Latest News

  

மன்னிப்புக்கோரும் வரை இஸ்ரேலுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும்: அர்தூகன்

கடந்த மே மாதம் காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'மாவி மர்மரா' எனும் துருக்கியக் கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்காக இஸ்ரேல் பகிரங்க மன்னிப்புக் கோரும்வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகமான உறவுகளையும் பேணப்போவதில்லை என துருக்கியின் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன் உறுதியாகத் தெரிவித்துள்ளார் 

ஃபிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தமது மனிதாபிமானமற்ற செய்கைக்காக இஸ்ரேல் கட்டாயம் மன்னிப்புக் கோரி, உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அதன் பின்பே அந்த நாட்டுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கியப் பிரஜைகள் உயிரிழந்ததோடு மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவ்விரு நாடுகளுக்குமிடையிலான சுமுக உறவு சீர்குலைந்தது. இது குறித்துக் கருத்துரைத்த துருக்கியப் பிரதமர், தம்மிரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு இஸ்ரேல்தான் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

"தம்மையொத்த சகமனிதர்களுக்கு உதவவேண்டும் என்ற ஒரே நல்லெண்ணத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானத் தன்னார்வத் தொண்டர்கள் பயணித்த ஒரு கப்பல் மீது, அதுவும் துருக்கியின் தேசியக் கொடியைத் தாங்கிச் சென்ற ஒரு கப்பல்மீது இஸ்ரேலிய வான்படையும் கடற்படையும் அடாவடியாகத் தாக்குதல் நடாத்தியதை நாம் எப்படி மன்னித்து மறக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார். 

"சரி, அவர்கள் அந்தக் கப்பலில் இருந்து ஆயுதங்கள் எவற்றையேனும் கண்டுபிடித்து விட்டார்களா? இல்லை. எனவே, நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற இழிசெயலை இஸ்ரேலினால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது" என்று அவர் சுட்டிக்காட்டினார். 

தமது பிரதமரின் அறிக்கையைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூதொக்லு, சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ரீடம் ஃபுளோடில்லா நிவாரணக் கப்பல்கள் மீது அடாவடியாகத் தாக்குதல் நடத்திய இழிசெயலுக்காக இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்கும் வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகத் தொடர்புகளையும் வைத்திருக்காது என்று வலியுறுத்தியுள்ளார். 

கடந்த செய்வாய்க்கிழமை (09.11.2010) ரோம் நகரில் உள்ள துருக்கியத் தூதுவராலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த துருக்கியின் வெளியுறவு அமைச்சர், இதேநேரம் இஸ்ரேலுக்குப் பதிலாக வேறு ஒரு நாடு இத்தகையதொரு தாக்குதலை நிகழ்த்தியிருக்குமானால், அந்த நாடு சர்வதேச ரீதியான பொருளாதாரத் தடைகளைத் தற்போது எதிர்கொண்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
நன்றி : இந்நேரம்.காம்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.