Latest News

  

நீதிமன்றத்தைக் கேலிக்கூத்தாக நினைக்க வேண்டாம்: யுஜிசிக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழக அரசு அறிவித்த அரியர் தேர்ச்சி செல்லுமா, செல்லாதா எனப் பதில் மனுவில் குறிப்பிடாத பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இறுதிப் பருவத் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும்போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்தக் கூடாது? எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், அரியர் தேர்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது.

பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், 'இறுதிப் பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம். இறுதிப் பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய முடியாது' எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு, அரியர் தேர்வுகள் ரத்து விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிலைப்பாடு என்ன? அரியர் தேர்வு செல்லுமா, செல்லாதா என்பது குறித்து பதில் மனுவில் ஏன் எதுவும் குறிப்பிடவில்லை? எனக் கேள்வி எழுப்பியது.

மேலும், நீதிமன்றத்தைக் கேலிக்கூத்தாக்க வேண்டாம் எனவும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த பல்கலைக்கழக மானியக் குழு தரப்பு வழக்கறிஞர், அரியர் தேர்வு விவகாரம் தொடர்பாக தெளிவான கூடுதல் பதில் மனுத்தாக்கல் செய்வதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார். இறுதியில், அரியர் தேர்வுகளை ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடில்லை எனவும் பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இறுதிப் பருவத் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும்போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்யப் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்டனர். அதேபோல தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, விசாரணையை நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Source : www.hindutamil.in

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.