Latest News

  

ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இம்மாதம் 10ம் தேதி அன்று, டெல்டா மாவட்டமான புதுக்கோட்டையில் உள்ள வடதெரு கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதனை உடனடியாக நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் (M.K.Stalin) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தொன்றுதொட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும் காவிரிப் படுகை விளங்கி வருகிறது. சோழ நாடு சோறுடைத்து என்ற சொல் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்று.

Also Read | TN Lockdown: நாளை முதல் டீக்கடை, ஸ்வீட் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி

இத்தனை பெருமை கொண்ட காவிரிப் படுகை பகுதியையும், அதனைச் சார்ந்திருக்கும் விவசாயப் பெருமக்களின் நலனையும் பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. நேற்றைய தினம், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கி, அப்பணிகளைத் துரிதப்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில், 10.6.2021 அன்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஏலம் விடுவதாக ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில், காவிரிப் படுகை பகுதியில் உள்ள வடதெரு என்ற பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோகார்பன் உற்பத்திக்காக ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரிப் படுகை பகுதியிலுள்ள விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், இந்தப்படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கையாகும்.

இக்காரணங்களை எடுத்துக்காட்டி, மேற்குறிப்பிட்ட ஏலத்திலிருந்து வடதெரு பகுதியை நீக்கவேண்டுமென்றும், எதிர்காலங்களில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன்.

மேலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்றும், தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் கண்ணை இமை காப்பது போல எங்கள் அரசு காக்கும் என்றும் உறுதிபடக் கூற விரும்புகிறேன் எனவும் அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | கீழடி & திருமலை நாயக்கர் அரண்மனை: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.