
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. திமுக 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் 30க்கும் மேல் தொகுதிகளை கேட்டதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து திமுக 23 தொகுதிகளை வரை கொடுக்க முன்வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தொகுதி எண்ணிக்கை ஒரு புறம் இருக்க திமுக நடத்துவது வருத்தம் அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் சிந்தியதாக தகவல் வெளியானது. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 41 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்தது. ஆனால் காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த முறை நடந்து முடிந்த மற்ற மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் திமுக அதிக இடங்களை ஒதுக்குவதில் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் நிர்வாகிகளான தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் நேற்று இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு சென்றனர். இதனாவிலேயே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 24 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி, ஒரு ராஜ்யசபா வழங்குவது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் நடைபெறவில்லை.
மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு வெளியே வந்த நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய தினேஷ் குண்டுராவ், இன்று காலை 10 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவித்தார். இதன்மூலம் நீண்ட நாட்களாக திமுக- காங்கிரஸ் இடையே நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
newstm.in
No comments:
Post a Comment