
வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் என்று விஐபிக்கள் பலரும் கூடத் தப்ப முடியவில்லை. டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை மக்களைத் தாக்கும் அளவுக்கு மக்கள் பிரதிநிதிகளை இதுநாள் வரை கரோனா தொட்டுப் பார்க்கவில்லை.
ஆனால் திடீரென்று இரண்டு மக்களவை உறுப்பினர்களைக் கரோனா பாதித்திருப்பது டெல்டா மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவர்கள் இருவரும் கடந்த 30-ம் தேதி நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்க, கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்பதால் அதில் கலந்து கொண்ட மற்ற மக்கள் பிரதிநிதிகளும் தற்போது கலக்கம் அடைந்துள்ளனர்.
கடந்த முப்பதாம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்ட உருவாக்கம் குறித்த மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் காலையில் நாகப்பட்டினம், மாலையில் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் மக்கள் பிரதிநிதிகளும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு மாவட்டப் பிரிவினை சம்பந்தமான தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோரும் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இரண்டு இடங்களிலும் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட இருவரும் இரண்டு மேடைகளிலும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். இவர்களில் நேற்று முன்தினம் மாலையே செல்வராஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொண்டார். மிகவும் சோர்வாக இருப்பதாக அவர் கூறியதை அடுத்து, அவரைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் கூறினர். அதனால் நாகையில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினமே அவருக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. நேற்று அதன் முடிவு வந்ததில் அவருக்குக் கரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு அருகே அமர்ந்திருந்தவரான மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ. ராமலிங்கத்துக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனையடுத்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத் தனி அலுவலர் லலிதா தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இரண்டு கூட்டத்திலும் இரண்டு எம்.பிக்களுக்கு அருகேதான் அவரும் அமர்ந்திருந்தார். அதனால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணனும் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படி புதிய மாவட்டத்தின் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அந்தப் பகுதி மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
No comments:
Post a Comment