Latest News

உச்சம் தொட்ட எண்ணிக்கை; தமிழகத்தில் 4,343 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2,027 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 4,343 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 2,027 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது.

4,343 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 46.6 சதவீதத் தொற்று சென்னையில் (2,027 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 98,392-ல் சென்னையில் மட்டும் 62,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 63.6 சதவீதம் ஆகும். 56,021 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 57 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தை நெருங்கும் வகையில் 98 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் 98 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் கடந்த் நிலையில், இன்று சென்னையும் 62 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3,500 பேர் இதுவரை திரும்பியுள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 75 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,87,725.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1321-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,321 பேரில் சென்னையில் மட்டுமே 964 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 72.9 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 62,598-ல் 964 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3 % ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒன்றரை லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 1,80,298 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 16-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. உலக அளவில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி 22-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்திய அளவில் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு மீண்டும் வந்துள்ளது.

இன்றைய எண்ணிக்கை 98,392. அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 89,802 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 33,232 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 34 மாவட்டங்களில் 2,316 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் 4 மண்டலங்கள் 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டன. 1 மண்டலம் 4,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ராயபுரம் மண்டலம் 7,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. மொத்தம் 15 மண்டலங்களில் 13 மண்டலங்கள் 4 இலக்க எண்களைக் கடந்துள்ளன.

* தற்போது 48 அரசு ஆய்வகங்கள், 43 தனியார் ஆய்வகங்கள் என 91 ஆய்வகங்கள் உள்ளன.
இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:
* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 56,021.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 12,35,692.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 33,488.
* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 12.9 சதவீதம்.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 98,392.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,343.
* மொத்தம் (98,392) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 60,395 (61.3 %) / பெண்கள் 37,395 (38.7%)/ மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ( .05 %)
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,551 (58.7 %) பேர். பெண்கள் 1,792 (41.3 %) பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,095 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 56,021 பேர் (57 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 63 பேர் உயிரிழந்தனர். இதில் 26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,321 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 964 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 63 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 8 பேர் ஆவர். இது 12.6 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 5 பேர் ஆவர். உயிரிழந்ததில் ஆண்கள் 29 பேர் (46 %). பெண்கள் 34 (54 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 55 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 2,027 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.
இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 63.6 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 36.4 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 36 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 5,807 திருவள்ளூர் 4,167 மதுரை 3,133, காஞ்சிபுரம் 2,151, திருவண்ணாமலை 2,029, வேலூர் 1,521 கடலூர் 1,121, தூத்துக்குடி 1,028, ராமநாதபுரம் 1,069, சேலம் 1,034, கள்ளக்குறிச்சி 1,017, விழுப்புரம் 986, ராணிப்பேட்டை 891, திருநெல்வேலி 879, தேனி 801, திருச்சி 755,விருதுநகர் 614, கோவை 608, திண்டுக்கல் 601 ஆகியவை 500 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

37 மாவட்டங்களில் 2 மாவட்டங்களில் மட்டுமே தொற்று எண்ணிக்கை 100-க்குள் உள்ளன. 28 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 7 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. இன்று தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 75 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 3,547பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 4,617பேர் (4.6 %). இதில் ஆண் குழந்தைகள் 2378 பேர் (51.5 %) . பெண் குழந்தைகள் 2,239 பேர் (48.5 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 78,138 பேர் (79.4 %). இதில் ஆண்கள் 48,513 பேர். (62 %) பெண்கள் 29,603 பேர் (38 %). மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் (.02 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 11,294 பேர் (11.4 %). இதில் ஆண்கள் 6,953 பேர் (61.5 %). பெண்கள் 4,341 பேர் (38.5 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.