Latest News

  

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்கள் தெளிவாக இல்லாத காரணத்தால் இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி இருவரின் தாயாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து திருநாவுக்கரசுவின் தாயார் லதா, சபரிராஜனனின் தாயார் பரிமளா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், பாலியல் வன்கொடுமை வழக்கை அதற்குரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும். குண்டர் சட்ட உத்தரவு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. குண்டர் சட்ட உத்தரவு குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.

எனவே, குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க உத்தரவிட வேண்டும், எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கானது, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.