மகாராஷ்டிரத்தில் நீர்ப்பாசனத் திட்ட முறைகேடு வழக்கில்
அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு எதிரான விசாரணை முடித்து
வைக்கப்பட்டதாக வெளியான தகவலை ஊழல் தடுப்பு ஆணையம் (ஏசிபி) மறுத்துள்ளது.
மகாராஷ்டிரத்தில்
பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்
அஜித் பவார் அம்மாநில துணை முதல்வராகப் பதவியேற்றார். அமலாக்கத் துறை
வழக்குகள் போன்ற அழுத்தங்கள் காரணமாக அவர் பாஜகவுக்கு ஆதரவு
தெரிவித்திருக்கலாம் என ஒரு தரப்பில் பேச்சுகள் எழுந்தது.
இந்நிலையில்,
நீர்ப்பாசனத் திட்ட முறைகேடு வழக்கில் அஜித் பவாருக்கு எதிரான விசாரணையை
ஏசிபி முடித்து வைத்ததாக ஊடகங்களில் தகவல்கள் கசிந்தன.
இதையடுத்து, ஏசிபி தலைவர் பரம்பீர் சிங்
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பாக
கிடைத்த புகார்களின்படி, சுமார் 2654 ஒப்பந்தங்களை விசாரித்து வருகிறோம்.
தற்போதைய வழக்குகள் 9 உட்பட மொத்தம் 45 விசாரணைகள் இன்று
முடித்துவைக்கப்பட்டது. இது இயல்பான நடைமுறைதான். ஆனால்,
முடித்துவைக்கப்பட்ட வழக்குகள் ஏதும் அஜித் பவாருக்கு தொடர்புடையது அல்ல என
என்னால் உறுதியளிக்க முடியும்" என்றார்.
முன்னதாக,
மகாராஷ்டிரத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றது. அப்போது துணை
முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார்
அவ்வப்போது நீர்வளத் துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அந்த
காலகட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிறைவேற்றப்பட்ட நீர்ப்பாசனத்
திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததிலும், அவற்றைச் செயல்படுத்தியதிலும் ரூ.
70,000 கோடி வரை முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.
No comments:
Post a Comment