கடந்த காலங்களில் தொலைப்பேசியை பார்ப்பதே அரிதான, அதிசயமான ஒன்றாக இருந்தது. அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சியின் வெளிப்பாடாக செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. படிப்படியாக உலகையே செல்போன் கலாச்சாரம் வியாபித்தது.
வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில் தாறுமாறான விலையுடன் இந்தியாவிற்குள்ளும் செல்போன் களமிறங்கியது.
ஆரம்பத்தில் தடிமனான வடிவில் அதிக எடையுடன் வெளிவந்த செல்போன்கள் ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என விற்பனையானது. இன்கமிங் அழைப்புகளுக்கு கூட கட்டணங்கள் வசூலித்து கணக்கிலடங்கா லாபத்தை செல்போன் நிறுவனங்கள் கபளீகரம் செய்தன.
காலப்போக்கில் படிப்படியாக நடுத்தரவாசிகளும் வாங்கும் அளவிற்கு விலை குறைந்தன. இந்தியாவின் தேவையை உணர்ந்த கொரியா, சீனா போன்ற நாடுகள் தங்களது தயாரிப்பு செல்போன்களை நினைத்து பார்க்க முடியாத குறைந்த விலையில் அளித்தன.
இதன் விளைவு தற்போது ரூ.500க்கும், ரூ.1000க்கும் செல்போனை கூவி கூவி விற்கும் நிலை வந்து விட்டது. செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும், இணைப்பு வழங்கும் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பெருகியதால் இன்று செல்போன் இல்லாத நபர்களே இல்லை என்ற இலக்கை இந்தியா நிறைவு செய்து வருகிறது.
கூலித்தொழிலாளி முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரது கையிலும் அவரவர் வசதிக்கேற்ற செல்போன் அணிவகுத்துள்ளது. ஒரு கட்டத்தில் சிம்கார்டு பெறுவதற்கு ஏஜென்சிகளில் பதிவு செய்து வாரக்கணக்கில் காத்திருந்த நிலைமை மாறி இன்று குறிப்பிட்ட தொகைக்கு டாக் டைமும் கொடுத்து அத்துடன் சிம்கார்டையும் இலவசமாக நிறுவனங்கள் தருகின்றன.
வாடிக்கையாளர்களை தங்களது நிறுவன சேவையை பயன்படுத்த செய்தவதற்கும், ஈர்ப்பதற்காகவும் இதுபோன்ற சலுகைகளை வாரி வாரி வழங்குகின்றனர்.
தற்போது கோடை விடுமுறை துவங்கி விட்ட நிலையில் உறவினர்கள், நண்பர்களுடன் சரளமாக பேசிக்கொள்ள புல் டாக்டைம், இலவச எக்ஸ்ட்ரா டாக்டைம், இலவச எஸ்எம்எஸ் பேக்கேஜ், பாதி கட்டணம் என செல்போன்களுக்கு கணக்கிலடங்காத எஸ்எம்எஸ் வந்த வண்ணம் இருக்கிறது.
வாடிக்கையாளர்களை கவருவதற்காக only 4 u என்ற வாசகத்து டன் ரீசார்ஜ் வசூல் தந்திரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
இதன் காரணமாக ஆண், பெண் பாகுபாடின்றி மணிக்கணக்கில் செல்போன் பேச்சிலேயே மூழ்கி கிடக்கின்றனர். குறிப்பாக இளைஞர், இளம்பெண்கள் செல்போன்களுக்கு ஓய்வு அளிப்பதே இல்லை. சாலையில் நடக்கும் போதும், சாப்பிடும் போதும், அன்றாட பணிகளை கவனிக்கும் போதும் அவர்களது செவியையும், கையையும் செல்போன் ஆக்கிரமித்து கொள்கிறது. மீதி நேரத்தில் எஸ்எம்எஸ் டைப் செய்வது, கேம்ஸ் விளையாடுவதில் கவனம் செலுத்துகின்றனர். சிலர் கழிவறைக்குள் இருந்தும் கடலை போடுகின்றனர்.
உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கும் எதிர்கால ஆபத்தை உணராமல் அத்தியாவசியத்திற்காக மட்டும் பயன்படுத்த வேண்டிய தகவல் தொழில்நுட்பத்துக்கு முழு நேர அடிமையாகி விடுகின்றனர்.
செல்போன் இல்லாவிட்டால் உலகமே இல்லை என்ற உச்ச போதை நிலைக்கு இளைஞர் பட்டாளம் சென்றுவிட்டது. செல்போன் கதிர்கள் இதயத்தை பாதிக்கும், செவித்திறனை மந்தமாக்கும், மூளையின் செயல்திறனை முடக்கும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கைகளை காதில் வாங்கிக்கொள்வதே இல்லை.
செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலம் பாதிக்கப்படுவது ஒரு புறம் இருந்தாலும் பலரது வாழ்க்கையை சீரழித்துள்ளது என்பது வேதனையான விஷயம். தவறான விஷயங்களை படம் பிடித்தல், ஆபாச படங்கள் பார்த்தல், ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புதல், செல்போன் சில்மிஷங்களில் ஈடுபடுதல் போன்றவற்றால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது.
ஆக்கப்பூர்வமான விஷயங்கள் பல இருந்தாலும் அழிவுப்பாதையையே இளைஞர்கள் விரும்புவது வருத்தத்திற்குரியது. இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் முன் வர வேண்டும். செல்போன் இதயத்தை மட்டுமல்ல மூளையையும் விட்டு வைக்காது.
விழிப்புணர்வு இல்லாவிடில் வேதனை நிச்சயம்.
நன்றி : தமிழ் சாரல்
காதர் சுல்தான்
தகவல் அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment