
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி: கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் முதலில் யாருக்கு கிடைக்கும்?
கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்துவதற்காக 3 தடுப்பு மருந்துகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த சோதனைகள் வெற்றி பெறுகிற நிலையில் அவற்றின் உற்பத்தி தொடங்கி, இந்தியாவில் பொதுமக்களுக்கு கிடைக்க தொடங்கும். அந்த நாளைத்தான் நாடு ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவின் இடையே மத்திய சுகாதார இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே செய்தியாளர்களிடம் பேசுகையில், "கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கொண்டு வருவதில் நமது விஞ்ஞானிகள் கடினமாக உழைத்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான 3 தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட சோதனையில் உள்ளன. நாம் அதில் வெற்றி பெற்று விட்டால், கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் போடப்படும்" என குறிப்பிட்டார்.
எனவே தடுப்பூசி வந்த உடன் முதலில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு முதலில் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment