'தெருவில் ஒரு குழந்தை தனது கையில் இருந்த மிட்டாயை ரசித்து, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது அக்குழந்தையின் கையிலிருந்த மிட்டாயை பிடுங்கிய ரவுடி ஒருவன், இந்த மிட்டாய் எனக்கு சொந்தம் என்றான். அந்நேரத்தில் வந்த இன்னொருவன் இந்த மிட்டாயில் எனக்கும் பங்கு வேண்டும் என்றான். தனது மிட்டாயை பறிகொடுத்த அக்குழந்தை ஊர் பெரிய மனுஷனிடம் போய் ஒப்பாரி வைத்தது.
அந்த பெரிய மனுஷனை அக்குழந்தை அப்பட்டமாக நம்பியது. 'நீங்கள் எப்படி தீர்ப்பு சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன்' என்று அப்பாவித்தனமாய் சொன்னது. மிட்டாய் குழந்தைக்குத் தான் சொந்தம் என அறிந்த ஊர் பெரிய மனுஷனோ, நமக்கு எதுக்கு வம்பு என்ற ரீதியில், மிட்டாயை மூணு பாங்காக்கி, அதில் பறிகொடுத்த குழந்தைக்கும் ஒரு பங்கு என்று தீர்ப்பளித்தான். இப்படி ஒரு தீர்ப்பு போன்றதுதான் பாபர் மஸ்ஜித் விசயத்தில் அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பும்.
'பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்று பாங்காக்கி, ஒரு பங்கு முஸ்லிம்களுக்கும், ஒரு பங்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கும், மற்றொரு பங்கு நிர்மோகி அகாரா என்ற அமைப்புக்கும் வழங்கவேண்டும் என்ற அற்புதமான[!] தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
ஒரு இடம் யாருக்கு சொந்தம் என்று சர்ச்சை வருவது சிவில் வழக்காகும். இதில் தீர்ப்பளிப்பதற்கு கவனிக்கவேண்டியது ஆவணங்களும், அனுபவ பாத்தியதையும் மட்டுமே. அந்த வகையில், பாபர் மஸ்ஜித் இடம் 450 ஆண்டுகாலம் கம்பீரமாக மஸ்ஜிதாக நின்றதே அது முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்பதற்கு நிலையான சான்றாகும். எப்போது ஒரு மத ரீதியான கதையை நம்பி , பாபர் மஸ்ஜித் இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதோ, அப்போதோ முஸ்லிம்களுக்கு தெரியும் பாபர் மஸ்ஜித் இடத்தில் நமக்கு நீதி கிடைக்காது என்று.
எந்த கட்டடத்தின் அடிப்பகுதியை தோண்டிப் பார்த்தாலும் அவற்றில் ஏதேனும் எச்சம் கிடப்பதற்கு வாய்ப்புண்டு. மேலும் பாபர் மஸ்ஜித் இடத்தில் இந்து கோயில் இருந்ததை தொல்பொருள் துறை நிரூபித்து விட்டதாம்! தீர்ப்பளித்த நீதிபதியில் ஒருவர் கூறுகிறார். ஆனால் தொல்லியல் துறை என்ன கூறுகிறது..?
''தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.
சரி! ஒரு வாதத்திற்கு தொல்லியல் துறை கோயிலை இடித்து விட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது என்று கூறினால் கூட, பூமிக்கு மேற்பகுதியில் உள்ள பிரச்சினைக்கு பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்கள்தான் அளவுகோல் என்றால், பட்டாக்கள் எதற்கு; பாத்தியதைகள் எதற்கு..? மேலும், சோமநாதபுரம் கோயில், பள்ளிவாசலை இடித்து விட்டுத்தான் கட்டப்பட்டது. அங்கும் அகழ்வாராய்ச்சி நடத்துங்கள்.
மேலும், பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்று பங்காக்கவேண்டும் என்பதில் ஒத்த கருத்து கொண்ட மூன்று நீதிபதிகளும், கோயிலை இடித்து விட்டுத்தான் பாபர் மஸ்ஜித் எழுப்பப் பட்டதா என்பதில் முட்டிக் கொள்கின்றனர்; முரண்படுகின்றனர்.
நீதிபதி சுதிர் அகர்வால்: அந்த கட்டிடம், ஏற்கனவே அங்கிருந்த முஸ்லிம் அல்லாத மத வழிபாட்டுத் தலத்தை (உதாரணம்: இந்து கோவில்) இடித்து விட்டு கட்டப்பட்டது.
நீதிபதி டி.வி.சர்மா : ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்து விட்டுத்தான், அந்த இடத்தில் மசூதியை பாபர் கட்டினார்.
நீதிபதி எஸ்.யு.கான் : மசூதியை கட்டுவதற்காக எந்தவொரு கோவிலும் இடிக்கப்படவில்லை. மசூதி கட்டப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, கோவில்கள் அழிந்து விட்டிருந்தன.
மேலே உள்ள நீதிபதிகளின் வாதத்தை பாருங்கள். கோயிலை இடித்துவிட்டுத்தான் கட்டடம்[பாபர் மஸ்ஜித்] கட்டப்பட்டது என்கின்றனர் இருவர். இன்னொருவர் இல்லை என்கிறார். இதில் எது உண்மை என்று அவர்களுக்கே வெளிச்சம். மேலும், மசூதியை கட்டுவதற்காக எந்த கோயிலும் இடிக்கப்படவில்லை என்ற நீதிபதி கான் அவர்களின் கூற்றுப்படி பார்த்தால், அங்கே ராமர் கோயில் இருக்கவில்லை என்றும், இல்லாத ஒன்றுக்காக அவர்கள் உரிமை கொண்டாட முடியாது என்றும் தெளிவாகிறது. எனவே பாபர் மஸ்ஜித் இடம் முழுக்க முழுக்க முஸ்லிம்களிடமே வழங்கப்பட்டிருக்கவேண்டும் அதுதான் நீதி.
ஆனாலும் நீதி கொல்லப்பட்டிருக்கிறது.
பாபர் மஸ்ஜிதை கட்டியது யார்..? முரண்படும் நீதிபதிகள்;
நீதிபதி சுதிர் அகர்வால்: 1528&ம் ஆண்டு, பாபர் ஆட்சிக் காலத்தில் அது கட்டப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.
நீதிபதி எஸ்.யு.கான்: மன்னர் பாபரால் அல்லது அவருடைய உத்தரவின் பேரால், மசூதி கட்டப்பட்டது.
இரண்டில் எது சரி..? ஆக பாபர் மஸ்ஜித் இடத்தின் மைய்ய பிரச்சினையான, கோயிலை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற விஷயத்தில் நீதிபதிகள் ஒத்த கருத்துக்கு வரமுடியவில்லை என்பதிலிருந்தும், அனுமானங்களை ஆதாரமாக்கி, ஒரு அப்பட்டமான அநீதியான தீர்ப்பு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது திண்ணம்.
முஸ்லிம்கள் தரப்பில் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றமாவது உண்மையான தீர்ப்பை வழங்கி இந்தியாவின் மதசார்பின்மையை நிரூபிக்குமா என்று முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள். நம்புகிறார்கள். ஆம்! நம்பிக்கைதானே வாழ்க்கை!!
அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.
எனக்கும் சிலருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது. நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அபூ ஸலமாவே! நிலத்தை (எப்படியாவது அடைந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசையைத்) தவிர்த்துக் கொள். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்' எனக் கூறினார்கள்" என்றார்கள். ஆதாரம் புஹாரி எண்; 3195
ஆக்கம் : முகவை அப்பாஸ்.
நன்றி: http://www.intjonline.org
No comments:
Post a Comment