Latest News

சூடான் – ஏகாதிபத்தியங்களின் புதிய வேட்டைக்காடு!

ஆப்ரிக்கக் கண்டத்தின் மிகப்பெரும் நிலப்பரப்பைக் கொண்ட, பலநு£று மாறுபட்ட பழங்குடி இன மக்களைக் கொண்ட, பாரம்பர்யமும் பண்பாடும் நிறைந்த இஸ்லாமிய நாடுதான் சூடான். நைல் நதியும் சஹாரா பாலைவனமும் சூடான் நாட்டின் மரபு மீறிய அருட்கொடைகள்.
வரலாறு முழுவதும் நிலப்பரப்பால் பரந்து விரிந்து வியாபித்து இருந்த சூடான் நாட்டை கடந்த ஜுலை மாதம் 9-2011 அன்று சூழ்ச்சியும் வஞ்சகமும் ஒரு சேரக் கூடி இரண்டு கூறுகளாகப் பிளக்கப்பட்டு இருசாரரும் மோதிக் கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளனர் ஏகாதிபத்தியவாதிகள். என்ன நடந்தது? வரலாற்றோடு இதன் பின்னணியை அலசுவோம்...
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பூமியின் எந்தப் பகுதியிலும் எந்த நாடும் அகண்ட நிலப்பரப்புகளைக் கொண்டதாக இருக்கக் கூடாது, குறிப்பாக அரபு இஸ்லாமிய நாடுகள் சிறிய சிறிய நாடுகளாகப் பிரிக்கப்பட்டால் மட்டும் தான் நாம் நிம்மதியாக அவர்களின் வளங்களைச் சுரண்டிக் கொட்டமடிக்க முடியும்என்ற திட்டத்தின் அடிப்படையில் பிரிட்டனும் அமெரிக்காவும் இஸ்ரேலோடு சேர்ந்து செய்த சூழ்ச்சியின் விளைவு தான் இன்றைய பிளந்துபோன சூடான். இந்த ஏகாதிபத்திய சதிகாரக் கூட்டம் 1990 லிருந்து இன்று வரை பல்வேறு நாடுகளின் நிலப்பகுதிகளைக் குதறி எடுத்து 30 புதிய நாடுகளை உருவாக்கியுள்ளனர்.
வரலாறு முழுக்க ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக அரபு இன முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடாகத் தான் சூடான் இருந்து வந்தது. 1956 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து சூடான் விடுதலை அடைந்த பிறகு தான் வில்லங்கம் விஸ்வரூபம் எடுத்தது.
சூடானின் வடக்குப் பகுதியில் அரபு இன முஸ்லிம்கள் பெருவாரியாகவும் தெற்குப் பகுதியில் கிருத்துவ மக்களும், பாகன் பழங்குடி மக்களும் பெருவாரியாக வாழ்கின்றனர். இப்போது கிருத்தவர்களும் பழங்குடிகளும் பெரும்பான்மையாக வாழும் தெற்குப் பகுதி தான் தனிநாடாக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கும் புதிதாக பிரிக்கப்பட்ட தெற்கிற்கும் இடையே அமைந்துள்ள அபாய் பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. மற்றொரு சர்ச்சைக்குரிய மேற்குப் பகுதியான டார்ஃபர் பகுதியில் பழங்குடி இன முஸ்லிம்கள், அதாவது மண்ணின் மைந்தர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர்.
வடக்கு சூடான் பகுதியில் அமைந்துள்ள நைல் நதிகள் சங்கமமாகும் கர்து£ம்தான் இதுவரையிலும் ஒருங்கிணைந்த சூடானின் தலைநகராக இருந்தது. தற்போது தெற்கு சூடானைப் பிரித்து ஜீபர்வை தலைநகராக அறிவித்துள்ளது ஐ.நா.சபை. இந்தப் பிரிவினைக்கான விதை இன்று நேற்று விதைக்கப்பட்டதல்ல! பிரிட்டனின் காலனி நாடாக சூடான் இருந்த போதே வடக்கையும் தெற்கையும் பிரிக்க வேண்டும் என்ற சதித் திட்டம் தீட்டப்பட்டது.
1883 லேயே குரோமர் என்கிற பிரிட்டிஷ் அதிகாரி  தான் முதன் முதலாக பிரிவினைச் சிந்தனையை விதைத்தவர். 1916இல் தெற்குப் பகுதியில் வாழ்ந்த மஸாலீத் என்ற பழங்குடி இனத்தைத் து£ண்டிவிட்டவர். அதையே 1918இல் அமெரிக்க அதிபர் வில்சனும் ஊக்கப்படுத்தினார். இந்தச் சதிகாரக் கூட்டத்தின் தொடர் முயற்சியால் 1956 இல் பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து சூடான் விடுபட்ட உடனேயே பிரிவினைக்காக அங்கு உள்நாட்டுப் போர் மூண்டது. சூடான் இராணுவத்திற்கும் தெற்கு சூடான் பிரிவினைவாதிகளுக்குமான இப்போரில் 5 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
இந்த உள்நாட்டு யுத்தம் உச்சத்தில் இருந்தபோது  1967 ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலிற்கும் ஆறுநாள் யுத்தம்நடைபெற்றது. இந்தப் போரில் சூடான் அரசு  அரபு நாடுகளுடன் கூட்டணி சேர்ந்ததால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் சூடானின் தெற்குப் பகுதியில் இருந்த  பிரிவினை வாதிகளுக்கு ஆயுத உதவிகள் செய்து உள்நாட்டுப் போரை ஊக்கப்படுத்தினர்.
பொதுமக்கள் அதிகம் கொல்லப்பட்டனர். புலம்பெயர்வு அதிகம் ஏற்பட்டது. அதனால் உருவான  ஆபத்தான சூழ்நிலையைக் கருதி அமைதி முயற்சிக்கு ஆப்ரிக்க யூனியன் முன் வந்தது. 1972 இல் எத்தியோப்பாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில்  வைத்து அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் கிருத்தவ மக்கள் அதிகம் வாழும் தெற்குப் பகுதிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே அந்நிய சக்திகளின் அரசியல் சதிகள் காரணமாக சூடானில் ஆட்சி அமைப்பதில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பல்வேறு மோதல்கள்  நடைபெற்று வந்தன.
அருகில் உள்ள நாடான எகிப்தின் அன்வர் சதாத்தின் பொதுவுடமைச் சிந்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும், இஸ்ரேலும் கூட்டுச் சேர்ந்து  இந்த மோதலை இருபுறமும் து£ண்டி விட்டனர். பலமுறை ஆட்சிக் கவிழ்ப்பும் இராணுவப் புரட்சியும் நடைபெற்றது. 1969ல் நடைபெற்ற இராணுவப் புரட்சி மூலம் ஜெனரல் ஜாஃபர் நைமீரி அதிபர் பதவியை பிடித்தார். தொடக்கத்தில் எகிப்தின் அதிபர் அன்வர் சதாத்தின் ஆதரவாளரான இவர் அன்வர் சதாத்தின் மறைவிற்குப் பிறகு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் (இஃக்வான்) அனுதாபியாக மாறினார். ஆனாலும் மறுபக்கம் அமெரிக்காவின் ஆதரவாளராகவும் இருந்தார்.
ஷரீஅத் ஆட்சி :
பழங்குடியின முஸ்லிம்கள்
1982இல் சூடானில் வறுமையும் வேலை இல்லாத் திண்டாட்டமும் அதிகரித்து  மிகப் பெரிய அளவில் கலவரம் மூண்டது. இது அரசிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இஸ்லாமிய இயக்கங்களின் நெருக்குதல் அதிகமானதால்  அவற்றைச் சமாளிப்பதற்கு திடீரென்று சூடான் முழுவதற்கும் ஷரீஅத் சட்டத்தை அதிபர் ஜாஃபர் நைமீரி அறிமுகம் செய்தார்.
அதோடு தெற்கு சூடானிற்கு தன்னாட்சி உரிமை கொடுத்து 1972இல் போடப்பட்ட அடிஸ் அபாபா ஒப்பந்தத்தையும் அதிபர் ஜாஃபர் ரத்துச் செய்தார்.
சூடான் முழுமைக்குமான ஷரீஅத் சட்டத்தின் பிரகடனம் சூடானில் வாழ்ந்த முஸ்லிம்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. அதோடு அடிஸ் அபாபா ஒப்பந்தத்தை ரத்துச் செய்ததால் தெற்கு சூடான் பிரிவினைவாதிகளை மீண்டும் ஆயுதம் து£க்க வைத்தது.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமெரிக்கா நேரடியாக பிரிவினைவாதிகளை ஆதரித்தது. 1918 இல் அமெரிக்க அதிபர் வில்சன் தயாரித்த அதே திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துக் கொண்டு 1983இல் (SPLM) SUDAN PEOPLE LIBRATION MOVEMENT என்ற அமைப்பை தொடங்கி தெற்கு சூடான் பிரிவினைவாதிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாவது உள்நாட்டுப் போர் தொடங்கியது.

அரபு இன முஸ்லிம்கள்
இதனால் சூடான் முழுவதும் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. அதே நேரத்தில் அரசு நிர்வாகத்திலும் நீதித்துறை, இராணுவம் போன்றவற்றின் உயர் பொறுப்புகளை முஸ்லிம்களே வகித்துவந்தாலும் கூட  அவர்களுக்கு ஷரீஅத் சட்டங்களிலும் ஷரீஅத் ஆட்சி முறைகளிலும் அவ்வளவாகப் பயிற்சி இல்லாததால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பலவிதமான குளறுபடிகள் நடக்கத் துவங்கின.
அதிபர் ஜாஃபர் நைமீரியும் கூட உள்நாட்டு நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் தான் ஷரீஅத் சட்டத்தை பிரகடனம் செய்தாரே தவிர ஷரீ அத்தை விளங்கி  அதன் தன்மைகளை விளங்கி பிரகடனம் செய்யவில்லை.
ஷரீஅத் சட்டங்கள் குறித்த முறையான பயிற்சி இல்லாத சூடான் அரசின் காவல்துறையும் இராணுவமும் எடுத்த நடவடிக்கைகள் முஸ்லிம்கள் மத்தியிலும் மத இனச் சிறுபான்மையினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஷரீஅத் அடிப்படையிலான அரசின் மூலம் அன்றைய காலத்திற்கேற்ப கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மருத்துவம், பொதுப்பணித்துறை, விவசாயம், வரிவசூல், அறிவியல் தொழில் நுட்பம், வெளியுறவு, உள்நாட்டுக் கலகம், மத, இன சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள், நாட்டின் வளங்களை குடிமக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளித்தல் போன்றவற்றில் துறைசார்ந்த ஷரீஅத் அடிப்படையிலான வழிகாட்டு நெறிகளோ அல்லது உடனடியாகப் பின்பற்றுவதற்கு சமகால முன்மாதிரிகளோ சூடான் அரசிடம் இல்லாமல் போனது.
மேலும் நாட்டில் திடீரென்று ஷரீஅத் சட்டம் அறிவிக்கப்பட்டதால் நவீன உலகியல் போக்கும் உள்நாட்டுச் சமூக அமைப்பும் குறித்த ஆழமான அறிவு இல்லாமல் மார்க்க அறிஞர்களும் திணறிப் போய் சரியான ஷரீஅத் சட்டங்களை எடுத்துக் கொடுக்க முடியாமல் போய்விட்டனர். எந்த ஒரு இனக் குழுவின் கோரிக்கை மற்றும் தேவைகளையும் சூடான் அரசால் முழுமையாக நிறைவேற்ற இயலாமல் போனது. மேட்டுக்குடி முஸ்லிம்களும் ஆதிக்கம் செலுத்தியே சுகம் கண்ட முஸ்லிம் நிலச்சுவான்தார்களும் ஷரீஅத் சட்டத்திற்கு உடன்பட மறுத்தனர்.
அரசு நிர்வாக ரீதியாக தெளிவு இல்லாத நிலையில் உள்நாட்டுக் கலவரமும் உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டே சென்ற குழப்பமான சூழலில் தான் 1990இல் சதாம் ஹுசைன் குவைத் மீது படையெடுத்தார். அந்த வளைகுடா யுத்தத்தில் சூடான் அரசு சதாம் ஹுசைனை ஆதரித்தது. இதனால் சில அரபு நாடுகள் சூடான் மீது ஆத்திரம் அடைந்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியோர் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றனர். சூடான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தனர். இது சூடான் மக்களை மேலும் நெருக்கியது.
மேலும் உள்நாட்டு யுத்தம் உச்சத்தில் இருந்த அதே தெற்கு சூடானில் 1999இல் எண்ணெய் வளம் கண்டறிப்பட்டு கிணறு அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய் சந்தைக்கு வந்ததும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் சூடான் கலவரத்திற்கும் பிரிவினைவாதிகளின் போராட்டத் தீக்கும் எண்ணெய் ஊற்றி உற்சாகப்படுத்தினர். இஸ்ரேல் அரசு ஷிறிலிவி என்ற பிரிவினைவாத அமைப்பிற்கு சேட்டிலைட் படங்கள் கொடுத்து உதவி செய்தது.  எரிடீரியா, ச்சாத் போன்ற நாடுகளை உசுப்பேற்றி பணம் கொடுத்து நைல் நதியின் குறுக்கே பாலம் கட்டி சூடானிற்கு தண்ணீர் கிடைப்பதை தடுத்த நல்ல காரியத்தை (?) செய்தது / செய்து வருகிறது.
2005 இல் ஜார்ஜ் புஷ் நடுவராகஇருந்து (CPA) Comprehensive Peace Agreement – 2005 என்ற ஒப்பந்தத்தை சூடான் அரசிற்கும் தெற்கு சூடான் பிரிவினைவாத அமைப்பிற்கும் இடையே சூழ்ச்சியாக நிறைவேற்றினார். அந்த ஒப்பந்தத்தின் சாரமாக 2011இல் தெற்கு சூடானிற்கு சுதந்திரம் கொடுத்திட வேண்டும் என்று  நிர்பந்தம் செய்தார்.
இதற்கிடையே சூடானின் மேற்குப் பகுதியான டார்ஃபர் பகுதியில் பழங்குடி முஸ்லிம்களுக்கும் சூடான் இராணுவதற்கும் மோதல் ஏற்படவே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல இட்சம்பேர் அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். சூடான் நாட்டிற்குள்ளேயே மக்களுக்கு மத்தியிலும் சண்டை; நிர்வாகத்திலும் குழப்பம், அந்நிய சக்திகளும் நாட்டை துண்டாட துணை செய்தன.
இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய சூடான் அதிபர் உமர் அல் பஷீரை ஐ.நா. சபை குற்றம் சுமத்தியது. டார்ஃபர் பகுதி கலவரத்திற்கு அரபு இன பண்ணையார்களின் ஆதிக்க வெறி தான் காரணம் என்று பழங்குடி முஸ்லிம்கள் குற்றம் சுமத்தினர். பஷீரை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை வைத்தன. இதை சாதகமாகப் பயன்படுத்திய அமெரிக்கா, தெற்குப் பகுதிக்கு சுதந்திரம் கொடுத்தால் சூடானிற்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை விலக்குவதோடு பஷீர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரைக் காப்பாற்றுவதாகவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வஞ்சகமாக வாக்களித்தது. பின்னர் நாட்டைப் பிரிப்பதற்கான நாள் குறிக்கப்பட்டு ஜுலை மாதம் 9 ஆம் நாள் தெற்கு சூடான் என்ற நாட்டையும் உருவாக்கிவிட்டனர்.

சூடான் பழங்குடியின மக்கள்
இவ்வளவு பிரச்சினைகளையும் தூண்டி சூடான் நாட்டை இரு கூறாகப் பிரிப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன.
1. வடக்கு சூடானிற்கும் தற்போது பிரிக்கப்பட்டுள்ள தெற்கு சூடானிற்கும் இடையில் அமைந்துள்ள அபேயிஎன்ற பகுதியில் தான் அதிகப்படியான எண்ணெய் வளம் உள்ளது. அதே போல தெற்கு சூடானிலும் எண்ணெய் வளம் உள்ளது. இந்தப் பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் முழுவதும் வடக்கு சூடான் வழியாக குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு செங்கடல் வழியாக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த கச்சா எண்ணெய்ச் செல்வத்தை முழுமையாகக் கொள்ளையிட வேண்டும். என்பதற்காக
2. ஐ.நா.சபையின் துணையோடு அமெரிக்காவும் இஸ்ரேலும் பல முஸ்லிம் நாடுகளில் உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டிவிட்டு வளமான பகுதிகளை பிரித்தெடுத்து வளத்தை உறிஞ்சுவதோடு அந்த நாடுகளில் இராணுவத் தளங்களையும் அமைத்து வருகின்றன. சமீபத்திய உதாரணம் புதிதாக உருவான கோசோவோ நாடு. பால்கன் பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் மிகப் பெரிய தளம் கொசோவோவில் தான் அமைந்துள்ளது.
தெற்கு சூடானில் அதே போன்றதொரு அமெரிக்க இராணுவ தளத்தை அமைத்து அரபு நாடுகளை நெருக்கவே இந்த தெற்கு சூடான் பிரிவினை என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க இஸ்ரேல் கூட்டு ஏகாதிபத்தியத்திற்கு உலகில் ஒரு வலிமையான மாற்று இல்லாத காரணத்தாலும், பொருளாதார ரீதியாக வலிமை இருந்தும் அதை அரசியல் வலிமையாக மாற்றிடும் துணிச்சல் இல்லாத அரபு நாடுகளும், முஸ்லிம் நாடுகளின் நிலப்பரப்புகள் துண்டாடப்படுவதையும் வளங்கள் சுரண்டப்படுவதையும் வேடிக்கை தான் பார்க்கின்றன.
உலகில் தோன்றும் எல்லா விதமான ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை முறித்து நீதியான ஆட்சி முறையை உலகிற்கு நவீன அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியோடு வழங்கிடும் ஆற்றல் பொருந்திய உலகின் வழிகாட்டியான உலகப் பொது மறையான அல்குர் ஆனும் பெருமானாரின் வழிகாட்டுதலும் அப்படியே பசுமையாக இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்திடத் தேவையான பொருளாதார வளத்தையும் இறைவன் முஸ்லிம்களிடம் கொடுத்துள்ளான். அவற்றை முன்னின்று நடத்திடும் அறிவும் ஆற்றலும் பொருந்திய ஒரு தலைவனைத் தான் இன்றைய காலத்திற்கு இன்னமும் இறைவன் கொடுத்திடவில்லை. எப்போது வருவான் அந்த தலைவன்? இறைவன் ஒருவனுக்கே வெளிச்சம்.
நன்றி: 'சமூக நீதி முரசு' மாத இதழ்
http://www.samooganeethi.org/?p=1018

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.