Latest News

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். "கிட்னி ஸ்டோன்' என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது.
சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம்; சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம்; சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம்; கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம்.
கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி. சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும்.




இதனால் உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம்.


தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது. பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு.
 அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும். எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார்.


 சில நேரங்களில், .வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம்.
 கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை.
 கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது.
 சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது. சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.
 * பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.
 * சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.
 * வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.
 * மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.
 * தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவது நல்லது.
தகவல்: அதிரை ஜவாஹிர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.