
கேரளாவில் 30 கிலோ தங்கக் கடத்தல் விவகாரத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் ராஜினாமா செய்யக் கோரி பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
பாஜகவின் சார்பில் எம்எல்ஏ ஓ.ராஜகோபால் கட்சியின் அலுவலகத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த மாதம் 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்தத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சரித் குமார் அளித்த தகவலின்படி, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.
இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். மேலும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் விற்பனை மேலாளராக ஒப்பந்த அடிப்படையில் இருந்தபோதுதான் இந்தக் குற்றச்சாட்டில் சிக்கினார்.
இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளரும், பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளருமான சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகளான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றன.
முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் ராஜினாமா செய்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தி வருகிறார். பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரனும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தச் சூழலில் தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்குத் தொடர்பு இருப்பதால், அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் ராஜினாமா செய்யக் கோரி பாஜக சார்பில் இன்று போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 18 நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைமை நகரங்களிலும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அந்தக் கட்சியின் எம்எல்ஏ ஓ.ராஜகோபால், பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கினார். இந்த உண்ணாவிரதத்தை பாஜக தேசிய பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
போராட்டத்தை மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தொடங்கி வைத்துப் பேசினார். மேலும், காணொலி மூலம் திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தை முன்னாள் மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன் தொடங்கிவைத்தார்.
இதற்கிடையே மத்திய அமைச்சர் வி.முரளிதரன் நாளை தனது இல்லத்தில் பினராயி விஜயனுக்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் குறித்து எம்எல்ஏ ஓ.ராஜகோபால் நிருபர்களிடம் கூறுகையில், ' தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்குத் தொடர்பு இருப்பதால், தார்மீகப் பொறுப்பேற்று பினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதற்காகத்தான் நான் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறேன். இதுபோன்று அடுத்துவரும் 18 நாட்களும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்' எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment