நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் வீடியோ
கான்பரன்சிங் மூலமாக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2012-ல் தில்லியில் ஓடும்
பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு
ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து,
சிங்கப்பூர் மருத்துவமனை வரை சென்றும் அவர் சிகிச்சைப் பலனின்றி
உயிரிழந்தார்.
2012 நிர்பயா பாலியல்
வன்கொடுமை- கொலை வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு தூக்குத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங், தனக்கு
விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு
மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், வருகிற 17ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
இதற்கிடையே,
குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நிர்பயாவின்
பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கு இன்று தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில்
நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் நால்வரும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணை
இறுதியில், குற்றவாளி தொடர்ந்த மறுஆய்வு மனு வருகிற 17ம் தேதி விசாரணைக்கு
வரவிருப்பதால், அதற்கு மறுநாள் டிச.18ம் தேதி இந்த வழக்கு ஒத்தி
வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
இது தொடர்பாக
நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறுகையில், 'குற்றவாளிகளின் தூக்குத்
தண்டனையை நிறைவேற்ற நாங்கள் 7 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். இன்னும் ஒரு
வாரம் காத்திருக்கிறோம். டிச.18 அன்று, குற்றவாளிகளுக்கு தூக்கு
தண்டனைக்கான வாரண்ட் வரும் என எதிர்பார்க்கிறோம்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக,
நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று
குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது.
அதேசமயம், தனது ஒப்புதல் இல்லாமல் அந்த கருணை மனு அனுப்பப்பட்டதாக கூறி,
அதனை வினய் சா்மா திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment