
சிதம்பரம்: தமிழக பள்ளி
கல்வித்துறையால் மூன்றாம் பருவத்திற்கு 6,7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு
புதிய பாடநூல்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில்
உள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் வருகிற ஜன.4- ம் தேதி
மாணவர்களுக்கு புதிய நூல்கள் வழங்கப்படவுள்ளது.
1-ம்
வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களும் கடந்த ஆண்டு
வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற அடிப்படையில் மேல்வகுப்புக்கு தேர்ச்சி
பெற்று வந்தனர். இதற்கு மாறாக இந்த கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம்
வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழகஅரசு
கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் மாணவர்களும்,
பெற்றோர்களும் கலக்கமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு வரை அனைவரும் தேர்ச்சி
என்பதால் ஆசிரியர்களும் நிம்மதியாக இருந்து வந்தனர். நிகழ் கல்வியாண்டு
முதல் அரசு பொதுத்தேர்வு என்பதால் 8-ம் வகுப்பு பயிலும் அனைத்து
மாணவர்களையும் தேர்ச்சி பெறச்செய்வது என்ற கவலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் காரணமாக பள்ளி திறப்பது 2 நாட்கள்
தள்ளிப்போய் உள்ளது. பள்ளி திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவ நூல்கள்
மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி முதல் முறையாக
8-ம் வகுப்பு பாடநூல்கள் வெளியிடப்படவுள்ளதால், 4-ம் தேதிக்கு பின்னர் தான்
ஆசிரியர்கள் புதிய பாடநூல் அடிப்படையில் கற்பித்தல் பணியை மேற்கொண்டு அரசு
பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.
8-ம்
வகுப்பு மூன்றாம் பருவ தமிழ் பாடநூலில் பாரதரத்னா எம்ஜிஆர், சட்டமேதை
அம்பேத்கர், அறிவுசால் ஓளவையார், அறத்தால் வருவதே இன்பம், மனித யந்திரம்
உள்ளிட்ட தலைப்புகளில் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கில பாடநூலில்
ராஜகோபாலாச்சாரியார், வங்கி சலான், அஞ்சலக சேமிப்பு விண்ணப்பம், ரயில்வே
முன்பதிவு விண்ணப்பங்கள் ஆகியவற்றை பூர்த்தி செய்வது, சைபர் சேப்டி
உள்ளிட்டவை குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன. அறிவியல் பாடநூலில்
இசைக்கருவிகள், ஓலி மாசுபட்டால் ஏற்படும் பாதிப்புகள், சந்திராயன்-1,
சந்திராயன்-2, மங்கள்யான், கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியவை பற்றி
இடம் பெற்றுள்ளன. நீரின் தன்மை, நீர் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல்,
வேளாண் செயல்முறைகள், காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள், காடு
வளர்ப்பு, உயிரினங்களை பாதுகாத்தல் உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment