இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியாவிற்கு வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்தியர்கள் வரவேற்க வேண்டுமென அறிக்கை விட்டுள்ளார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.
ஒரு நாட்டின் அதிபர் ஒரு நாட்டிற்கு வரும்பொழுது அந்நாட்டு குடிமக்கள் வரவேற்க வேண்டும் என சொல்வதில் எந்த குற்றமுமில்லை தான். ஆனால் இதை சொல்வதற்கு வைகோவிற்கு அருகதை உள்ளதா? என்பது தான் எமது விமர்சனம். காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன் அரச முறை பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குய்யோ முறையோ என கூக்குரலிட்டு மத்திய அரசை விமர்சனம் செய்து போராட்டக்களம் கண்டவர் தான் இந்த நியாயவான்(?) நடுநிலையாளர்(?) திரு. வைகோ அவர்கள்.
அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன? இலங்கையில் தமது சொந்த மண்ணுக்காக போராடிய போராளிகளை(?) விடுதலைபுலிகளை கொன்று குவித்தாராம், இனப் படுகொலை செய்தாராம் இந்த ராஜ பக்சே அதனால் எதிர்த்தாராம் இந்த நடுநிலையாளார்.
திரு. வைகோ அவர்களே சற்று திரும்பி பாருங்கள் - விடுதலைபுலிகள் உங்கள் பார்வையில் போராளிகள், அதுவும் மண்ணுக்காக தனி ஈழம் அமைக்க போராடிய போராளிகள். எப்படி? தங்களது சொந்த மண்ணின் மைந்தர்களான இலங்கை முஸ்லிம்களை பள்ளிவாசலில் தொழுதுக் கொண்டிருக்கும் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பின்றி கொஞ்சம் கூட ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது மட்டுமின்றி, தேவையான கால அளவுக் கூட கொடுக்காமல் உடுத்திய உடுக்கையோடு அவர்களின் சொந்த நில புலங்களை விட்டு வெளியேற்றி விட்டு எஞ்சியோர்களின் வசிப்பிடங்களை தங்களின் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்தனர். பின்னர் முஸ்லிம்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டு கட்டாய வரி வசூல் செய்தவர்கள் தான் இந்த விடுதலை புலிகள்.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைத் எதிர்த்து ஜனநாயக வழி போராட்டங்களை தவிர்த்து தீவிரவாதத்தை கையிலெடுத்த ஒரு இயக்கம் தான் விடுதலைபுலிகள். ஆயுதமேந்தி போரடியவர்கள், எத்தகைய ஆயுதங்களை வைத்திருந்தார்கள் தெரியுமா? டெட்டனேட்டர்கள், கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள், AK 47 ரக துப்பாக்கிகள் மட்டுமின்றி நீர்மூழ்கி கப்பல்கள், வானூர்திகள் என முப்படைகளையும் கொண்டிருந்தினர். இவர்களால் மனித வெடிகுண்டுகள் மூலம்கொல்லப்பட்ட அரசியல் தலைவர்கள் (அந்நாட்டு அதிபர்கள் உட்பட) ஏராளம் ஏராளம். இவையெல்லாம் வைகோவின் கண்களுக்கு போராட்டமாம். போராடியவர்கள் போராளிகளாம். இத்தகைய தீவிரவாதத்தை ஒரு அரசாங்கம் மக்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களை அழிப்பது இனப் படுகொலையாம் திருவாய் மலர்ந்தார் இந்த வைகோ. அதனால் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். உண்மையில் ராஜபக்சே அவர்கள் தீவிரவாதத்தை ஒடுக்க சபதமேற்று அதை ஒழித்து சாதித்துக் காட்டியவர். பாராட்டப்பட வேண்டியவரே தவிர எதிர்க்கப்படக் கூடியவரல்ல.
விடுதலை புலிகளின் தீவிரவாதம் போராட்டமாகவும், விடுதலை புலிகள் போராளிகளாகவும் வைகோவின் பார்வையில் தெரிந்தால் தங்களது சொந்த மண்ணிலேயே அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான கொடிய இஸ்ரேலால் அகதிகளாக்கப்பட்டு, ஆண்கள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டு, பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டு, வீடுகள் புல்டோசரால் இடித்து தரைமாக்கப்பட்டு திக்கற்று இருக்கும் பாலஸ்தீனர்கள் கொடிய இஸ்ரேலின் தீவிரவாதத்தை வெறும் கற்களால் எதிர்த்து போராடுகிறார்கள். அவர்களும் மண்ணுக்காகவே போராடுகிறார்கள். கொடிய இஸ்ரேலால் கொல்லப்பட்ட பச்சிளங்குழந்தைகள் எத்தனை எத்தனையோ? சிறுவர்கள், இளைஞர்கள் எத்தனை எத்தனையோ? அப்படிப்பட்ட இஸ்ரேலுக்கு அன்று முதல் இன்று வரையுள்ள அமெரிக்க அதிபர்கள் ஆதரவாகவே இருந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் வைகோ வரவேற்க சொன்ன ஒபாமாவும் அடக்கம் என்பதை நடுநிலையாளர் (?) வைகோ மறந்து போனதேன்? மதப் பற்றா? தமிழினப் பற்றா? பதில் கொடுப்பாரா வைகோ?
சரி இன்று ஒபாமா ஏதோ நடுநிலையாளர் போல பேட்டிகள் கொடுத்து கொண்டிருந்தாலும் கடந்த சில நாட்களுக்கு முன் நல்லெண்ண பயணமாக நிவாரண பொருட்களை பாலஸ்தீனத்திற்குக் கொண்டு சென்ற பல நாட்டவர்கள் பயணித்த கப்பலைத் தாக்கி அதிலிருந்தவர்கள் சிலரை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த இஸ்ரேலை இவர் என்ன செய்தார்? யுரேனியத்தை அணுகுண்டு செய்ய ஈரான் எத்தனிக்கிறது என குற்றம் சாட்டி அதன் மேல் போர் தொடுக்க துடி துடியாய் துடிக்கும் அமெரிக்கா குறைந்த பட்சம் இஸ்ரேலின் மீது பொருளாதார தடையை ஏற்படுத்த முயற்சித்ததா? தங்களிடம் பயங்கர ஆயுதங்களோ, அணுகுண்டோ இல்லையென்று கூறி வந்த அப்பாவி ஈராக்கின் மீது பொருளாதார தடை
விதித்து பிறகு போர் தொடுத்து அந்நாட்டின் அதிபரை தூக்கிலிட்ட ஏகாதிபத்தியத்தின் மன்னன் தான் அமெரிக்கா. அதன் அதிபர் தான் ஒபாமா என்பதை நடுநிலையாளர் (?) வைகோ மறந்ததின் மர்மமென்ன? இப்போர் நடக்கும் போது ஒபாமா அமெரிக்க அதிபராக இல்லை என்றாலும் குறைந்த பட்சம் அதன் படைகளை அமெரிக்க அதிபராக தான் பொறுப்பேற்ற பிறகு ஈராக்கிலிருந்து முழுவதுமாக வாபஸ் பெறாதது ஏன்?
தங்கள் நாட்டின் இரட்டைக் கோபுரத்தை ஒசாமா & கோ வினர் (தாலிபான்) தான் தகர்த்தனர் எனக் கூறி அவர்களுக்கு ஆப்கான் தான் புகலிடம் எனச் சொல்லி ஆப்கான் மீது படையெடுத்து அப்பாவிகளைக் கொன்று குவித்தது இந்த அமெரிக்கா தான். அப்போதும் இந்த ஒபாமா அமெரிக்க அதிபராக இருக்கவில்லை. ஆனால் இன்றோ ஆப்கனிலிருந்து படைகளை வாபஸ் பெறாது மீண்டும் அங்கு படைகளை குவித்தாரே இந்த ஒபாமா எதற்கு நிவாரணப் பணிகளுக்கா? இல்லையே அப்பாவிகளைக் கொன்று குவிக்கத் தானே. இதை வசதியாக வைகோ மறந்து விட்டு அவரை நாம் வரவேற்க வேண்டுமாம். ஆஹா...என்னே..!! ஒரு நடுநிலைமை நமது வைகோவிற்கு. இவை எல்லாவற்றிற்கும் காரணம் அமெரிக்காவால் கொல்லப்படுபவர்கள் எல்லாரும் முஸ்லிம்கள் என்ற ஒற்றை காரணமேயன்றி வேறொன்றுமில்லை.
பாராளுமன்றத்தின் புயலாக இருந்து இன்று அரசியலின் புழுதியாகி போன வைகோ தன் தவறை உணர்ந்து கொடுத்த அந்த அறிக்கையை வாபஸ் பெறுவதே அவரின் அரசியல் வாழ்வுக்கு நல்லது. இல்லையேல் மழைக்கு முளைக்கும் காளான்கள் போல தேர்தல் வரும் போதெல்லாம் அறிக்கை விட்டு நானும் அரசியலில் இருக்கின்றேன் எனக் காட்டிக்கொள்ளும் சுப்ரமணிய சுவாமிகளின் பட்டியலில் வைகோவும் இடம் பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை என நினைக்க தோன்றும் இச்சூழலில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் வருகிறது. அதில் நமக்கு முஸ்லிம்களின் ஓட்டு வேண்டுமே எனக் கூட இவர் கவலைப்படவில்லை. காரணம் தமிழக முஸ்லிம்கள் என்றுமே ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்ததில்லை. ஒரு அமைப்பினர் திமுக கூட்டணி என்றால் மற்ற அமைப்பினர் அதிமுக கூட்டணிதான். காரணம் அவ்வளவு ஒற்றுமை நமக்குள். இது இன்றல்ல நேற்றல்ல அன்றைய லத்திப் சாஹிப், சமது சாஹிப் முதல் இன்றைய ஜவாஹிருல்ல்லா, பீ.ஜே. வரை எதிரெதிர் அணிதான்.
அரசியலின் உதவாக்கரைகள் கூட நம்மை ஏளனமாக பார்க்க நாம் தான் காரணம். இனியேனும் என் சமுதாயமே ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிப்போம். வெற்றி பெறுவோம். இன்ஷா அல்லாஹ்.
ஆக்கம்: அதிரை ஷா. நவாஸ்
No comments:
Post a Comment