சமச்சீர் கல்வித் திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்ட பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவினை வரவேற்பதாக இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் தெரிவித்துள்ளார். மேலும், அரசின் நிதி ஒதுக்கீட்டை சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிப்பதாகப் புகார்கள் வருவதால் இதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழக அரசின் கீழ் வெவ்வேறு வகையில் செயல்பட்டு வந்த பள்ளிக் கல்வித்துறையை ஒரே துறையாக ஆக்கிடவும், மாநில அரசின் கல்வித் திட்டம் ஒரே சீராக அமையவும் செய்வதே சமச்சீர் கல்வித் திட்டத்தின் முதல் குறிக்கோள். அதனை முந்தைய தி.மு.க. அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை. மேலும்,பாடத்திட்டத்தில் நாத்திகவாதத்தை வேண்டுமென்றே புகுத்தியதும், இருக்கும் பாடத்தை எளிமைப்படுத்தி மாணவர்கள் செயல்திறனைக் குறைக்கவும் எடுத்த நடவடிக்கைகள் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து இந்து முன்னணி போராடியது. மேலும் பல கட்சிகளும், கல்வியாளர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர்...
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சமச்சீர் கல்வியைச் சீர்ப்படுத்தி, திறமையான கல்வியாளர்களைக் கொண்டு சிறந்த கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினை இந்து முன்னணி ஆதரிக்கிறது; பாராட்டுகிறது. இவ்வாறு நிறுவப்படும் கல்விக் கொள்கை கல்லூரிப் படிப்பு வரை ஒரே சீராக இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
கல்வித்துறைக்கு அளிக்கப்படும் நிதி ஒதுக்கீட்டைக் கொள்ளையடிக்கும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் குறித்த பல புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. அரசின் பணம் கொள்ளை போவதைத் தடுக்கவும், அளிக்கப்படும் சலுகைகளால் மக்கள் பயன்பெறவும் அரசு தகுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment