தேர்தல் ஆணையத்தின் வானளாவிய அதிகாரம் என்ன என்பது இந்தியாவில் டி.என். சேஷன் வந்த பிறகுதான் அனைவருக்கும் தெரியவந்தது. இப்போது ஒவ்வொரு தேர்தலிலும் அந்த அதிகாரத்தின் வீச்சினைக் காண முடிகிறது. இந்தத் தேர்தலில் இப்போதே, இன்னும் கூட்டணிகள் கூட முடிவடையாத நிலையிலேயே தனது அதிகாரம் என்ன என்பதை வெளிப்படுத்தத் தொடங்கி இருக்கிறது.
முதல் நடவடிக்கையாக, சுவர்களில் எழுதப்பட்டிருந்த கட்சிச் சின்னங்கள், கொடிகள் அனைத்தையும் அழியுங்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியதும் மறுபேச்சே இல்லாமல் எல்லாவற்றையும் அழித்துவிட்டு வந்து நிற்கும் அரசியல் கட்சிகள் அடக்கமாகக் கேட்கின்றன, "வேறு எப்படித்தான் தேர்தல் பிரசாரம் செய்வது?' இதிலும்கூட, குரல் தணிந்து கிடக்கிறது...
வேறு சந்தர்ப்பங்களில் சாதாரண "லெட்டர் பேட்' கட்சிகளிடம்கூட இதெல்லாம் காணமுடியாத பண்புகள் ஆகும். ஆனால், இத்தகைய மாற்றத்தைத் தேர்தல் ஆணையத்தின் ஒரேயொரு உத்தரவு உண்டாக்கிவிட்டது. பேரூராட்சி, ஊராட்சிகளில் வேண்டுமானால் அனுமதி பெற்று சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்யுங்கள், ஆனால் நகராட்சி, மாநகராட்சிகளில் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் பதிலாக இருக்கிறது.
மத்திய உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி தனது தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக்காக சென்னை, மதுரை வந்ததை அமைச்சர் பணிக்காக வந்ததாகக் காட்டியிருப்பதற்கு விளக்கம் அளிக்கும்படி, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு அமைச்சர் மு.க. அழகிரி இந்த வருகை அரசு அலுவலகப் பணி சார்ந்தது என்று விளக்கம் அளிப்பார் என்றாலும், இத்தகைய நடவடிக்கையை, காபந்து அரசில் அங்கம்வகிக்கும் தமிழக அமைச்சர்கள் பலரும் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
இப்போது வருவாய்ப் புலனாய்வு இயக்ககத்துக்குத் தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. சந்தேகத்துக்கு இடமான வகையில் வங்கிகளில் அதிக அளவில் பணத்தை எடுப்பதையோ அல்லது அதிக அளவு பணத்தை கையில் எடுத்துச் செல்வதையோ, வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டிலிருந்து பணம் வந்து சேருவதையோ கண்காணிக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இதனடிப்படையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உரிய அதிகாரிகளுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தல் செய்துள்ளனர்.
இதேபோன்ற அறிவுறுத்தல்களை ஏற்கெனவே நேரடி வரிவிதிப்பு மத்திய வாரியம், மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதன் அடிப்படை நோக்கம் தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா நடைபெறுவதைத் தடுப்பதுதான்.
தேர்தல் ஆணையம் எத்தனைதான் கிடுக்கிப்பிடி போட்டாலும், ஏதாவது ஒரு சட்டத்தின் ஓட்டையை வைத்து அரசியல்கட்சிகள் தங்களுக்கு சாதகமானவற்றைச் சாதித்துக்கொள்கின்றன. இப்போது தேர்தல் ஆணையம் இத்தகைய கண்காணிப்பு அறிவுறுத்தலை வெளியிட்டாலும்கூட இது மனுதாக்கலின்போதுதான் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, அதற்குள்ளாக பணத்தை அந்தந்த ஒன்றிய அளவில் கொண்டுபோய் சேர்த்துவிடும் முயற்சியில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. இதைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.
கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்து கடந்த இரு நாள்களாகப் பணம் ரொக்கமாகக் கொண்டு வரப்படுகிறது என்று சாதாரண கட்சித் தொண்டர்களும் பேசிக்கொள்ளும் பேச்சாக இருக்கும்போது, இவை தேர்தல் ஆணையத்துக்கோ அல்லது இதற்கென அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகளுக்கோ அல்லது தமிழகக் காவல்துறைக்கோ தெரியாது என்று சொல்லிவிட முடியாது.
வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாள் முதலாக இத்தகைய பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முனைவதைக் காட்டிலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள்முதலாகவே இத்தகைய, அளவுக்கு அதிகமான பணத்தை உரிய காரணம் இல்லாமல் கொண்டு செல்வதைத் தடுக்கும் அல்லது கண்காணிக்கும் பணியைத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் இந்த நடவடிக்கை முழு பயனுள்ளதாக மாறும்.
தேர்தல் ஆணையம் நினைத்தால் இப்போதும்கூட இந்த, கணக்கில் காட்ட முடியாத பெருந்தொகையை ரொக்கமாக வைத்திருப்போர் யார் என்பதை உளவுப்பிரிவு மூலம் கண்டறிந்து, அவர்தம் வீடுகளில் சோதனை நடத்தி, காரணம் சொல்ல முடியாமல் வைக்கப்பட்டிருக்கும் அதிகப்படியான பணத்தைப் பறிமுதல் செய்ய முடியும்.
நிதிப் புலனாய்வுப் பிரிவும் இந்த அறிவுறுத்தலுக்குக் கட்டுப்படும் என்பதால், வங்கிகளில் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாகப் பணம் எடுக்கும் நபர், நிறுவனம் பற்றிய மொத்த விவரங்களையும், மொத்த வங்கிகளிடமிருந்தும் பெறுவது மிகச் சுலபம். இவர்களில் சந்தேகத்துக்கு இடமானவர்கள் யார் என்பதைக் கண்டறிவதும்கூட சுலபம்.
இந்த நடவடிக்கைகளைத் தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் மட்டுமன்றி, அண்டை மாநிலத்தில் உள்ள வங்கிகளில் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாகப் பணம் எடுப்பவர்கள் பற்றிய விவரங்களையும் சேகரித்துப் பார்த்தால்தான், அண்டை மாநிலங்களின் வழியாக தமிழ்நாட்டுக்குள் பணம் வரும் வாசல்கள் தெரியும். அவை வந்து சேர்ந்த இடமும் உளவுத்துறை மூலம் தெரியவரும்.
தேர்தல் கூட்டணியும், யாருக்கு எந்தத் தொகுதி என்பதும் முடிவாகாத நிலையில், எந்தவொரு அரசியல் கட்சியும் இப்போதே பணப்பட்டுவாடா செய்யாது என்பது நிச்சயம். ஆனால், தேர்தல் ஆணையம் இப்போதே விழிப்புடன் செயல்பட்டால், பணப்பட்டுவாடாவை இந்தத் தேர்தலில் பெருமளவு
தகவல்
அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment