Latest News

அச்சமும் பதட்டமும் முன்னே -நீதிமன்றத் தீர்ப்பு வரும் பின்னே- பாதுகாப்பற்ற இந்தியா

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு நீதி மன்றத் தீர்ப்புக்காக இப்படியொரு எதிர்பார்ப்பும் பதற்றமும் இதற்கு முன் இருந்தது இல்லை.
பாபரி மசூதி இட விவகாரத்தில் அலகபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாட்டின் அனைவரின் கவனமும் செப்டம்பர்24 னை நோக்கி திரும்பி இருந்தது.
தீர்ப்புக்கு முன்னதாகவே ஒரு அசாதரணமான பதட்ட நிலைகள் நாடு முழுவதும் பரவிவருகிறது. அடுத்த கணம் என்ன நடக்குமோ என்ற அச்ச நிலையில் மக்கள் உறைந்து உள்ளனர். நாட்டின் பெரும் அரசியல் இயக்கங்களிலிருந்து சிறு மக்கள் அமைப்புகள் வரை வெளி வர இருக்கும் தீர்ப்பின் பாதக சாதகமான நிலையை கருத்தில் கொண்டு எந்த ஒரு பிரிவினரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.
மனித வேட்டை நரபலி நரேந்திரமோடி கூட குஜராத் மக்களுக்கு விடுத்த அறிக்கையில் மக்கள் அனைவரும் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். (இது எதற்கான முன்னறிவிப்பு என்பது மட்டும் தெரியவில்லை).
பிஜேபி ஆளும் கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கூட முன்னதாகவே விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. மாநில மத்திய அரசாங்கள் பல அடுக்கு பாதுகாப்பினை நாடு முழுவதும் அமல்படுத்திவருவதும், காவல் அணிவகுப்புகளை ஆங்காங்கே நடத்தி வருவதும், பிரதமர் உட்பட பல முக்கிய அமைச்சர்கள் அறிவிக்கும் செய்திகளும், பத்திரிக்கை தொலைக்காட்சி செய்திகளும் மக்களை பெரும் அச்சத்திலும் பதற்றத்தையும் எதிர் நோக்கி இருக்க செய்துள்ளது.
மேலும் உளவுத்துறைகளின் தீவிரவாத அச்சுறுத்தல் முன்னறிவிப்பின் காரணமாக பெரும்பான்மையான உலக நாடுகள் கூட தனது நாட்டு மக்களையும் விளையாட்டு வீரர்களையும் இந்தியாவிற்கு பயணம் செய்வதை தவிற்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தீர்ப்பினை ஒட்டி மொத்தமாக அனுப்பபடும் அலைபேசி குறுஞ்செய்திகளையும் 3 நாட்களுக்கு தடை செய்தது, மேலும் விரோதம் வளர்க்கும் பேச்சுக்களும் எழுத்துக்களும் தடை செய்யப்பட்டிருந்தது.
பதட்டம் கொஞ்சம் தணியும் விதமாக நீதிமன்றத் தீர்ப்பு சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது கொஞ்சம் நிம்மதியுடன் மக்களை தெருக்களில் நடமாட அனுமதித்துள்ளது.இத்தனை பேரச்சமும் பெரும் பதற்றமும் ஏன் ஆளும் அரசாங்கத்தாலும், ஊடகங்களாலும் திட்டமிட்டு பரப்புரை செய்யப்படுகிறது? உண்மையில் இந்த பேரச்சநிலை இந்திய சமுக கட்டமைப்பில் யார் மூலம் உருவாகியுள்ளது?நீதி மன்றத்தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என இஸ்லாமியர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் ஒரு இஸ்லாமியன் கூட நீதி மன்றத் தீர்ப்பை எதிர்ப்போம் என கூறியது இல்லை.
இப்படி இருக்கையில் பிறகு யார் மூலம் தான் இந்த தீர்ப்பினால் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் இருக்க கூடும்?. தீர்ப்பு நிச்சயமாக பெரும்பான்மை இந்துக்களுக்கு சாதகமாகத்தான் இருக்க வேண்டும், ஒரு வேளை தீர்ப்பு இந்துக்களுக்கு பாதகமாக வருமேயானால் நாங்கள் நீதி மன்றத் தீர்ப்பை புறக்கணிப்போம், அதே இடத்தில் இராமருக்கு கோவில் கட்டியே ஆவோம் என்கின்றனர் இந்துத்துவவாதிகள்.நீதி மன்றங்களின் பெருந்தன்மை சில நேரங்களில் புல்லரிக்கவைக்கும் உணர்ச்சி மிக்க தீர்ப்புகளை தரும். அஃப்சல் குரு மீது எந்த ஒரு குற்றமும் நிருபிக்கபடாத நிலையிலும் பெரும்பான்மை மக்களின் மன திருப்திக்காக அஃப்சல் குருவினை தூக்கிலிடலாம் என்ற விசுவாசமான தீர்ப்புகளையும் நீதி மன்றங்கள் வழங்கும்.

ஆக தீர்ப்புகள் எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ள தயாராகத்தான் இருக்கின்றனர். தீர்ப்பு நெருங்கும் முன்னரே இந்துத்துவ தலைவர்களின் இரத்தம் கொதிக்க வைக்கும் பேச்சுகள் தொடர்கின்றது, இது போன்ற பேச்சுகளால் தான் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டது, அதே போன்ற துவேசமிக்க பேச்சுகள் அத்வானி போன்ற இந்துத்துவ கொடுரர்களால் துவங்கப்பட்டு விட்டது, இரத்த யாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன.ஒரு வேலை தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக வந்தாலும் இஸ்லாமியர்கள் பெருந்தன்மையுடன் அதை பெரும்பான்மை இந்துக்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் எனவும் மறைமுக மிரட்டல் விடுகின்றனர் இந்துத்துவவாதிகள். விட்டுக் கொடுக்க வேண்டியது இந்த ஒரு பள்ளிவாசலை மட்டுமா?, அவர்களின் பட்டியல்களில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இடிப்புக்காக திட்டமிட்ட நிலையில், இஸ்லாமியர்கள் இதனை எப்படி பெருந்தன்மையுடன் விட்டு கொடுக்க முடியும்?பள்ளிவாசல் இடிப்பு என்பது இந்துத்துவாவின் இலங்கை, நேபாளம், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் பகுதிகளை உள்ளடக்கிய அகண்ட பாரத கனவு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இராம இராஜ்ஜியம் காண்பதற்கு முன் பள்ளிவாசல்களை இடிப்பது, பிறகு இஸ்லாமியர்களின் கலாச்சார பண்பாடுகளை நாட்டில் இல்லாமல் செய்வது தான் அவர்களின் முதல் திட்டம் ஆகும்.அதற்காகத்தான் நாடு முழுவதும் வலம் வருகிறது ரத யாத்திரைகள், மதக்கலவரங்கள், குண்டு வெடிப்புகள், அப்பாவி இஸ்லாமியர்களை சிறைச்சாலைகளில் அடைப்பதும், போலி மோதல் கொலைகளில் கொல்வதும், ரகசிய சித்திரவதை கூடங்கள் வன்கொடுமைகள் புரிவது எல்லாம்.நாட்டில் இத்தனை வன்முறைகளையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் உட்பட இந்துத்துவ தீவிரவாதிகளை அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி தண்டிப்பதில் ஏன் இந்த தயக்கம்?..
இந்துத்துவவாதிகள் காந்தியை கொலை செய்த காலத்திலிருந்து இன்று வரை இவர்களை எந்த அரசாங்க மும் ஒன்று செய்ய முடிய வில்லை.

காவி தீவிரவாதம்” ”என்ற ஒற்றை வார்த்தையை கூட ஒரு உள்துறை அமைச்சரால் சொல்ல முடியாத அளவிற்கு காவி தீவிரவாதம் நாடு முழுவதும் ஒரு அச்ச நிலையை உருவாக்கியுள்ளது
.
இந்தியாவில் ஒவ்வொரு டிச6-ம் இந்திய அரசாங்கம் இதே போன்று ஒரு பதட்டத்தை முன் கூட்டியே உருவாக்கி அதன் அதிர்வுகளை நாடு முழுவதும் பரப்புகின்றது. அப்படி அரசு எதிர்பார்தது போன்று எந்த ஒரு அசம்பாவிதங்களும் இதுவரை நடந்ததே இல்லை, இருந்த போதும் இந்த பாதுகாப்பு சோதனை அச்சுறுத்தல்கள் இஸ்லாமியர்களை நோக்கியே இருப்பதால் இஸ்லாமியர்கள் மட்டுமே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் குடும்பங்கள் முழுமையான சோதனைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இந்த தொடர் சோதனை, சந்தேகங்கள் மூலம் தன் சக நாட்டு மக்களே இஸ்லாமியர்களை சந்தேகத்துடனும், அச்சத்துடனும் பார்க்கும் நிலை இயல்பாகவே உருவாகியுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் இயல்பாகவே உணர்வு மிகுதியால் கட்டுக்குள் அடங்காத போராட்டங்களினால் நாட்டினை கலவர பகுதியாக மாற்றும் சூழ்நிலைகள்தான் இருந்திருக்க வேண்டும். வேறு எந்த ஒரு மதத்தினராக இருந்திருந்தாலும் இத்தனை பெரிய இழப்பிற்கு பின் கொதித்து எழுந்திருப்பார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் பொறுமை காத்துவருகின்றனர்.
மக்கள் தொகையில் மிகச் சிறு கூட்டமாக இருக்கும் சீக்கியர்களின் பொற்கோயிலை அன்றைய அரசு முரட்டு அத்துமீறல்கள் மூலம் கலங்கப்படுத்தியதன் விளைவு பிரதமர் இந்திரகாந்தி வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். ஆனால் இஸ்லாமியர்களின் ஒரு பாரம்பரிய வழிபாட்டுத்தளம் மிகவும் கொடுரமான முறையில் இடித்துத் தள்ளப்பட்டும் அதனை தொடர்ந்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மதக்கலவரங்களாலும், குண்டு வெடிப்புகளாலும் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலைகளில் கூட இஸ்லாமியர்கள் இது வரை அமைதியை மட்டுமே கடைபிடித்து வருகின்றனர். ஆனால் இதுவே ஒரு இந்துக்கோயில் தகர்க்கப்பட்டிருக்குமாயின் அதன் விளைவுகளை கற்பனை கூட செய்ய முடியாது.
ஆனாலும் இஸ்லாமியர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள். அவர்கள் மனநிலையில் பெரும் அச்ச உணர்வுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த அச்சுறுத்தல்கள் வெளி தேசத்திலிருந்து வருபவை அல்ல, தேச நலனுக்கு விரோதமான இந்த அச்சுறுத்தல்கள் உள் நாட்டிலிருந்து தான் கிழம்பியுள்ளன? அப்படி இருக்கும் போது முன் கூட்டியே இந்த தீவிரவாத மிரட்டல்களை முறியடிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.அரசாங்கத்தால் கட்டுபடுத்தமுடியாத அளவிற்கு உள் நாட்டு தீவிரவாதம் இருக்கும் என்றால், உள் நாட்டு மக்களுக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பு தரமுடியவில்லை என்றால் இது எப்படி ஒரு சுதந்திரமான நாடாக இருக்கமுடியும்?இஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலைகளுக்கு ஆளாகும் எல்லா சூழ் நிலைகளையும் இந்துத்துவா சக்திகள் உருவாக்கி வரும் நிலையில்,அரசாங்கம் பேராண்மையுடம் தீவிரவாதத்தின் ஆணி வேரை புடுங்கி எறிய வேண்டும், ஒரு பள்ளிவாசலை இடித்து ஒரு நூற்றாண்டுக்கு அரசியல் செய்யும் பாஜக விற்கு மதவாத துவேச அரசியலை தவிர்த்து வேறெந்த அரசியலும் தெரியாது.வெறுப்பு அரசியலை உருவாக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், சங்கபரிவார்கள் அடங்கிய எல்லா இந்துத்துவா சக்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். நாட்டில் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு உணர்வுடன் சுதந்திரமாக இருப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் காங்கிரஸ் அரசாங்கமோ எந்த ஒரு பிரச்சனைகளையும் ஆரம்பித்து வைக்கும், அமைதி காக்கும் பிறகு சமாதானம் செய்யும் அப்படியே ஆரப்போட்டு மக்கிபோகவிட்டு அரசியல் ஆதாயம் பெரும். அது தெலுங்கான பிரச்சனையாகட்டும், காஷ்மீர் பிரச்சனையாகட்டும், பாபர் மசூதி பிரச்சனையாகட்டும் எல்லாமே ஒரே விதமான அணுகுமுறைதான். 60 ஆண்டு பிரச்சனைக்கு இப்பொழுது தான் தீர்ப்பு வந்துள்ளது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளை சந்திக்க நேரிடலாம். ஒரு வழக்கை இன்னும் எத்தனை ஆண்டுகள் இழுக்க முடியுமோ அத்தனை ஆண்டுகள் இழுத்துப் பார்க்கும் இந்த நீதி துறை.நாளைக்கு பாரளுமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ கூட இந்த சங்கபரிவார்கள் இடித்து நொருக்கக் கூடும் அப்பொழுதும் நீதிமன்றத் தீர்ப்பு என்பது பல நூற்றாண்டுகள் கழித்து தான் வரும்.இதற்கு இடையில் யாருக்கு தண்டனை கொடுக்க முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது எல்லாம் வெரும் கனவாகத்தான் இருக்கும்.
இந்தியாவில் மட்டும் தான் ஒரு மனிதன் எத்தனை கொடுமையான குற்றத்தையும் செய்து விட்டு தண்டனை அனுபவிக்காமல் இருக்க முடியும் ,அதே இந்தியாவில் மட்டும் தான் எந்த ஒரு குற்றமும் செய்யாமல் தண்டனைகளை அனுபவிக்கவும் முடியும்.தாமதிக்கப்பட்ட வழக்குகள் மட்டும் நாட்டில் உண்டு கோடான கோடி, அவை ஒவ்வொன்றும் மறுக்கப்பட்ட நீதிகள். இந்த நீதி முறையை உலகில் எங்கும் காணமுடியாது.

பாதிக்கப்பட்ட மனிதன் நீதி கிடைக்காத போது அவன் தவறான வழிகளுக்கு செல்லும் அபாயத்தையும் நீதித்துறை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசாங்கம் திராணியற்று ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கும் நிலையில்,இந்த நாட்டில் மதசார்பின்மையை காக்கவும், எல்லோரும் பாதுகாப்பு உணர்வுடன் சுதந்திரமாக வாழ்வதற்கு நடு நிலையாளர்கள், முற்போக்காளர்கள், மனிதம் நேசிக்கும் எல்லா மக்களும் வேறுபாடுகளை மறந்து ஒன்றினைய வேண்டும். இந்துத்துவா சக்திகளை நம் நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.