Latest News

அமெரிக்க மக்களிடம் ஒபாமா வேண்டுகோள்: முஸ்லிம்களும் இந்நாட்டின் குடிமக்களே

வாஷிங்டன்,செப்.1:அமெரிக்காவில் முஸ்லிம்களும் உரிமைகள் கொண்ட குடிமக்களாவர் அவர்களுக்கு பிறருக்குரிய உரிமைகள் போலவே அனைத்தும் கிடைக்கவேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

செப்.11 உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்ட இடத்தில் மஸ்ஜித் கட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார் ஒபாமா.

கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் வைத்து நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் மஸ்ஜித் கட்டுவதற்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தது அமெரிக்க அரசியலில் விவாதத்தைக் கிளப்பியிருந்தது.

இந்நிலையில் திங்கள் கிழமை என்.பி.எஸ் செய்தி சேனலுக்கு அளித்துள்ள நேர்முகப்பேட்டியில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார் அவர்.

அவர் கூறியதாவது:"அமெரிக்க குடிமகனுக்கான மதச் சுதந்திரத்தைக் குறித்துதான் இஃப்தாரில் உரை நிகழ்த்தினேன். மாறாக, அது ஏதேனும் மஸ்ஜித் நிர்மாணத்தைக் குறித்தல்ல. இந்த நாட்டின் அரசியல் சட்ட மதிப்பீடுகளைப் பற்றித்தான் உரை நிகழ்த்தினேன். எனது வார்த்தைகள் மிகவும் தெளிவாகயிருந்தது. அவ்விடத்தில் கிறிஸ்தவ ஆலயமோ, யூத ஆலயமோ அல்லது ஹிந்துக் கோயிலோ கட்டுவதாகயிருந்தாலும் நான் இதே கருத்தைத்தான் கூறியிருப்பேன்.

இஸ்லாத்தை விசுவாசம் கொண்டுள்ளார்கள் என்பதற்காக ஒரு பிரிவினரை வேறுபடுத்தி பார்க்கவியலாது. முஸ்லிம்களும் அமெரிக்க குடிமக்களே! இதுதான் அமெரிக்க அரசியல் சட்டம் உயர்த்திப்பிடித்துள்ள கொள்கையாகும். அதனை பாதுகாப்பது அதிபர் என்ற நிலையில் எனக்கு பொறுப்புள்ளது.

சட்டம் எல்லா மத நம்பிக்கையாளர்களுக்கும் ஒன்றே. அதனை மீண்டும் உறுதிப்படுத்தவே நான் விரும்புகிறேன். இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஈராக்கிற்கு சென்று போர் செய்து திரும்பிய முஸ்லிம்களும், இந்த நாட்டில் பதவிகளை வகிக்கும் முஸ்லிம்களும் உண்டு. அவர்களிடம், நீங்கள் உங்கள் மதத்தை துறந்தால்தான் இந்த நாட்டில் வாழமுடியும் என்று சொல்வதற்கு எவரால் இயலும்?" இவ்வாறு ஒபாமா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

ஒபாமா இஸ்லாமிய மத நம்பிக்கையாளர் என்று பிரச்சாரத்தைக் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது ஒபாமா இவ்வாறு பதிலளித்தார்: "அதில் எனக்கு கவலையில்லை. தவறான பிரச்சாரங்கள் இந்த ஊடக உலகில் சகஜமானது. எப்பொழுதும் என்னால் எனது பிறப்பு சான்றிதழை நெற்றியில் ஒட்டிவிட்டு
அலைய முடியாது. உண்மைகள் உண்மைகளாகும். வதந்திகளைக் குறித்து எனக்கு பதட்டம் இல்லை." என ஒபாமா கூறினார்.

ஒபாமா தற்பொழுதும் முஸ்லிம் என்று நம்பக்கூடியவர்கள் அமெரிக்காவில் 18 சதவீதம் பேர் என கடந்தவாரம் தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்தது.

குவைத்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க குடிமகன் இமாம் ஃபைஸல் அப்துற்றவூஃபும் அவருடைய இந்திய மனைவி டெய்ஸி கானும் இணைந்து 'கொர்தோவா ஹவுஸ்' என்ற பெயரில் நியூயார்க்கில் துவக்கி வைத்த 10 கோடி டாலர் மதிப்பிலான திட்டம்தான் சர்ச்சையைக் கிளப்பிய க்ரவுண்ட் ஜீரோ மஸ்ஜித் திட்டம்.

ஜிம்னேஷியம், தியேட்டர், நூலகம், ரெஸ்ட்ராண்ட், பிரார்த்தனை ஹால் உள்ளிட்ட 13 மாடி இஸ்லாமிய கம்யூனிட்டி செண்டர்தான் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தகவல் அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.