
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் தேர்வான அ. விஜயகுமார், கட்சியிலும் ஆட்சியில் உள்ளவர்களாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
2016இல் மாநிலங்களவைக்கு தேர்வான இவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவு பெறுகிறது.
இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளாக கட்சித் தலைமையால் ஓரம் கட்டுப்படுவதாகக் கூறும் இவர், பாஜக மேலிட தலைவர்களுடன் நெருக்கமாக பழகுவது, அதிமுகவின் செயல்பாடு, தொகுதியில் எதிர்கொள்ளும் அவமதிப்புகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். அவரது நேர்காணலின் எழுத்து வடிவத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
கேள்வி: தமிழ்நாட்டில் ஆளும் கட்சியைச்சேர்ந்த இரு அமைச்சர்கள் மாநிலத்துக்கு இரண்டாவது தலைநகராக மதுரை வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம் சர்ச்சையாக பார்க்கப்பட்ட நிலையில், தென் தமிழகத்துக்கு ஒரு தலைநகர் என்ற புதிய முழக்கத்தை முன்வைக்கிறீர்களே.. இதுபோன்ற கருத்துகள் கொரோனா பரவல் போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் வைக்க வேண்டியது அவசியமா....
விஜயகுமார்: இந்த காலகட்டத்தில் தமிழகக்தைச் சேர்ந்த இரு அமைச்சர்களுமே மதுரையை தனித்தலைநகராக அறிவிக்கும் கோரிக்கையை வைத்தார்கள். எனது எண்ணப்படி, மாநிலத்தில் அரசின் நிர்வாகத்தேவைக்கு ஏற்ப அத்தகைய கோரிக்கை அவசியம் என்ற அடிப்படையில் நானும் அந்த கருத்தை வலியுறுத்தினேன்.
கேள்வி: ஏற்கெனவே தமிழ்நாட்டுக்கு சென்னை தலைநகராக உள்ள நிலையில், தென் தமிழகத்துக்கு ஒரு தலைநகர் என்ற வாதம் தேவைதானா?
விஜயகுமார்: சென்னை தலைநகராக நன்றாகவே உள்ளது. ஆனால் திடீரென்று மாநில அமைச்சர்களே நிர்வாக வசதிக்காக கூடுதலாக ஒரு தலைநகர் தேவை என்று வலியுறுத்தத் தொடங்கியிருப்பதால் நாமும் ஏன் செய்யக்கூடாது என்பதுதான் எனது வாதம்.
கேள்வி: தென் தமிழ்நாடு என்ற உங்களுடைய முழக்கம், தமிழ்நாட்டை பிரிப்பது போல கருதப்படாதா?
விஜயகுமார்: தமிழ்நாடு ஒன்றுதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் மாநில அமைச்சர்களே மதுரையை இன்னொரு தலைநகராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தும்போது, அது தேவைதான் என்பது என் எண்ணம்.
கேள்வி: தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த நீங்கள், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் என்றபோதும், மாவட்ட அளவிலான அரசு திட்ட கலந்தாய்வு கூட்டங்களிலோ நீங்கள் ஏன் பங்கேற்பதில்லை?
விஜயகுமார்: கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்களுடைய மாவட்டத்தில் ஒரு ஆட்சியர் புதிதாக பதவிக்கு வந்த பிறகு முதல் மாதம், என்னை எல்லா நிகழ்ச்சிகளிலும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்தார். பிறகு எனக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடிய எந்த அழைப்பும் விடுக்கப்படுவதில்லை.
இது பற்றி மாவட்ட ஆட்சியரிடமே நான் கேட்டிருக்கிறேன். மேலிட உத்தரவு, உங்களை அழைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால், கடந்த இரண்டு வருட காலத்தில் எனது எம்.பி தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தும் விவகாரத்தில் இதே ஆட்சியர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தால் மட்டுமே எம்.பி வளர்ச்சி திட்ட நிதியை திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். கடந்த இரண்டு வருடங்களாக அந்த நிதி பயன்பாடற்று போனது. பிறகு கொரோனா வைரஸ் பரவியபோது, ரூ. 1.25 கோடி அளவுக்கு பொருட்களை வாங்க நான் பரிந்துரை செய்தபோது, நீண்ட போராட்டத்துக்கு பிறகே அவற்றை வாங்க நடவடிக்கை எடுக்க முடிந்தது.
கேள்வி: உங்களுடைய தகவல் விநோதமாக உள்ளது. காரணம், நீங்கள் ஒரு ஆளும்கட்சி உறுப்பினர். அடிப்படையில் ஆளும் கட்சி உறுப்பினருக்கு அவர் சார்ந்த மாவட்டத்திலும் மாநிலத்திலும் செல்வாக்கு இருக்கும். அதுவும், மாவட்ட ஆட்சித்தலைவரே உங்களை அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை என நீங்கள் கூறினால், அது ஏற்புடையதாக இருக்கும் என கருதுகிறீர்களா... மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பதில்லை என்றால் எம்.பி என்ற முறையில் உரிமை மீறலை ஏன் கொண்டு வரவில்லை?
விஜயகுமார்: நிச்சயமாக. அதற்கான கடிதத்தை ஏற்கெனவே மாநிலங்களவை செயலகத்தில் கொடுத்துள்ளேன். அது பரிசீலனையில் உள்ளது. குறிப்பாக, மாவட்ட திட்டங்கள் தொடர்பான டிஷா கமிட்டியில் நான் இணை தலைவர் என்ற முறையில் இரண்டு ஆண்டுகளாக அந்த கூட்டத்தை நடத்தாத ஆட்சியரிடம் அதை நடத்துங்கள் என கடிதம் கொடுத்தேன். இதுவரை அந்த கூட்டம் நடத்தவில்லை. இதனால் அவர்களின் தவறுகளை விளக்கி மாநிலங்களவை செயலகத்தில் கடிதம் கொடுத்தேன்.
கேள்வி: மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாக நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டைப் பார்த்தால் அவரால் குறிப்பிடப்படும் மேலிடம் என்பது நீங்கள் சார்ந்த மாநிலத்தில் ஆளும் கட்சி தலைவர்களாகத்தான் இருக்கும். அந்த மேலிடம் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தை கோருமானால், நீங்கள் சார்ந்த கட்சியே உங்கள் மீது அதிருப்தியில் இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாமா?
விஜயகுமார்: நான் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து என்னை மாற்றியபோது கூட அவர்கள் எந்த விளக்கமும் தரவில்லை. ஜெயலலிதா இருந்தபோது என்னை மாவட்ட செயலாளர் பதவியில் நியமித்தார். கட்சியின் சட்ட விதிகளிலேயே ஜெயலலிதா யாருக்கு எல்லாம் பதவி கொடுத்தாரோ அவர்களை மாற்றக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எனக்கு எந்தவொரு நோட்டீஸோ விளக்கமோ கோராமல் திடீரென நீக்கி விட்டனர். இன்றைக்கும் நீதிமன்ற வழக்கு, தேர்தல் ஆணைய வழக்கு போன்றவற்றில் மாவட்ட செயலாளர் என்ற முறையில் எனது கையெழுத்தே உள்ளது. ஒன்றிய, கிளை செயலாளர்கள் பதவி நியமனத்திலும் எனது கையெழுத்தே உள்ளது.
கேள்வி: சொந்த ஊரில் உங்களுடைய செல்வாக்கு சரிந்து விட்டதாகவும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மேலிட தலைவர்களுடன் நெருக்கமாக நீங்கள் இருப்பதும், உங்கள் மீதான அதிமுக மேலிடத்தின் அதிருப்திக்கு காரணம் என கூறப்படுகிறதே...
விஜயகுமார்: அதை என்னை அழைத்தே மேலிடம் விசாரிக்கலாமே. கடந்த இரண்டு வருடங்களாக வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு கன்னியாகுமரியில் கட்சி மிகவும் கீழ்நிலைக்கு சென்று வருகிறது. அது மேலிடத்துககும் தெரியும். வேறு கட்சியினருடன் தொடர்பில் இருப்பது பற்றி என்னை அழைத்து விசாரிக்கட்டுமே.
கேள்வி: ஆளும் கட்சி எம்.பி ஆக இருப்பவர், துறை சார்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைப்பது சர்ச்சை ஆகாது. ஆனால், அதே எம்.பி நாட்டின் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் தான் சார்ந்த கட்சித் தலைமைக்கு தெரியாமல் தனித்தனியாக சந்தித்ததாக உங்கள் கட்சியினர் கூறுகிறார்களே. அது பற்றிய உங்கள் விளக்கம் என்ன?
விஜயகுமார்: நீங்கள்தான் சொல்கிறீர்கள். கட்சிக்கு எதிராகவோ முதல்வருக்கு எதிராகவோ நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் ஜெயலலிதாவின் விசுவாசி. நாட்டில் எவ்வளவோ வளர்ச்சித்திட்டப் பணிகள் உண்டு. தேசிய அளவிலான திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என வரும்போது, அதை பிரதமரிடம் தெரிவித்தால்தான் சரியாக இருக்கும் என நேரம் கேட்டேன். டிஷா கமிட்டி என எடுத்துக் கொண்டாலும், அது எம்.பி நிதியுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான பணப்பழக்கம் நிறைந்த நடைமுறை. அதை நிர்வகிக்கும் செயலாளர் பொறுப்பை, மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக, வருமான வரித்துறை ஆணையர் வசம் ஒப்படைக்கலாம் என யோசனை கூறினேன். அவர்கள் கூட்டம் நடத்தி, திட்டப் பணிகள், அவை சார்ந்த நிதி செலவினத்தை மேற்பார்வை செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினாலே போதும். திட்டப்பணிகள் சீராக நடக்கும்.
கேள்வி: அப்படியென்றால், பிரதமர், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை நீங்கள் தொடர்ந்து சந்தித்துப்பேசி வருவதை அரசியல் கலப்பில்லாத நிகழ்வுகள் என கூற வருகிறீர்களா?
விஜயகுமார்: நிச்சயமாக, எனக்கு அது தேவையும் இல்லை. எனது மாவட்டத்தில் நான்கு வழிப்பாதை திட்டம் நிறைவேறவில்லை. அருகே உள்ள கேரளாவில் அது நிறைவேறி விட்டது. மிக நீளமான தேசிய கொடியை நிறுவ எம்.பி வளர்ச்சி நிதியில் இருந்து பணம் ஒதுக்க கேட்டுக் கொண்டேன். இதுவரை அது நிறைவேறவில்லை. கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க கோரிக்கை வைத்தேன். 2016இல் எம்.பி ஆனவுடன் குலசேகரபட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் தேவை என வலியுறுத்தினேன். மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும் இதுவரை தொடக்க விழா நடக்கவில்லை. ராணுவ தளவாடம் அமைக்க திருநெல்வேலி அல்லது தூத்துகுக்குடியில் காலியாகவுள்ள ஏராளமான தரிசு நிலத்தை வழங்க கோரிக்கை விடுத்தேன். இது வரை ஒன்றும் நடக்கவில்லை. அந்த திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் 50 ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கேள்வி: பொதுவாக, ஆளும் கட்சியினரால் ஒதுக்கி வைக்கப்படும் அல்லது அதிருப்தி தலைவர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் போன்றோர், மத்தியில் ஆளும் பாஜக அணிக்கு தாவும் நிகழ்வுகளை பார்க்கிறோம். உதாரணமாக, முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவை கூறலாம். நீங்களும் பாஜகவுடன் நெருக்கமாகி வருவதை பார்க்கும்போது, மாநில அரசியலை கடந்து தேசிய அரசியல் நீரோட்டத்தில் நீங்கள் கலக்கும் முன்னோட்டமாக உங்களுடைய செயல்பாடுகளை எடுத்துக் கொள்ளலாமா?
விஜயகுமார்: எனக்கு ஜெயலலிதாதான் எம்.பி பதவியை வழங்கினார். எனது சொந்த மாவட்டத்தில் எனக்கு செல்வாக்கு உள்ளது. எதை சாதிக்க இந்த பதவி ஒன்றே போதும். இதற்காக இன்னொரு கட்சிக்கு தாவ வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது. தென் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற நான் உழைத்தால் மட்டும் போதும்.
கேள்வி: அப்படியென்றால், இதுவரை பாரதிய ஜனதா கட்சியில் சேர உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூற வருகிறீர்களா?
விஜயகுமார்: இல்லை. எனக்கு அழைப்பு வரவில்லை. அதுபற்றிய சிந்தனையே எனக்கு கிடையாது. எனது மாவட்டத்தில் எனது இருப்பு வலுவாக இருக்கிறது. கட்சி மேலிடம் எனக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் எனது மாவட்டத்தில் எனது அரசியல் நன்றாகவே உள்ளது.
கேள்வி: கட்சிக்குள் அங்கீகாரம் இல்லையென்றால் நேரடியாக கட்சி மேலடத்திடமே நீங்கள் பேசி பிரச்னைக்கு தீர்வு ஏன் முயற்சிக்கவில்லை?
விஜயகுமார்: தலைமை என்னிடம் நேரடியாக அதிருப்தியை காட்டினால் எனது தரப்பு நிலையை தெளிவுபடுத்தலாம். ஆனால், நேரடியாக எதிர்ப்பை காட்டாமல், சுற்றிச்சுற்றித்தானே வருகிறார்கள். நேரடியாக பேசினால், நேரடியாகவே நானும் விளக்கம் தருவேன்.
கேள்வி: அடிப்படையிலேயே உங்களுக்கு சொந்த மாவட்ட அரசியல், கட்சி நிகழ்ச்சிகளில் மரியாதை கொடுப்பதில்லை என நீங்களே கூறுகிறீர்கள். அதுவே உங்களை ஒதுக்கும் செய்திதானே?
விஜயகுமார்: எதுவாக இருந்தாலும், நான் ஒரு மாநிலங்களவை உறுப்பினர். அதற்கென ஒரு சம்பிரதாய வழிமுறை உண்டு. அதை நிச்சயம் அந்த பதவியில் இருப்பவர் எதிர்பார்ப்பார். அதில் தவறு நடந்தால் அதை ஏற்க முடியாது. விஜயகுமார் என்ற தனி நபருக்கு மரியாதை கொடுக்கத்தேவையில்லை. அவர் வகிக்கும் பதவிக்கு மரியாதை கொடுங்கள். அதிருப்தியால் என் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய மக்கள் பணியை முடக்கியிருக்கிறார்கள். அதுதான் வருத்தம். அதற்குரிய பலனை அவர்கள்தான் அனுபவிக்கப் போகிறார்கள்.
கேள்வி: பிரதமர் நரேந்திர மோதி தொடர்பாக அண்மைக்காலமாக புகழ்ந்து பேசி வருகிறீர்கள். ஆனால், அவரது தலைமையிலான மத்திய அரசால்தான் தமிழகத்தில் நீட், என்டிஏ போன்ற தேர்வு முறைக்கு அதிருப்தி நிலவுகிறது. இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
விஜயகுமார்: ஒரு நாட்டுக்கு பிரதமர் என்றால் அவரை நிச்சயம் மதித்துத்தான் ஆக வேண்டும். இன்றைய தேதியில், பிரதமர், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர்தான் ஆட்சியை நடத்துகிறார்கள். அவர்களுடன் ஒரு எம்.பி என்ற முறையில் பேசுகிறேன். அவர்களின் செயல்பாடு பற்றி பேசுகிறேன். எது தேவையோ அதை நான் பேசி வருகிறேன்.
கேள்வி: சமீபத்தில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைவுக்கு பிறகு கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. அங்கு போட்டியிட அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் ஆர்வமாக உள்ளன. இதில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அமையும் என கருதுகிறீர்கள்?
விஜயகுமார்: வசந்தகுமார் மறைந்து ஒரு வாரம்தான் ஆகிறது. எனவே இப்போதைக்கு வெற்றி பற்றி கூற முடியாது. ஆனால், கடந்த காலங்களில் கன்னியாகுமரியில் எந்தெந்த கட்சி போட்டியிட்டன, எவ்வளவு வாக்கு வாங்கின, தனித்துப்போட்டியிட்டு என்ன நிலையை அடைந்தன என எல்லா பதிவுகளும் ஊடகங்களிடம் இருக்கும். நான் அதிமுகவில் இருக்கும்போதே நான் ஓரம்கட்டப்படுகிறேன். இதற்கான பலன் இடைத்தேர்தலில் வரும். ஆட்சியில் இருப்பவர்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டும். இவரை ஒதுக்கி வைக்கலாம் என அவர்கள் விரும்பினால், மக்களும் அவர்களை ஒதுக்கி வைப்பார்கள். தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என பார்க்கலாம்.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment