அஸ்ஸாம் பிரச்னையை திசை திருப்ப பாஜக நடத்தும் நாடகம்.
எனவே நான் எனது கருத்துக்கு மன்னிப்பு கோர மாட்டேன் என காங்கிரஸ் முன்னாள்
தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின்
கொட்டா எனுமிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில்
அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கலந்துகொண்டார். அப்போது, பிரதமர்
நரேந்திர மோடி, ''மேக் இன் இந்தியா'' (இந்தியாவில் தயாரியுங்கள்) என்று
கூறி வந்தார்.
ஆனால் தற்போது ''ரேப் இன் இந்தியா'' (இந்தியாவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுங்கள்) எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாஜக எம்எல்ஏ, இளம்பெண்
ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு விபத்தும்
ஏற்பட்டது. ஆனால், பிரதமர் மோடி இதுகுறித்து எதுவும் கூறாமல் தொடர்ந்து
மௌனம் காத்து வருகிறார் என நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் வன்கொடுமை
சம்பவங்களை மையப்படுத்தி விமர்சித்தார்.
இதற்கு மத்திய
அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட பாஜக பெண் எம்பிக்கள் மற்றும் அனைவரும்
தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டிலுள்ள பெண்களை
ராகுல் அவமதித்துள்ளதாக குற்றம்சாட்டினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கோரப்போவதில்லை என ராகுல் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
ரேப்
இன் இந்தியா என நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரப்போவதில்லை.
தில்லியை பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரம் என பிரதமர் மோடி விமர்சித்த
காட்சி என்னிடம் உள்ளது. அதை அனைவரும் பார்க்கும் விதமாக எனது ட்விட்டர்
பக்கத்தில் பதிவிட உள்ளேன். அஸ்ஸாமில் நடைபெற்று வரும் போராட்டங்களை திசை
திருப்பும் விதமாகவே பாஜக வேண்டுமென்றே திட்டமிட்டு இப்பிரச்னையை
ஏற்படுத்தி நாடகமாடி வருகிறது என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment