
எந்தவிதக் குற்றமும் செய்யாத நிலையில் ஒருவரைச் சிறையில் அடைத்துவைத்துத் தண்டித்தால் அவரின் மனநிலை எப்படி இருக்கும்?
அப்படி ஒரு மனநிலையில் கடந்த 37 ஆண்டுகளாக இருந்து நிரபராதி எனத் தற்போது நிரூபிக்கப்பட்ட நிலையில் சிறையிலிருந்து வெளி வந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் டுபோயிஸ்.
சரியாக 37 ஆண்டுகளுக்கு முன்பு 1985 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த ராபர்ட் டுபோயிஸ் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விடுதலையடைந்து சுதந்திரக் காற்றை சுவாசித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கிறது தம்பா என்ற அழகான நகரம். எப்போதும் அமைதியாக இருக்கும் தம்பா நகரம் அன்று வழக்கத்திற்கு மாறான சம்பவத்தை எதிர்கொண்டது. 1985 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 19 ஆம் தேதி இரவில் 19 வயது சிறுமி பார்பரா கிராம்ஸி தனது வேலை முடித்து வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை கட்டையால் தாக்கியுள்ளார். இரவில் பலத்த காயத்திற்குள்ளான கிராம்ஸ் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லவும்பட்டார்.
37 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் தனது வாழ்வின் பெரும்பகுதியை அழிக்கக் காத்திருக்கும் என அப்போது டுபோயிஸ் நினைத்திருக்க மாட்டார்.
ஒரு பல் மருத்துவரின் அலுவலகத்தின் பின் பிரேதமாக கிடந்த கிராம்ஸை கண்ட தோட்டக்காரர் ஒருவர் அருகில் இருந்த காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, 19 வயதான டுபோயிஸின் இல்லக் கதவைத் தட்டியது. ராபர்ட் டுபோயிஸின் கைகளில் அப்போது இருந்த காயம் அவரைக் குற்றவாளி என முத்திரை குத்துவதற்குக் காவல்துறைக்குப் போதுமானதாக இருந்தது.
சம்பவத்தின்போது சிறுமி கிராம்ஸ் தன்னைத் தற்காத்துக் கொள்ள டுபோயிஸின் கைகளில் கடித்ததால் ஏற்பட்ட காயம் என காவல்துறை அவரை சிறையில் அடைத்தது. தான் குற்றமற்றவன் எனும் டுபோயிஸின் குரல்கள் சிறைக்கதவுகளைத் தாண்டி யார் காதுகளையும் எட்டவே இல்லை.
காவல்துறை நம்பிய ஆதாரங்களின் அடிப்படையில் ஹில்ஸ்போரோ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. பின் அவரின் மேல்முறையீட்டில் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
நிரபராதிகள் எனக் கருதுவோருக்காக வாதாடும் "இன்னொசன்ஸ் ப்ராஜக்ட்" எனும் அமைப்பின் மூலம் மீண்டும் முறையீடு செய்யப்பட்ட மனுவால் வழக்கின் திசையே திரும்பியுள்ளது. இறந்த கிராம்ஸின் தடயங்களை முறையாக சோதனை செய்யவில்லை எனத் தெரிவித்த அந்த அமைப்பு மீண்டும் அறிவியல் முறைப்படி வழக்கை விசாரிக்கக் கோரியது.
சேகரித்து வைக்கப்பட்டிருந்த கிராம்ஸியின் தடயங்களைக் கொண்டு ராபர்ட் டுபோயிஸின் டிஎன்ஏ பரிசோதனைக்கு தயாரானது நீதிமன்றம்.
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட முடிவில் ராபர்ட் டுபோயிஸ் குற்றமற்றவர் என்றும் நடைபெற்ற கொலைச் சம்பவத்திற்கும் டுபோயிஸுக்கும் தொடர்பில்லை என்றும் தெரியவந்தது.
மேலும் கொலைக்குக் காரணமான நபரின் டிஎன்ஏ அமைப்பையும் காவல்துறை கைப்பற்றியது. எனினும், அது குறித்த தகவல்களை காவல்துறை வெளியிடவில்லை.
37 ஆண்டுகளுக்குப் பிறகு உறுதியான போராட்டத்தால் தன்னை நிரபராதி என ராபர்ட் டுபோயிஸ் நிரூபித்துள்ளார். வழக்கின் போக்கை மாற்றிய டிஎன்ஏ பரிசோதனை முடிவைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிமன்றம், " 37 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு தவறைச் சரிசெய்ய வேண்டிய நேரம் இது. திரு. டுபோயிஸிடம் முழு நீதி அமைப்பின் சார்பாகவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். அவர் இழந்த காலத்தை நாங்கள் அவருக்குத் திருப்பித் தர முடியாது. ஆனால் இந்த வழக்கை நாங்கள் அறிந்த தருணத்திலிருந்து, உண்மையை நிறுவ நடத்திய போராட்டத்தை பாராட்டி அவரை உடனடியாக விடுவிக்கிறோம்" என்றனர்.
செய்யாத குற்றத்திற்காகத் தனது வாழ்வின் பெரும்பகுதியை, 37 ஆண்டுகளைச் சிறையில் கழித்த ராபர்ட் டுபோயிஸ் தனது 56 ஆவது வயதில் தற்போது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
காலதாமதமான நீதி பல குற்றம்சாட்டப்பட்ட மனிதர்களின் வாழ்வின் பெரும் பகுதியை அழித்துவிடுகிறது. ஆனால் போராடிதான் அந்த நீதியையும் பெற வேண்டி இருக்கிறது என்பதற்குக் கண் முன் உள்ள மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ராபர்ட் டுபோயிஸ்!
No comments:
Post a Comment