குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத்
தெரிவித்து, நாளை (புதன்கிழமை) நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ்
கட்சி திட்டமிட்டுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தான்,
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து மத ரீதியிலான
அடக்குமுறைகளைத் தொடர்ந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத
சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும்
வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த
மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மக்களவையில் தாக்கல்
செய்தார். இதையடுத்து, மசோதா மீதான விவாதம் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி
இரவு 12 மணி வரை நீடித்தது.
இதைத் தொடர்ந்து இரவு 12.05 மணிக்கு மசோதா மீது
வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 311 உறுப்பினர்களின் ஆதரவுடன்
நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து, இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,
இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் நாளை போராட்டம்
நடத்துமாறு கட்சி நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கட்சியின் மாநிலத்
தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
"குடியுரிமை
சட்டத் திருத்த மசோதாவை நமது கட்சி எதிர்க்கிறது என்பது உங்களுக்குத்
தெரியும். இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இவ்விவகாரத்தில் நமது நிலைப்பாடு குறித்த விழிப்புணர்வை பெருமளவில்
ஏற்படுத்தி நமது முடிவுக்கு ஆதரவைத் திரட்ட வேண்டும்.
எனவே,
இந்த மசோதாவுக்கு எதிராக மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி சார்ந்த
அமைப்புகளை உள்ளடக்கி மாநில தலைமையகத்தில் நாளை போராட்டத்தை நடத்த
வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்
திருத்த மசோதா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் என
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ள நிலையில்,
காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment