காற்றடைத்த பலூன் ஒரே நாளில் உடைந்துவிட்டது.
ராம்தேவிடம் கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்த மன்மோகன் அரசு நேற்று இரவில் மிஞ்சிவிட்டது. ஜாலியாக களைகட்டியிருந்த உண்ணாவிரதப் பந்தலில், ராம்தேவை கைதுசெய்ய டெல்லி போலீஸின் முஸ்தீபுகள் தெரிந்தன. மேடையிலிருந்து துள்ளி பக்தகோடிகள் மத்தியில் குதித்து, வீராவேசமாகப் பேசினார் யோக குரு. சினந்த பக்த கோடிகள் போலீஸின் மீது கற்களை வீசினர். டெல்லி போலீஸ் அதன் முகத்தை லேசாய்த்தான் காட்டியது. சில கண்ணீர்ப் புகைகுண்டுளும், சில லத்திகளும் போதுமானதாய் இருந்தன. அவ்வளவுதான். “ஊழலை ஓழிக்காமல் உஜ்ஜய்னி திரும்ப மாட்டேன்”, என்றும், “என் கடைசி மூச்சு வரை கறுப்புப் பணத்தை எதிர்த்து போராட்டத்தைத் தொடருவேன்” என்றும் சூளுரைத்த யோக குருவை காணாமல் ஆக்கிவிட்டனர் போலீஸார். திசை தெரியாமல் பக்தகோடிகள் தெறித்து ஓட, ராம்லீலா மைதானம் காலியாகிப் போனது.
போராடுகிற தொழிலாளர்களை, இதே டெல்லியில், இதே போலீஸ் எத்தனையோ முறை கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறது. ஈவிரக்கமின்றி அடக்குமுறைகளை ஏவியிருக்கிறது. அப்போதெல்லாம் நடிக நடிகையரின் உடல்களிலும், அந்தரங்கங்களிலும் மோப்பம் பிடித்துக் கிடந்த தொலைக் காட்சிகள் மூச்சுவிடாமல் இன்று காலையிலிருந்து ஒரே ராம்தேவ் பஜனை செய்துகொண்டு இருக்கின்றன. அதிலும் இந்த என்.டி.டிவி, டைம்ஸ்நவ் போன்ற இந்தியாவின் பிரதான ஆங்கிலச் செய்தி தொலைக் காட்சிகள் படுத்துகிற பாடு தாங்க முடியவில்லை. எதோ வானமே இடிந்துவிட்டது போல “ஐயோ, ஐயோ” என பெரும் கூப்பாடு போட்டு தொலைக்கின்றன...
“காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை” என்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். "எமர்ஜென்ஸி காலத்து இந்தியா போலிருக்கிறது” என்று பதறுகிறார் அத்வானி . “ஜனநாயகம் செத்துவிட்டது” என்கிறார் சமூக ஆர்வலர்களின் கொம்பாக முளைத்திருக்கும் அன்னா ஹசாரே. “மன்மோகன் உடனடியாக ராஜினாமாச் செய்ய வேண்டும்” வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கிறார்கள் வலதுசாரி அறிவுஜீவிகள். எல்லோரையும் தேடித் தேடி குரல்களை சேகரித்துக் கொண்டு இருக்கின்றன ஊடகங்கள்.
ஒரு சாதாரணமான போராட்டத்தை ஊதி ஊதிப் பெருக்க வைத்த ஊடகங்களுக்கும், வலதுசாரிக் கும்பல்களுக்கும் கண்முன்னால் அந்தப் போராட்டம் மிகச் சாதாரணமாக முடிந்து போனதை தாங்கிக்கொள்ளமுடியாத பொருமல்கள் தெரிகின்றன. அவர்கள் கட்டியிருந்த மனக்கோட்டைகள் எல்லாம் மண்கோட்டையாகித் தரைமட்டமானப் பார்க்க முடியாத பதற்றம் இது. எதாவது செய்து, போராட்டத்தை உசுப்பி விட முடியுமா என பார்க்கிறார்கள். இங்குதான் புலிகளைப் பார்த்து பூனைகள் சூடு போட்டுக்கொண்ட கதை வருகிறது. அதுவும் காவிப்பூனைகள்!
சமீப காலங்களில் எகிப்தில் ஆரம்பித்து சில வளைகுடா நாடுகளில் ஆளும் அரசுக்கெதிராக மாபெரும் மக்கள் திரள் அந்நாட்டின் தலைநகர்களில் சங்கமித்து பெரும் கிளர்ச்சிகளை ஏற்படுத்தியதை பார்க்க முடிந்தது. அந்த நிகழ்வுகளை விவாதித்த ‘டைம்ஸ்நவ்’ தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளர், “இந்தியாவில் இதுபோன்ற மக்கள் எழுச்சிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறதா?” எனக் கேட்டார். அது விளையாட்டான கேள்வி அல்ல. அதிலிருந்துதான் அன்னா ஹசாரேவும், ராம்தேவும் புறப்பட்டு வந்தார்கள்.
கடுமையான விலைவாசி உயர்வும், பெரும் ஊழல்களும் மலிந்த காங்கிரஸ் ஆட்சி மக்களிடம் இருந்து தனிமைப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதுதான் தருணம் என பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி போன்ற வலதுசாரிக்கும்பல்கள் தங்கள் திட்டத்தை வகுக்கின்றனர். தாங்கள் இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்தால் மக்களின் ஆதரவு பெரிதாகக் கிடைக்காது என்று, அரசியலுக்கு அப்பாற்பட்டு புனிதர்கள் போன்றிருக்கும் அன்னா ஹசாரே, ராம்தேவின் பின்னால் நின்று ஊழலுக்கு எதிரான போர்களை நடத்த முன்வருகிறது. அப்போதும் மக்களை வாட்டும் விலைவாசி உயர்வை அவர்கள் கையிலெடுக்கவில்லை. நாடு, நாட்டின் பெருமை, அதற்கு களங்கம் சேர்க்கும் ஊழலை மட்டுமே பேசினார்கள். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை முன்வைக்காமல் நாட்டை முன்வைத்துத்தான் வலதுசாரிகள் எப்போதும் மக்களைத் திரட்டுவார்கள். அதுதான் நடந்தது.
இரண்டு போராட்டங்களையும் அவர்கள் இந்தியத் தலைநகரை குறிவைத்தே நடத்தினார்கள். இணையம், தொலைக்காட்சிகளில் பெருமளவுக்கு செய்திகள் பரிமாறப்பட்டன. மக்களின் ஆதரவை திரட்டினார்கள். இதன் அரசியல் அறிந்த/அறியாத மக்கள் “தேவன் வந்துவிட்டான்’ என ஆரவாரம் செய்தனர். அன்னா ஹசாரேவுக்கு திரண்ட ஆதரவு உற்சாகம் தந்தது. அடுத்து ராம்தேவை உசுப்பி விட்டனர். ஊடகங்கள் மூலம் அலப்பறை செய்தனர். ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பியினரையும், ராம்தேவின் பக்தகோடியினரையும் மெல்ல மெல்ல டெல்லியில் திரட்டி, மக்கள் வெள்ளத்தைக் காட்டி, ‘மாபெரும் கிளர்ச்சி’யாக்கிட நினைத்தனர். இதைத்தான் முந்தைய பதிவில் அரசியல் விபரீதம் என குறிப்பிட்டு இருந்தேன். எல்லாம் பொசுக்கென்று போனது. வஞ்சக மூளை கொண்ட அரசு முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டது. அதைத் தாங்க முடியாத வேகத்தைத்தான் இன்றைய கூச்சல்களில் பார்க்க முடிகிறது.
காங்கிரஸ் அரசு மக்களுக்கும், தேசத்துக்கும் விரோதமானது என்பதில் சந்தேகமில்லை. மக்களின் துயரங்களிலும், வலியிலும் தோய்ந்து எழுந்த போராட்டங்களுக்குத்தான் கிளர்ச்சிகள் என்று பெயர். இதுபோன்ற ஜிகினாப் போராட்டங்களுக்கும் புறவாசல் முயற்சிகளுக்கும் அல்ல.
நன்றி : தீராத பக்கங்கள்
No comments:
Post a Comment