Latest News

  

காவி தீவிரவாதமும் ப.சிதம்பரமும்!

டில்லியில் நேற்று அனைத்து மாநிலக் காவல் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் .சிதம்பரம் அதிர்ச்சி ஊட்டும் தகவல் ஒன்றை அதிகார பூர்வமாகத் தெரிவிததுள்ளார்.

தற்போது புதிதாகக் காவி தீவிரவாதம் பரவி வருகிறது. சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் காவி உடை அணிந்தவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு சிறு திருத்தம் என்னவென்றால் புதிதாகக் காவி தீவிரவாதம் பரவி வருகிறது என்பதாகும்.

என்றைக்கு இந்து மகா சபையும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார்க் கும்பலும், அவற்றின் அரசியல் வடிவமான ஜனசங்கமும், பாரதீய ஜனதாவும் தோற்றமெடுத்தனவோ, அந்த நொடி முதலே அதன் குருதி ஓட்டத்தில் மதக் கலவர எண்ணங்கள் கருத் தரித்து அவ்வப்போது வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கலவரத்துக்குக் கத்தி தீட்டிதான் வந்திருக்கின்றன.

அரசால் நியமனம் செய்யப்பட்ட ஆணையங்களும் ஆதாரப் பூர்வமாகவே இந்தக் கூட்டத்தின் வன்முறைக் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தியும் உள்ளன. இதற்காகவே இந்த அமைப்பின் முக்கிய கூர்மையான அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பலமுறை தடை செய்யவும் பட்டது.

இந்தியா முழுவதும் நடைபெற்று வந்திருக்கிற பல்வேறு கலவரங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும், சங் பரிவார்க் கூட்டத்தின் தலைமை அமைப்புகளுக்கும் சங்கிலித் தொடர்போன்ற இணைப்புகள் இருந்திருக்கின்றன என்ற தகவல் ஆதாரப் பூர்வமாகக் கிடைத்துவிட்டது.

மாலேகான் குண்டு வெடிப்பில் பிரக்யா தாகூர் எனும் சாத்வி (சன்யாசியாம்) லெஃப்டினண்ட் கர்னல் சிறீகாந்த் புரோஹிட், தயானந்த பாண்டே எனும் சங்கராச்சாரியார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

இந்தச் சங்கராச்சாரியாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லாப்டாப் கருவியிலிருந்து அதிர்ச்சியூட்டக்கூடிய சதித் திட்டங்கள் வெளிப்பட்டன. இந்தச் சதித் திட்டங்களையெல்லாம் நுண்மையாக ஆய்வு செய்த ஹேமந்த் கர்கரே என்ற உயர் காவல்துறை அதிகாரி படுகொலை செய்யப்பட்டதும் சாதாரணமானதல்ல.

சங்பரிவார் கும்பலின் மிகப் பெரிய சதித் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது கருதப்படுகிறது.

இந்தப் படுகொலையில் சதியுள்ளது என்று மத்திய அமைச்சராக உள்ள .ஆர். அந்துலேயே கூறி இருக்கிறார் என்றால், இதன் தன்மையைப் புரிந்து கொள்ளலாமே.

புதுடில்லியில் உள்ள ஹெட்லைன்ஸ் டுடே என்னும் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய தகவல்கள் சங் பரிவார்க் கூட்டத்திற்கு நெரிகட்டச் செய்துள்ளன. காவிக் கூட்டத்துக்கும், அதன் தீவிரவாத வன்முறைக் கூட்டத்துக்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பினை அது அம்பலப்படுத்திவிட்டது.

காந்தியார் படுகொலை (காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் "இஸ்மாயில்" என பச்சை குத்திக்கொண்டு முஸ்லிகளைப் போல் சுன்னத் செய்து கொண்டிருந்தான்) , தென்காசி சதித்திட்டம், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், மாலேகான் குண்டு வெடிப்பு என்று மிகப் பெரிய வன்முறைப் பாதைகளின் சுவடுகளையெல்லாம் மிகத் திறமையாக உளவுத் துறையையும் விஞ்சிய சாமர்த்தியத்தோடு இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அலசி எடுத்துத் தோரணமாகத் தொங்க விட்டுவிட்டது.

தாம் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டோம் அதன் மூலம் சட்ட ரீதியான கடுந்தண்டனைக்கு ஆளாக்கப்படப் போகிறோம் என்பதைத் தெளிவாக உணர்ந்த இந்தக் காவிக் கூட்டத்தால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.

கடந்த மாதம் (ஜூலை 16) புதுடில்லியில் உள்ள அந்தத் தொலைக் காட்சி நிறுவனத்தின் முன் காவிக் கூட்டத்தினர் ஆயிரக்கணக்கில் கூடி அந்நிறுவனத்தைத் தரைமட்டமாக்க ஆவேசமாக எழுந்தனர். காவல் துறையின் சாமர்த்தியத்தால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்பது போல, நான்காவது மாடியில் இருந்த அந்த நிறுவனத்துக்குள் இந்தக் காலிகளாகிய காவிகள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டனர். ஆனாலும் கல்லெறி எனும் கலையில் தேர்ந்தவர்களாயிற்றே! அதைப் பயன்படுத்தி கண்ணாடிக் கதவுகளை யெல்லாம் அடித்துத் தூள் தூளாக்கிவிட்டார்கள்.

இந்த ஆத்திரமே அவர்களின் குற்றங்களுக்கான அளவுகோல் என்பதை மத்திய அரசு அறிந்திருக்க வேண்டும்..

அபினவ் பாரத் என்ற மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டர்களின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் காந்தியார் கொல்லப்பட்ட பின்பு நமக்கு நேர்ந்த கதியை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவர்களே அலற ஆரம்பித்துள்ளனர்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, மத்திய உள்துறை சட்ட ரீதியாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமோ, அவற்றைக் கொஞ்சமும் தயக்க மின்றி எடுத்தாகவேண்டும். இல்லையென்றால், நிவர்த்திக்க முடியாத கடும் விலையை இந்தியா கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

நன்றி: http://viduthalai.periyar.org.in/20100826/news21.html

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.