதை விட அதிக பாதிப்பு, விவசாய நிலங்களில், பூச்சிக்கொல்லிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த பயன்படுத்தும், பல்வேறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படுகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், உலக சுகாதார மையம், ஒரு சில பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் தாக்கத்தை வெளிப்படுத்தி, அதை தடை செய்து உத்தரவிட்டது. அந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் டி.டி.டி., மற்றும் எறும்பு பொடி எனப்படும் குறுணை மருந்துகளே. பூச்சி தாக்குதலை சமாளிக்க இந்த மருந்துகளை, விவசாய நிலத்திலுள்ள செடியின் மீது, விவசாயிகள் தெளிக்கின்றனர்.

 செடியின் மீது விழுந்த பூச்சிக்கொல்லி பொடி, செடி பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் உள்ள புற்களில் படிகிறது.  புற்களின் வேர்கள், மருந்தை உறிஞ்சுகிறது. அந்த புல்லை, பசு மாடு மேய்கிறது. மாட்டின் பாலை சூடு செய்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிடுகின்றனர். அந்த பாலை சாப்பிடும், ஒரு கர்ப்பிணி தாயின் மார்பில் சுரக்கும் பால், பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படுகிறது. புல், பசு மாடு, மனிதர்கள் என பல நிலைகளை கடந்தும், அந்த பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியம், பசுவின் பாலிலும், அதை சாப்பிடும் பெண்ணின் உடம்பிலும், அந்த பெண்ணின் உடலில் சுரக்கும் தாய்ப்பாலிலும், அந்த பாலை பருகும் பிறந்த குழந்தையின் உடலிலும் இருப்பதை, உலக சுகாதார மையம் வெளியிட்டது.அளவுக்கு அதிகமாக, ரசாயன உரங்களை விவசாய நிலங்களில் இடுவதால், நிலம், பயிர் மற்றும் அதில் விளையும் உணவு தானியங்கள் விஷமாகின்றன. இது இல்லாமல், அதிகப்படியான உரம் அல்லது உரத்தில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், பாசன நீரில் அடித்துச் செல்லப்படுவதால், நீர் நிலைகள் விஷமாகின்றன. ரசாயன உரங்களின் கழிவுகளிலுள்ள நைட்ரஜன் மற்றும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களால், நீர் நிலைகளில், “பச்சை பசேல்என பாசிகள் படர்கின்றன. இதனால், நீர் நிலைகளில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு, நீர் நிலை விலங்குகள் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

 3 மூட்டை ரசாயன உரம் தரும் சத்தை கொளிஞ்சிசெடியால் பெற முடியும்: விளை நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை பெருக்குவதற்கு, உரம் தேவைப்படுகிறது. அவை, இலை, தழை, மாட்டின் எரு என இயற்கை உரமாகவோ, தொழிற்சாலைகளில் செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ரசாயன உரமாகவோ இருக்கலாம்.சணப்பூ, தக்கைப் பூண்டு வகை பசுந்தாள் உரங்களை விட, புதிய கொளிஞ்சி ரகம் சிறப்பானது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது. ஒரு ஏக்கருக்கு, 5 கிலோ விதை தேவைப்படும்.நேரடியாக நிலத்தில் விதைக்கலாம். வறட்சியை தாங்கி வளரக்கூடியது. 30 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். 65 முதல் 70 நாட்கள் வளர்ந்த கொளிஞ்சி பசுந்தாள் உரச் செடியை, அப்படியே மக்கி உழவு செய்ய வேண்டும்.குறைந்தது, 10 நாட்கள் மண்ணில் கொளிஞ்சி மக்கிய பின், விருப்பப்பட்ட செடியை நடவு செய்து மகசூல் பெறலாம். மற்ற பசுந்தாள் உரச் செடிகள், மண்ணில் மக்குவதற்கு வெகு நாட்களாகும். கொளிஞ்சி செடி, விரைவில் மக்கி, மண்ணின் வளத்தை பெருக்குகிறது. மூன்று மூட்டை யூரியா (ரசாயன உரம்) தரும் சத்தை, இந்த கொளிஞ்சி பசுந்தாள் உரத்தால் பெற முடியும்.

 இது குறித்து, விவசாயத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மண் வளத்தை மேம்படுத்தி, உற்பத்தி திறனை உயர்த்த, ரசாயன உரங்களையும், இயற்கை உரங்களையும் சரியான அளவில் பயன்படுத்த, அரசு ஊக்குவித்து வருகிறது. பண்ணைக் கழிவுகளில் இருந்து, புளூரோட்டஸ் மூலம் மக்கு உரம் தயாரித்தல், மண் புழு உரம் தயாரித்தல், உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள் பயன்படுத்தும் திட்டத்தை, வரும் 2011- 2012ம் ஆண்டில், அதிகளவில் பிரபலப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.நீலப்பச்சை பாசி, அசோலா போன்ற உரங்கள், காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தி, நெற்பயிருக்கு கிடைக்கச் செய்கிறது. 2011- 2012ம் ஆண்டில், 525 மெட்ரிக் டன் நீலப்பச்சை பாசி மற்றும் 500 மெட்ரிக் டன் அசோலா உற்பத்தி செய்து வினியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது.சணப்பூ, தக்கைப் பூண்டு, கொளிஞ்சி மற்றும் அகத்தி போன்ற பசுந்தாள் உரப்பயிர்கள், காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தி, மண் வளத்தை அதிகரிக்க உதவுகிறது. தக்கைப் பூண்டு மற்றும் கொளிஞ்சி பயிர்கள், மண்ணின் உவர் மற்றும் அமிலத்தன்மையை நீக்கும் தன்மை கொண்டது.விவசாயிகள், பசுந்தாள் உரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் 250 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 50 லட்சம் ரூபாய் செலவில், 25 சதவீத மானியத்துடன் வினியோகிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

 நன்றி: என்.செந்தில் -தினமலர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.