வாஷிங்டன், மே.4-
பாகிஸ்தானில் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. பின்லேடன் வசித்த வீட்டை 9 மாதங்களாக அமெரிக்கா தீவிரமாக கண்காணித்ததும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு நியூயார்க் இரட்டை கோபுரங்களை தகர்த்து 3 ஆயிரம் பேரை கொன்ற பின்லேடனை பிடிக்க அமெரிக்க ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அந்த தாக்குதல் நடந்தபோது ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடன், அமெரிக்காவில் தேடுதல் வேட்டை காரணமாக இந்துகுஷ் மலைப்பகுதியில் ஒளிந்தார். செயற்கை கோளால் கூட, அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி அன்று நள்ளிரவில் பாகிஸ்தான் தலைநகர் அருகே பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார்...
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த பின்லேடன், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் ஒரு பங்களாவில் வசித்து வந்தார். இதை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க ராணுவத்தின் உளவுப் பிரிவை சேர்ந்தவர்கள் கண்டு பிடித்தனர்.
இரண்டு சகோதரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மூன்றாவது ஒரு பெரிய குடும்பம் ஆகியவை அங்கு வசிப்பது தெரிய வந்தது. அதன் பிறகு, அந்த வீட்டை அமெரிக்க புலனாய்வு துறை, பாதுகாப்பு ஏஜென்சி, தேசிய உளவு அமைப்பு போன்றவை அங்குலம் அங்குலமாக கண்காணிக்க தொடங்கின. அதற்காக உளவு செயற்கை கோள்கள், உளவு விமானங்கள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டன.
அப்போது வழக்கத்துக்கு முரணான வகையில் அந்த வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதையும் 12 முதல் 18 அடி உயரம் வரை சுற்றுப்புற பாதுகாப்பு சுவர்கள் இருப்பதை பார்த்து அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். எனினும், அங்கு பின்லேடன் வசிக்கலாம் என்ற நம்பிக்கை சிறிதளவும் ஏற்படவில்லை.
தொடர்ச்சியாக நடந்த கண்காணிப்பின் விளைவாக, கடந்த மார்ச் மாதத்தில்தான் அங்கு பின்லேடன் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால், குறிப்பிட்ட சில உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே அந்த தகவல் தெரிவிக்கப்பட்டு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் பின்லேடன் பற்றி கூறப்பட்டது.
இறுதியில் பின்லேடன் வசிக்கும் வீட்டின் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு, மூன்று வித யோசனைகள் முன் வைக்கப்பட்டன. பின்லேடனை உயிருடன் பிடிப்பது, சுட்டுக் கொல்வது, கட்டிடத்தின் மீது குண்டு வீசுவது ஆகியவையே அந்த யோசனைகள்.
இந்த 3 யோசனைகளில் எதை செயல்படுத்துவது என்பதில், அமெரிக்க ராணுவ உளவுத் துறை உயர் அதிகாரிகளுக்கு இடையே ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. குண்டு வீசினால் அருகில் வசிக்கும் மக்களும் பாதிப்படைவார்கள். மேலும், பின்லேடன் இறப்பை உறுதி செய்ய முடியாது.
எனவே, பின்லேடனை சுட்டுக் கொல்வது என முடிவு எடுக்கப்பட்டது. இந்த இறுதி முடிவை ஒபாமா எடுத்தார். அதை அதிகாரிகள் அனைவரும் ஒப்புக் கொண்டனர். பின்லேடன் உயிருக்கு குறி வைத்ததும் அந்த வீட்டை தாக்கும் நடவடிக்கை தொடர்பாக திட்டம் வகுக்கப்பட்டது. பெரிய அளவில் தாக்குதல் நடத்தாமல் சிறிய அளவில், வீரியமான தாக்குதலை நடத்த அமெரிக்கா முடிவு செய்தது.
அந்த கட்டிடத்தில் வசிப்பவர்களை தவிர, வெளியே யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படாதவகையில் அதிரடியான ரகசிய தாக்குதலாக இருக்க வேண்டும் என்பதில் ஒபாமா உறுதியாக இருந்தார்.
எனவே, ராணுவ உளவுப் பிரிவில் உள்ள கமாண்டோ படையின் 'சீல் (எஸ்.இ.எ.எல்)' வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வீரர்கள் அனைவருமே கடல், வான், தரை என மூன்று பகுதியிலும் போரிடும் திறமை வாய்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்லேடனை கொல்வதற்கான உத்தரவுக்கு கடந்த 29-ந் தேதி அன்றே ஒபாமா ஒப்புதல் அளித்து விட்டார். ஆனால், அதை அவர் வெளிக்காட்டவே இல்லை.
அன்றைய தினம், சூறாவளியால் பாதிக்கப்பட்ட அலபாமா மாகாணத்துக்கு தனது மனைவி மிச்செலியுடன் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், வாஷிங்டனுக்கு திரும்பி வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். காலையில் வழக்கமான விளையாட்டு பயிற்சியும் மேற்கொண்டார். ஆனால், எந்த நேரத்திலும் அவருடைய முகத்தில் எந்தவித மாறுபாட்டையும் யாரைலும் பார்க்க முடியவில்லை. பின்லேடன் பற்றி தப்பித் தவறி கூட அவர் பேசவில்லை.
அதே நேரத்தில், பின்லேடன் மீதான தாக்குதலை நடத்துவதற்கான நேரத்தை கடத்துவதால் தகவல் கசிந்து அவர் தப்பிச் செல்லக்கூடும் என்றும் அதிகாரிகள் அச்சம் அடைந்தனர். இறுதியாக மே 1-ந் தேதி அன்று இரவு (அமெரிக்க நேரப்படி) பின்லேடனை சுட்டுக் கொல்லும் உத்தரவில் அதிகாரப்பூர்வமாக ஒபாமா கையெழுத்திட்டார். 29-ந் தேதியில் இருந்தே ஒபாமாவோடு பல்வேறு கட்ட ரகசிய ஆலோசனையில் ஈடுபட்ட உளவுத் துறையினர் சுறுசுறுப்பாக செயலில் இறங்கினர்.
ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் விமானப்படை தளத்தில் இருந்து 79 'சீல்' கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் அதிரடியாக புறப்பட்டனர். அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளில் ஒரு சிலர், உளவுத் துறை உயர் அதிகாரிகளில் ஒரு சிலர் உட்பட குறிப்பிட்ட நபர்களைத் தவிர வேறு அமெரிக்க அதிகாரிகள் யாருக்கும் இந்த அதிரடி தாக்குதல் குறித்து தகவல் தெரியாது.
அதே நேரத்தில், பாகிஸ்தானின் அபோதாபாத் நோக்கி அமெரிக்க வீரர்கள் பறந்து கொண்டிருந்தனர். இஸ்லாமாபாத் அருகே உள்ள பின்லேடனின் வீட்டை அடைந்ததும் ஒரு ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்தபடி கண்காணித்தது. ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வீரர்கள், அந்த வீட்டின் மாடியில் இறங்கினார்கள். மற்றொரு ஹெலிகாப்டர் அந்த வீட்டின் வெளிப்பகுதியில் இறங்கியது.
அதில் இருந்த வீரர்களும் மாடியில் இறங்கிய வீரர்களும் அந்த வீட்டின் ஒவ்வொரு அறையாக புகுந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு பின்லேடன் இல்லை. மூன்றாவது மாடிக்கு சென்றபோதுதான் அங்கு அவர்கள் பின்லேடனை பார்த்தார்கள்.
நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த அதிரடி தாக்குதலை பின்லேடன் எதிர்பார்க்கவில்லை. மூன்றாவது மாடியில் சல்வார் கமீஸ் அணிந்தபடி இருந்த பின்லேடன், எதிர் தாக்குதலில் ஈடுபட்டார். ஒரு பெண்ணை கேடயமாக வைத்துக் கொண்டு சண்டை போட்டார். இது தவிர, அவருக்கு தகவல் கொண்டு வரும் இரண்டு நபர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தான் ராணுவத்துக்கே தெரியாமல் முற்றிலும் அமெரிக்க கமாண்டோ படையினர் மட்டுமே நடத்திய இந்த தாக்குதல் 40 நிமிடங்கள் நீடித்தது. பின்லேடன் இடது கண் மீது குண்டு பாய்ந்து சாகும் வரையிலும் தாக்குதல் நடத்தி இருக்கிறார். இந்த தாக்குதலில் பின்லேடன் மட்டுமல்லாமல் மனித கேடயமாக இருந்த பெண், பின்லேடன் மகன் காலித் மற்றும் பின்லேடனுக்கு தகவல் கொண்டு செல்லும் இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கி சண்டைக்குப்பிறகு, பின்லேடனின் பாதுகாவலர் ஒருவரின் உடல் அந்த கட்டிடத்தின் காம்பவுண்டுக்குள் கிடந்தது.
மேலும் இரண்டு பேரின் உடல்கள், வரவேற்பு அறையில் கிடந்தன. துப்பாக்கி சண்டை நடந்த போது அங்கு பின்லேடனின் இரண்டு மனைவிகள் மற்றும் ஒரு பெண் இருந்தார். குண்டு காயம் அடைந்த அந்த பெண், ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் பின்லேடனை காப்பாற்ற முயன்றதில் காயம் அடைந்ததாக தெரிகிறது.
அந்த காம்பவுண்டில் இருந்த 2 வயது முதல் 12 வயது வரையிலான 9 பேரை ராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அவர்களில் பின்லேடனின் 11 வயது மகளும் ஒருவர். பின்லேடன், எப்போது, எப்படி இந்த மாளிகைக்கு வந்தார்? என்று அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
சுட்டுக் கொல்லப்பட்டது பின்லேடன் தான் என உறுதி செய்வதற்காக ரத்த மாதிரிகளை சேகரிக்க தடயவியல் நிபுணர் ஒருவரும் சென்றிருந்தார். அதன்படி, சுட்டுக் கொல்லப்பட்டது பின்லேடன் தான் என 99.9 சதவீதம் அளவுக்கு டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஒருவேளை வெள்ளைக் கொடி ஏந்தி சமாதானத்துக்கு வந்திருந்தால் பின்லேடனை உயிருடன் பிடித்திருப்போம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் முடிந்ததும் வீரர்கள் சென்ற ஹெலிகாப்டரில் ஒன்று பழுதடைந்து விட்டது. எனவே, அந்த வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்திவிட்டு ஹெலிகாப்டரை அமெரிக்க வீரர்கள் அழித்து விட்டனர். பின்னர், ஆப்கானிஸ்தானுக்கே திரும்பினார்கள்.
இவ்வளவு சம்பவங்களும் பாகிஸ்தான் ராணுவத்துக்கே தெரியாமல் நடந்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர், 'நல்ல வேளையாக, பாகிஸ்தான் உதவி தேவைப்படவில்லை' என கூறினார்.
ஜலாலாபாத்தில் இருந்து அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தானை நோக்கி பறந்து வந்தபோது, பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்த ஹெலிகாப்டர்களை பார்த்துவிட்டு ஏதோ எதிரி விமானம் அத்துமீறி நுழைகிறது என்று நினைத்து தாக்குதல் நடத்திவிடக்கூடாது என்ற பதைபதைப்பும் அமெரிக்க வீரர்களிடம் இருந்தது.
ஆனால் அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து பறந்துவந்து, தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் ஆப்கானிஸ்தான் செல்லும் வரை இந்த ஹெலிகாப்டர்களை பாகிஸ்தான் ராணுவத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பாகிஸ்தானில் நடந்த இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகளை அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமர்ந்து கொண்டு ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். 40 நிமிடமும் பரபரப்பான நிலையில் ஒபாமா அமர்ந்திருந்தார். தாக்குதல் நடந்த சமயத்தில் வெள்ளை மாளிகையின் மேற்கு பகுதியில் யாரையும் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அங்கிருந்து தான், தாக்குதலின் நேரடி காட்சிகளை ஒபாமா, ஹிலாரி, சி.ஐ.ஏ. தலைமை இயக்குனர் உள்ளிட்டோர் கண்காணித்தனர்.
பின்லேடன் வசித்த வீட்டில் 23 குழந்தைகள் மற்றும் 9 பெண்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பின்னர் ஒப்படைக்கப்பட்டனர். பின்லேடனுடன் சுட்டுக் கொல்லப்பட்ட பெண், அவருடைய மனைவிகளில் ஒருவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. அபோதாபாத் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பின்லேடன் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment